இட்லி

This entry is part of 37 in the series 20030202_Issue

தேன்சிட்டு


கோபுரமாய் உயர்ந்து நிற்க,
தலை அமுக்கி
தடவிப் பார்த்தால்,
நுரைத்த கூட்டுக் கண்கள்
கூட்டமாய் கொக்கரிக்கும்!

இடை மெலிந்த சிமிழின்
இரு வட்ட இருக்கையில்
வெண்கம்பளம் விரித்து
நான்கு அடுக்கு விசிறியாக்கி
பதுங்கு குழியில் இட்டே,
ஒரு பல்லாங்குழி ஆட்டம்!

பறை அடித்து
உள்ளே துவங்கும்
மகா பாரதப் போர்!
சங்கின் நாதமென
‘கோ ‘ வென்ற சுருதி.
ஏதுமறியா இளம்பிள்ளையாகி
செந்தணலில் தவமிருக்கும்
மொளனச் சிமிழ்.

வாசல் திறந்து,
செயற்கை சாரல் தந்து
தடவி, தனியே எடுக்க
வெண்மலர்கள் தலை சிலுப்பி
தட்டில் குதித்து அமரும்,
குழம்புகளால் குளிப்பாட்டி
குழைத்தடித்து நாவில் இட்டால்
கடைசித் துகளும் தந்துவிடும்,
கதி மோட்சம்!

***

thenchittu@yahoo.com

Series Navigation