தேடல்

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

ராமலக்ஷ்மி, பெங்களூர்.


என்னென்ன நம் தேவை
என்கின்ற கோணத்திலேயே
என்றைக்கும் சிந்தித்து
எப்படியோ ஒருமுடிவுக்கும் வந்து..

அதை அடைந்திடும் நோக்கம்
ஒன்றே வாழ்வாகிப் போனாற்போல்
துடிப்புடன் நாளதும் பொழுதும்
ஓயாமல் ஓடியாடி..

ஒருவழியாய் ஆசையது
நிறைவேறும் வேளைதனில்
தேடத்தான் வேண்டியிருக்கிறது
பலனாகக் கிடைத்ததா
துளியேனும் பரவசமென்று!

***

என்னென்ன தேவையில்லை
எனத் தீர்மானித்து
ஒருதெளிவாய் வாழ்கின்ற
வகையினருக்கு மட்டுமின்றி..

இதுயிதுவே தேவையென
எல்லைகள்
வகுத்துக் கொள்ளாமல்
விடிகின்ற காலைகளை
நன்றிப் புன்னகைசிந்தி
எதிர்கொள்வது போலவே
வருகின்ற வளர்ச்சிகளைச்
சந்தித்தவராய்
செய்யும் பணிகளிலே
கவனத்தைக் குவித்துத்
திறம்பட முடிப்பதையே
பேரானந்தமாய்
உணர்பவருக்கும்..

தேடாமலேதான்
கிடைத்து விடுகிறதோ
நம்மில் பலருக்கும்
தீராத் தேவையாகவே
இருந்துவரும் அந்தப்
பரிபூரண மனநிறைவு?

*** *** ***

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி

தேடல்

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

தமிழ்மகன்



கிழவி அநாவசியத்துக்குப் பயந்தாள். நகரத்தின் வேகம் அவளை மூச்சுத் திணற வைத்தது. அந்த இடத்தில் இவ்வளவு நெரிசலையும் வாகனங்களின் அடர்த்தியையும் அவள் எதிர்பார்க்கவில்லை.

குருவியூர் நகரத்தைப் பற்றி சமீபத்தில் தான் குப்பம்மா மூலம் கேள்விப்பட்டிருந்தாள்.

“ஏண்டியம்மா உம்புள்ள அங்கதான் காய்கறிக் கடை வெச்சிருக்கான்… என்னடா எப்படியிருக்கேன்னு விசாரிக்கலாம்னு பார்த்தா அதுக்குள்ளே டபாஞ்சிட்டான்”

கிழவிக்கு ஜெயராமனை நேரிலேயே பார்த்துவிட்டது போல் இருந்தது. “நெசமாவா?” என்றாள்.

“ஐய… உங்கிóட்ட பொய் சொல்லித்தான் மெத்த வூடு கட்டப்போறேன்… மெய்தான்றேன்…”

“எங்க இருக்குது அந்தக் குருவியூரு?” என்று விசாரித்தாள் கிழவி.

குப்பம்மாள் வழித்தடம், இறங்க வேண்டிய ஸ்டாபóபிங் எல்லாவற்றையும் அக்கறையாகச் சொல்லி பஸ் ஸ்டாண்ட் வரை வந்து வழியனுப்பியும் வைத்தாள்.

பஸ்ûஸ விட்டு இறங்கியதும் நகரத்து நெரிசலைப் பார்த்து மிகவும் குழம்பிப் போனாள். யாரை, எப்படி விசாரிப்பது என்று புரியாமல் இரண்டு முறை குடுமியை அவிழ்த்து முடிந்து கொண்டு பிரமித்து நின்றாள். முதல் அடியை எந்தத் திசை நோக்கி வைக்கலாம் என்பது அவளுக்குப் புரியவில்லை.

வாகனங்களின் புயல் வேகங்களுக்குப் பயந்து பின் வாங்கி, ஒரு டீக்கடை ஓரம் அடித்துச் செல்லப்பட்டாள். அங்கே அனல் பறக்க டீ குடித்துக் கொண்டிருந்தவனை விவரம் கேட்க எத்தனித்தாள்.

அவன் ஒரே வாயாக டீயைச் சாய்த்துக் கொண்டு, “சில்ற இல்ல…” என்று சொல்லிவிட்டு, வேகமாக ஒரு பஸ்ûஸ நோக்கி ஓடினான்.

கிழவிக்கு அவன் சொன்னது கொஞ்ச நேரத்துக்குப் புரியவே இல்லை.

“ஜெயராமா நா உனக்கு என்ன பாவம்டா செஞ்சேன்…. ‘என்று ஹீனமாக முனகிக் கொண்டு ஏதோ தீர்மானத்தோடு நடக்க ஆரம்பித்தாள்.

காலும், கண்ணும் துவண்டு போகும் வரை நடந்தாள். அவளுக்கு எல்லாமே ஜெயராமனாகத் தெரிந்தது. சிலரைச் சற்றே திடுக்கிட்டு “டேய்’ என்று கூப்பிட்டு விடும் கடைசித் தருணத்தில் சுதாரித்தாள். அவர்களெல்லாம் ஜெயராமன்கள் இல்லை.

பசி மயக்கம் கீழே தள்ளப் பார்த்தது. இருக்கிற கொஞ்சம் சில்லறையில் எதையாவது வாங்கிச் சாப்பிடத் துணிவில்லை.

சாப்பிடலாமா? வேண்டாமா? என்று யோசித்து யோசித்தே சோர்ந்து போனாள்.

சுருண்டு, ஒரு இடத்தில் உட்கார்ந்தே விட்டாள். உச்சி வெய்யில் பிளந்தது. காலையில் ஒரு வாய் கூழாவது குடித்திருந்தால் அவளால் சமாளித்திருக்க முடியும்.

மரத்து நிழலில் அரைமணி நேரம் உட்கார்ந்ததில் கொஞ்சம் சாப்பிட்ட திருப்தி.

புடவையிலிருந்த கிழிசலைப் பார்த்து அலுத்துக் கொண்டு, கிழிந்த இரு பகுதியையும் சேர்த்து முடிப் போட்டுக் கொண்டாள். இந்தக் கோலத்தில் பையன் நம்மைப் பார்த்தால் துடித்துப் போய் விடுவான்.

“தேய்… கட்டிக்கிறதுக்கு வேற புடவையே கிடைக்கலையா உனக்கு?”

“நீ போயிட்டதுக்கப்புறம் நெலம ரொம்ப மோசமாயிடுச்சு நைனா.”

“இந்தப் புடவை புடிச்சிருக்குதா பாரு.”

“ம்…”

“இந்த டிசைன்ல ரெண்டு புடவ குடுப்பா”

மரத்தின் நிழல் நழுவி வேறு பக்கம் போயிருந்தது.

கிழவி மீது வெயில்… கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தாள்.

ஜெயராமனைப் பார்த்துவிட்டால் நமக்கு ஒரு குறைவும் இல்லை. அந்தச் சிறுக்கியும் கூடதான் இருப்பாள்…. அவளாலதான் எல்லாமே… அடியோட மாத்திப்புட்டா… ச்

எழுந்து பக்கத்திலிருந்த டீக்கடைக்குப் போய், “பன்னு ஒண்ணு குடுக்குறியாப்பா?” என்றாள்.

“போ…போ… வேற வேலையில்ல” என்று விரட்டினான் கடைக்காரன்.

அவன் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து, அவசரமாக, “துட்டு இருக்குதுப்பா’ என்று முந்தானை முடிச்சை அவிழ்த்தாள்.

கடைக்காரன் ஒரு மாதிரியாக ஏறிட்டுப் பார்த்துவிட்டு, பெரிய கண்ணாடி புட்டியைத் திறந்து பன்}ஐ எடுத்த போது அதிலிருந்து ஈயொன்று அவசரமாகத் தப்பியது.

ஞாபகமாகப் பன்னீர்ப் புகையிலை வாங்கி கடைவாய்ப் பற்களில் இடுக்கிக் கொண்டாள். அதுதான் வைத்தியம். பசிக்கிறதே என்று அடிக்கடி பன் சாப்பிட முடியுமா?

கிழவி புதுத் தெம்புடன் தேட ஆரம்பித்தாள். லாரிகள் ஏடாகூடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் தயங்கி நின்றாள். ஜெயராமன் இங்குதான் எங்கோ ஒளிந்திருப்பதாக நினைத்து லாரிகளுக்கு இடையில் கூர்மையாகத் தேடினாள். லாரி எடை தளத்தில் நின்று கிழநரி மாதிரி சுற்றிலும் பார்த்தாள்.

கண்ணாடி அறையில் இருந்து ஒருவன் அதட்டினான். “”ஏய்… கெழவி… இன்னா? உன்னை எடை போடணுமா?” என்றான்.

கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை. “”எம்புள்ள ஜெயராமன ஒரு மாசமா காணலப்பா…” என்றாள்.
ஒரு கிளீனர் பையன் ஆவேசமாக வெளியே வந்து, “”இது நாப்பது டன் எடை போடற மிஷின்… கொஞ்ச தூரம் போனா நடராஜா தியேட்டர் வரும். அங்கே போய் நாலணா போட்டு உன் எடையைக் கண்டுக்கலாம்…” என்று சொல்லிவிட்டு ஓஹோவென்று சிரித்தான்.

கிழவி பதிலுக்கு, “காய்கறிக்கடை வெச்சிருக்கான் தம்பி… ஜெயராமன்னு பேரு…” என்றாள்.

“த்தேய்… போன்னா போவியா, உன்னை மாதிரி ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் பார்க்கறேன்… பிச்சை எடுக்கறதுல இதுலாம் ஒரு தினுசு” என்றபடி கிழவியைத் தரதரவென்று இழுத்து வந்து நடு ரோட்டில் தள்ளினான்.

ஆத்திரமும், இயலாமையும் சேர்ந்து கிழவி அழ ஆரம்பித்தாள். ரோட்டில் போய்க் கொண்டிருந்த ஒருவனை நிற்க வைத்து, “என்னைப் போய் பிச்சைக்காரினு சொல்றானுங்களே… அவனுக்கென்ன கண்ணு அவிஞ்சிப் போச்சா? எம் மூச்சியப் பாரு நா பிச்சைக்காரியா? என் காதைப் பாரு… ம் தெரிதில்லை…?” என்றாள்.
அவள் காதில் கம்மல் மாட்டும் இடத்தில் இருந்த பிரம்மாண்டமான துளையைப் பார்த்துவிட்டு, அவன் சற்றே திகைத்தாற்போல், “”என்னது?” என்றான்.

“”எங் காதைப் பார்த்தா தெரியலை? எவ்வளவு ஓட்டை கிடக்கு… கொப்பு போட்டிருந்தேன். நடுக்காது போட்டிருந்தேன். தண்டட்டி போட்டிருந்தேன். மூக்குல ரெண்டு பேஸ்ரி… எல்லாந்தா போட்டிருந்தேன். குடிகார ஆமóóபளை எல்லாத்தையும் அழிச்சிட்டு சேர வேண்டிய எடத்துக்குப் போய் சேர்ந்துட்டான்” என்றபடி ஒரு கட்டத்தில் அழ ஆரம்பிக்கவே, “”எனக்கு டயமாச்சி” என்று அவளிடமிருந்து கையை உதறிக் கொண்டு நழுவினான் அவன்.

கத்தரிக்காய் கூடையைத் தூக்கிக் கொண்டு, நடையில் கட்டுப்படாத ஒருவித மாரத்தான் ஓட்டத்தில் போய்க் கொண்டிருந்தான் ஜெயராமன். அவனை ஒட்டி கொஞ்சம் ஓட்டம், கொஞ்சம் நடை என்று மாறி, மாறி வந்து கொண்டிருந்தாள் ராசாத்தி. ஜெயராமனை முதுகில் சீண்டி, “”அங்க பாருங்க உங்கம்மா…” லாரி ஷெட் பக்கம் கையைக் காட்டினாள்.

ஜெயரான் திரும்பிப் பார்த்து “தெரியும்… பேசாம வா” என்றான்.


tamilmagan2000@gmail.com

Series Navigation

தமிழ்மகன்

தமிழ்மகன்

தேடல்

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

பொன்ஸ்


அரைவட்ட அறையின்
ஒவ்வொரு
திக்கிலிருந்தும்
குத்திக் கொண்டு
நிற்கும்
ஈட்டி போல,
பதில் தெரியாக் கேள்விகளின்
இடையில் நான்…

எல்லாக் கேள்விகளுக்கும்
பதில்கள்
கண்ட பின்
மேலும் கேள்விகள்

இரவு
செல்லச் செல்ல
மினுமினுக்கும்
நட்சத்திரக் கூட்டம் போல
ஒவ்வொன்றாய்
வரும் கேள்விகளில்
விடியல் தேடி
மொத்தமாய்த்
தொலைந்து போகிறேன்

—————————–
poorna.rajaraman@gmail.com

Series Navigation

பொன்ஸ்

பொன்ஸ்

தேடல்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

மாது


‘Janet Jackson Breast ‘ என்று வலையில் தட்டச்சி தன் காலைப் பொழுதை துவங்கினான் ரவி. இதே

போன்று வலையில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தேடல்களுடன் தன் தேடலும்

வலம் வந்து கொண்டிருக்கும் என்று எண்ணிப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ரேவதியின் மேல் சற்று

கோபமாக இருந்தாலும் ‘அவள் என்ன செய்வாள் பாவம் ‘ என்று கோபத்தை அடக்கிக் கொண்டான்.

—–ooooooo000oooooo——–

‘ரவி டி.வி. பாத்தது போதும், போய் குட்டிக்கு டயபர் வாங்கிண்டு வா….. ‘. சூப்பர் பெளல்

ஆட்டத்தில் இரண்டறக் கலந்து ‘ஓடுறா… ஒடு ‘ என்று கத்திக் கொண்டிருந்த ரவியை விரட்டினாள்

ரேவதி.

‘ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான மொத்தமா வாங்கினோம், அதுக்குள்ள தீந்து போச்சா ‘ என்று

டயபர் கணக்கு கேட்டு வெளியே போகாமல் டபாய்க்கப் பார்த்தான் ரவி.

‘நானா எடுத்துக் போட்டுண்டேன், பாவம் ஒருவாரமா உடம்பு சரியில்ல, கழிஞ்சுண்டே

இருக்கா….ப்ளீஸ் போய் வாங்கிண்டு வாயேன் ‘ எரிச்சலுடன் கெஞ்சினாள் ரேவதி.

அவளையே போய் வாங்கிக் கொள்ள சொன்னால் கடுப்பாகிவிடுவாள் என்று உணர்ந்த ரவி, ‘சரி ஹாஃப்

டைம் போது போய் வாங்கிண்டு வரேன், போறுமா ‘ என்று தற்காலிகமாக ரேவதியின் வாயை

அடைத்தான்.

ஆட்ட இடைவேளையின் போது வெளியே கிளம்பிய ரவி, வீதியில் கார் நடமாட்டமே இல்லாததைப்

பார்த்து பத்து நிமிடத்திற்குள் திரும்பி விடலாம் என்று மனதிற்குள் மகிழ்ந்து கொண்டான்.

ரவியின் போதாத நேரம், மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்த காருக்கு பின்னால் போய் மாட்டிக்

கொண்டான். ‘நம்ப ஊரா இருந்தா, மஞ்ச கோடாவது, வெள்ள கோடாவதுன்னு சைடு வாங்கிண்டு

போயிண்டே இருக்கலாம்….கெழம் எங்க போய் திரும்ப போறதொ, கடசீ வரைக்கும், இது

பின்னாடியே போயாகனும்….கெழவியயெல்லாம் ஏன் கார் ஒட்ட விடறாங்க ‘ என்று திட்டியவாறு

கிழவியின் கார் பின்னால் மெதுவாகப் போய்க்கொண்டிருந்தான்.

கடையை அடைந்தவுடன், காரை நிறுத்திவிட்டு வேக வேகமாக ஒடி டயபரை எடுத்துக்கொண்டு, ’10

பொருள்களுக்கு குறைவாக ‘ என்று எழுதியிருந்த வரிசைக்குள் வேகமாக நுழைந்தான். கெட்ட நேரம்

அங்கேயும் துரத்தியது. பதினைந்து செண்ட் அதிகம் வாங்கியதற்காக ஒரு அம்மணி கடை

ஊழியருடன் விவாதம் செய்து கொண்டிருந்தாள். ரவிக்கு தன் பையிலிருந்து காசை எடுத்து அந்த

அம்மணியிடம் தூக்கி எறிந்து விடலாம் என்று கோபம் வந்தது.

கிட்டே சென்ற ரவியை போலிப் புன்னகையுடன் நலம் விசாரித்தார் கடை ஊழியர். ‘என்ன நம்ப டாம்

வெற்றி பெற்று விடுமா ‘ என்ற கேள்விக்கு ‘சொல்ல முடியாது ‘ என்ற ரவியின் பதில் கடை ஊழியருக்கு

மகிழ்ச்சி அளிக்கவில்லை.

—–ooooooo000oooooo——–

காலையில் அலுவலகம் வந்த ரவியிடம் எல்லோரும் ‘பாத்தியா…பாத்தியா ‘ என்று கேட்டார்கள்.

‘பின்ன….நம்ம டாம் ஆடுது, பாக்காம அதவிட வெற என்ன வேல ‘

‘விளயாட்ட யார் கேட்டா, டிம்பர்லேக் ஜானட் ஜாக்ஸன் துணிய புடிச்சு இழுத்தத பாத்தியா ‘

ரவி விழித்தான்.

‘போச்சு போ….டேவும் நீயும் மாத்திரம் தான் பாக்கல, ஒரு சூப்பர் ஸீன தவற விட்டுட்டாங்க. அதவிட

வேற என்ன முக்கிய வேல உங்களுக்கு ‘

வாழ்க்கையில் எவ்வளவோ இழந்தாச்சு, அத்தோடு இதுவும் ஒன்று என்று மனதைத் தேற்றிக்

கொண்டான். மனது கேட்கவில்லை. வலையில் நிச்சயம் வந்திருக்கும் என்று தேடினான். விரிவாக

எழுதியிருந்தார்கள், ஒரு படமும் கண்ணில் படவில்லை.

தொலைபேசி மணி அடித்தது.

‘ரவி, பர்மிஷன் சொல்லிட்டு வரயா, குட்டிக்கு லூஸ் மோஷன் நிக்கவேயில்ல. உடம்பு வேற லேசா

சுடறது ‘.

‘போன வாரம் போயிருந்த போது, டெஸ்ட் பண்ணாளே அந்த ரிஸல்ட் என்னாச்சுன்னு கேட்டு

தெரிஞ்சுண்டயா ‘

‘ட்ரை பண்ணேன் ரவி…அந்த டாக்டரயோ, நர்ஸயோ பிடிக்கவே முடியல. இன்னிக்கு போனா கேட்டு

தெரிஞ்சுக்கலாம் ‘

இன்னொரு கார் வாங்க வேண்டும். இந்த மாசம் வேலை போகாவிட்டால் அல்லது போன வாரம் சென்ற

வேலை கிடைத்துவிட்டால் நிச்சயம் இரண்டாவது கார் வாங்க வேண்டும் என்று நினைத்துக்

கொண்டான். ஒரு பழைய காராவது வாங்க வேண்டும். ரேவதியே குழந்தையை டாக்டரிடம் கூட்டிக்

கொண்டு போகலாம்.ஒவ்வொரு தடவையும் மானேஜனிடம் இளித்துக் கொண்டு நிற்க முடியாது.

போகிற வேலை சீக்கிரம் போய் விடும்.

‘சரி….லன்ச்ல சொல்லிட்டு வந்துடறேன் ‘

மறுபடியும் தொலைபேசி.

‘ராவி, காண்ட்ராக்ட் வேல ஏதாவது வந்தா சொல்லட்டுமா ‘ வேலைத் தரகன்.

‘ஏன், போன வாரம் நான் போன இடம் என்னாச்சு ‘

‘உள்ளுக்குள்ளயே வேற டிபார்ட்மெண்ட்டிலிருந்து ஆள எடுத்துட்டாங்களாம் ‘ பசப்பினான்.

