வெட்கமில்லா ஊரில் வெட்கமில்லை!

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

புகாரி, கனடா


கண்ணிருக்கா… ?
பெண்ணே கண்ணிருக்கா… ?
கண்ணுக்குள்ளே ஏதும்
கருத்திருக்கா… ?

நெஞ்சிருக்கா… ?
பெண்ணே நெஞ்சிருக்கா… ?
நெஞ்சுக்குள்ளே கொஞ்சம்
நெகிழ்விருக்கா… ?

சொல்லிவைத்தார்…!
நல்லோர் சொல்லிவைத்தார்…!
சொன்னதெல்லாம் உன்னைக்
காத்ததுண்டா… ?

பல்லிளித்தாய்…!
பெண்ணே பல்லிளித்தாய்…!
பாய்விரித்தாய் பிள்ளை
பெற்றெடுத்தாய்…!

பத்துரூபாய்…
உன்னைப் படுத்திவைக்க
பாழுலகம் உன்னைப்
படுக்கவைக்க…

கெட்டழிந்தாய்…!
பெண்ணே கெட்டழிந்தாய்
கட்டிலின்முன் காப்புரை
இட்டாலென்ன… ?

கர்ப்பப்பையில்…
பெண்ணே கத்தியைவை….
வெட்டியெறி பின்னர்
கெட்டுத்தொலை…!

ஒன்றிரண்டா…!
நாட்கள் ஒன்றிரண்டா…
பத்துமாதம் கொண்ட
ரத்தபந்தம்…!

மலம்-அல்லடி…!
பிள்ளை மலம்-அல்லடி…
மறுகணமே விட்டு
மறைவதற்கு…!

உயிரல்லவோ…!
ரத்த உறவல்லவோ…!
உனக்கெதற்கு இன்னும்
உயிரிருக்கு… ?

வாழைமரம்…!
பச்சை வாழைமரம்…
வாரிசுக்காய் தன்னுயிர்
விட்டுச்செல்லும்…!

மிருகங்களில்…!
காட்டு மிருகங்களில்…
மனிதரைப்போல் கெட்ட
மிருகமில்லை…!

தந்தையில்லை…!
பெற்ற தாயுமில்லை…!
குப்பைத்தொட்டி அள்ளித்
தாலாட்டுது…!

தாயைவிட…
தமிழ்த் தாயைவிட…
குப்பைத்தொட்டி நல்ல
கோயிலின்று…!

சாக்கடையே…
எங்கும் சாக்கடையே…
சாக்கடைதான் இந்தச்
சமுதாயமே…!

வெட்கவில்லை…!
யாரும் வெட்கவில்லை…!
வெட்கமில்லா ஊரில்
வெட்கமில்லை…!

*

தமிழகத் தெருக்களில் பெற்ற பிள்ளையை அனாதையாய் விட்டுவிட்டு ஓடும் பெண்கள் இன்றெல்லாம் பெருகிவிட்டனர் என்ற வேதனையின் தாக்கமே இக்கவிதை.

அன்புடன் புகாரி, கனடா
buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி