ஏன் இந்த கண்ணீர் ?

This entry is part of 30 in the series 20030125_Issue

புஷ்பா கிறிஸ்ரி


அழுகிறாயா மனிதனே ?

இந்த சமூகம் உன்னை

அடிக்கலாம், உதைக்கலாம்

உன் வாழ்வைத் தாழ்த்தலாம்

உன்னை வீழ்த்தலாம்

காய்க்கும் மரம் கல்லடி படலாம்

அதற்காக காய்க்காமல் விடாது

நாய்க்கும் நல்ல குணம் உண்டு

வாயால் குரைத்தாலும், கடித்தாலும்

நாக்கால், நக்கும் எஜமானை

பார்க்கும் பார்வை நல்லதாகட்டும்

உன் கண்களில் ஒளி பிறக்கட்டும்

வாழ்த்துச் சொல்ல வாசலில்

காத்திருக்க ஒரு கூட்டம் வரும்

அதுவரை உன் துன்பங்களைப்

பொறுத்துக் கொள்

மனத்துத் தேடல்களை

அடி மனத்துள் தேக்கி வைத்து

முகத்தில் பொலிவைக் காட்டி

பிறரை நோக்கு

விரும்பும் உலகம் உன்னை,

பின் அரும்பும் அன்பு உன்னில்

நீ நினைத்ததைச் சாதிக்கலாம்

பொறுமை கொள்

பொங்கியெழும் கடலலை

கரையினுள் அடங்குகிறது..

அடக்கிக் கொள் உன்னை

மனத்தை மேம்படுத்து.

மகிழ்ச்சி பெறலாம்

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation