மகள்

This entry is part of 29 in the series 20030112_Issue

அபுல் கலாம் ஆசாத்


அகவை இவளுக் கைந்தினுங் கீழ்தான்
ஆயினும் நூறு முறையே – பல
தகவல் கேட்டுத் தலையைச் சாய்க்கும்
தினுசோ பாட அறையே!
அகமும் புறமும் ‘வால்’என் றழைக்கும்
அவளென் வானிற் பிறையே! – என்
மகளாய்ப் பிறந்து மனதைப் பூட்ட
மடிவளர் பாசச் சிறையே!

அக்கா ளின்மேல் அடுக்கிடு வாளே
யிரங் குற்றம் நித்தம் – தான்
சிக்கா திருக்கச் சிரித்து மழுப்பிச்
சிந்திடு வாளே முத்தம்
சுக்கா னிவளே கடைத்தெரு சென்றால்;
சுழிக்கும் முகத்தைச் சுற்றம் – அட
எக்கா ரணமோ இர்ண்டொரு நொடியில்
அவரைக் கவரும் கொற்றம்

எப்படிப் படித்தாள் இத்தனை பாடல்
‘எலி’யும் ‘நிலவு’ம் ‘லட்டு’ம் – நான்
தப்படி வைத்துத் தவிக்கின் றேனே
தலையில் கணினி குட்டும்
செப்படி செய்யும் குழந்தைப் பாட்டின்
சீரும் அசையும் சுவையும் – நாளை
அப்படிப் பாடல் இவள்தரு வாளா
இதயம் நிறையும் மட்டும் ?
—————————-

அபுல் கலாம் ஆசாத்
azad_ak@yahoo.com

Series Navigation