பசுமையான பொங்கல் நினைவுகள்

This entry is part of 29 in the series 20030112_Issue

புஷ்பா கிறிஸ்ரி


பசு மாட்டுச் சாணத்தோடு
களி மண்ணும் கலந்து சேர்த்து
ஆச்சியம்மா அழகாக
வீட்டின் முன் திடல் முற்றத்தில்
திண்ணை மொழுகி,
மண்ணைக் கூட்டிக்
கோலம் போட்டு
கரும்பு இருபுறம் கட்டி
புதுப்பானைக்கு பூக்கள் கட்டி
சந்தனம், குங்குமம் தடவி
புது அடுப்பில் பானை வைத்து
பாலைக் காய்ச்சிப்
பொங்க விட்டு,
பொங்கலோ பொங்கலென்று
புதுப் பச்சையரிசி கூட்டியே
பயறும் சேர்த்துப் போட்டு
சக்கரை, பழம், என்று
சகலதும் போட்டு
தலை வாழை இலை எடுத்து
தங்க மகன் எங்கள்
சூரிய தேவனுக்கு
மனத்து நன்றிகள் பொங்கிட
பொங்கல் படைத்து,
அள்ளித் தந்திட்ட
அன்பான உணவுடன்
ஆச்சியும், அப்பையாவும்
அன்பைக் கூட்டிச்
புத்தம் புதுசாய்
சேர்த்துத் தந்த
பட்டுச் சட்டையும்
கொஞ்சம் காசும், வாங்கி
பாசமாய் வாழ்ந்த நாட்கள்
வந்து போகின்றன மனதில்.
என் குழந்தைகள்,
இனி வரும் காலங்களில்
எனக்கென வரப் போகும்
பேரக்குழந்தைகள் என்று
வரும் நாட்கள் வரை என்
நினைவை விட்டு அகல மறுக்கும்
இனிய பொங்கல் நினைவுகள்..

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation