மாறிவிடு!

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

ரவி (சுவிஸ்)


காற்றில் அசைந்தாடுகிறது காண்
அந்த நாணல் புல்.
இயல்பாய்
அதன் நளினம் காண்
ரசனை வெளி நிரப்ப.
குழந்தையொன்று
அள்ளிவரும் இயல்பெல்லாம்
நாளும் பொழுதுமாய் தேய்கிறது காண்
என் பயிற்சிக் களத்தில்.
ஓ என் குழந்தையே
நீ இப்படி நட
இப்படிப் பேசு
இப்படி சாப்பிடு
இப்படி உடை அணி

வந்து இதற்குள் இருந்துவிடு.
சமூகம் ஒதுக்கித் தந்த வெளிக்குள்
குழந்தையை தேய்த்துத் தேய்த்து
பக்குவமாய்
திணித்துக் கொள்கிறேன் காண்
தந்தைப் பணி தீர்க்க.

கற்களையும் தடிகளையும்
முட்களையும்கூட
குழந்தை
சேர்த்துவந்து விளையாடுகிறது காண்
தன் ரசனைவெளி எறிந்து.
ஷசீ! இதென்ன வீட்டிற்குள் கஞ்சல் குப்பை
ஆஹா! பார் இந்தப் பூவை
அதன் அழகை!’
தேய்த்துத் தேய்த்து சாிக்கட்டிவிடுகிறேன் காண்
குழந்தையின் ரசனையை.
அதுவே இயல்பானதாய்
இயற்கையானதாய்
பிறப்போடு வந்ததுவாய்

ஓ என் பெண் குழந்தையே
இன்னுமொன்று.
எமது ரசனை மோந்து
இயற்கை மாறுவதில்லை.
ஆனால்
மற்றவர் ரசனைக்கு
நீ
மாறவேண்டும் காண்
மாறிவிடு!
அன்றேல்
நீ அழகே இல்லாதவள்!

– ரவி (சுவிஸ்)

rran@bluewin.ch

Series Navigation

ரவி, சுவிஸ்

ரவி, சுவிஸ்