‘நன்றி-செய்ய நினைக்கலையே! ?

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

கவியோகி வேதம்


மலருமே சூல்கொள வந்தமரும்-ஒரு

..வண்டுக்குத் தேன்தந்து நன்றிசொல்லும்;

புலர்ந்தே யிருட்டை ஒழித்ததற்காய்-சேவல்

..பொளிந்த குரலிலே நன்றிசொல்லும்;

அடர்ந்தே வளர்ந்து மழைபொழிய-உதவும்

..அத்தனை ‘வேரு ‘க்கும் மேக-நன்றி;

தடவித் துணுக்குகள் நீக்குகிற-குருவிக்குத்

..தாடையை மூடா முதலைநன்றி!

கீழே விடுகிற நீருக்காய்-பனையின்

..கீற்றுதொறும் ‘கள் ‘தரும் உச்சநன்றி!

கூழைக் குடித்தே வயலிறங்கி-நம்வயிறு

..குளிர்விக்கும் ஏழைக்(கு)ஆர் நன்றி ‘செய் ‘தார் ? ?

ஆடுமாடு செய்யும் உதவிஎண்ணி-மனிதர்

..அனைவரும் ‘நல்லோராய் ‘ மாறலையே!

பாடாய்ப் படுத்தும் வயிற்றுக்குள்-அவற்றைப்

..பதுக்கும் அவலமும் தீரலையே!

தேகமெலாம் ‘நன்மை ‘ செயஎன்னும்-வாழையைத்

..தீவிர வாதி ‘எண்ணிப் ‘ பார்க்கலையே!

சோகம் பிறர்க்கு, ‘சுகம் ‘எனக்கு-என்கிற

..சுதந்த்ர அரசியலார் மாறலையே ?-
***
sakthia@eth.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்