—–ooooooo000oooooo——–

டொக்….டொக்….டொக்…….

பின்னாடி வந்து தட்டினான் மானேஜன்.

‘ராவி…..உனக்கு டைம் கிடைக்கும் போது ரூமுக்கு வறியா ‘

அது என்ன ‘டைம் கிடைக்கும் போது ‘ – ரூமுக்கு வான்னு சொல்ல வேண்டியது தானே.

திரையிலிருந்த தன் ஜானட் ஜாக்ஸன் தேடலை மறைத்துக் கொண்டு, ‘சரி…உடனே வருகிறேன் ‘

என்றான்.

ரவி என்ற பெயரை ஏன் இவ்வளவு கொலை செய்கிறார்கள் என்று அவனுக்குப் புரிந்ததேயில்லை.

வெங்கடாசலபதி என்றோ லஷ்மிநாராயணன் என்றோ இருந்தால் போனா போகிறதென்று ஒத்துக்

கொள்ளலாம். நான்கெழுத்து ‘ரவி ‘ சொல்வதில் என்ன கஷ்டம். புரியவில்லை. பக்கத்து சீட்

பிரெஞ்சுக்காரன் ஜீனும் (ழான் ? ஏதோ ஒன்று) தன்னைப் பற்றி இப்படித்தான் நினைத்துக்

கொண்டிருப்பானொ என்று எண்ணிக் கொண்டே மானெஜன் அறை நோக்கிச் சென்றான்.

‘எதுக்குக் கூப்பிடறானோ, இன்னிக்கு திங்கக் கிழம ஆச்சே, திங்கக் கிழம யாரையும் வேலய விட்டு

தூக்க மாட்டாளே ‘ என்ற எண்ணம் ஓடியது.

‘ராவி, நீ டிஸைன் பண்ண ஸ்க்ரீன்ல கொஞ்சம் கலர் மாத்தனும். மார்க்கெட்டிங்

டிபார்ட்மெண்டிலிருந்து இப்போதுதான் ஈ-மெயில் வந்தது. சீக்கிரம் முடிச்சுடு ‘

‘ஷ்யுர்….ஆனா……குழந்தைக்கு உடம்பு சரியில்ல, லன்ச் டைம்ல டாக்டர்ட்ட கூட்டிட்டு போகனும் ‘

என்று இழுத்தான்.

‘ஓகே….போயிட்டு வந்து முடிச்சு கொடுத்துடு…இன்னிக்கு சாயந்தரந்துக்குள்ள தரேன்னு

சொல்லியிருக்கேன். உன் குழந்தை பேர் என்ன ? ‘

‘ப்ரீத்தி ‘

‘ப்ரீட்டை….ஸ்வீட் நேம் ‘

—–ooooooo000oooooo——–

‘டாக்டர், குழந்தைக்கு ரெண்டு மூணு நாளா உடம்பு சரியில்ல. லூஸ் மோஷன் வேற ‘ என்றாள் ரேவதி

‘மோஷன் எப்படி போறது ‘

‘கொஞ்சம் திப்பி திப்பியா இருக்கு டாக்டர் ‘

‘சாப்பிட என்ன கொடுக்குறீங்க ‘

‘தாய்ப்பால் தான் டாக்டர் ‘

‘உம்…..போன வாரம் செஞ்ச ரிஸல்ட் நேத்துத்தான் வந்தது. பால் அலர்ஜி இருக்குமோன்னு

சந்தேகமா இருக்கு. பயப்படறத்துக்கு ஒன்னும் இல்ல. எதுக்கும் கொஞ்ச நாளைக்கு தாய்ப்பால்

கொடுக்கறதயும் நிறுத்தி வையுங்க. பால வெளில எடுத்துடுங்க, இல்லாட்டி வலிக்கும் ‘.

—–ooooooo000oooooo——–

அலுவலகத்திற்கு திரும்பும் போது இரண்டு மணி ஆகிவிட்டது.

‘ராவி, எங்க போயிட்ட…ஜானட் ஜாக்ஸனோட படத்த தேடிக் கண்டுபிடிச்சுட்டேன். க்ளோசப் ஷாட்.

சூப்பராத் தெரியுது. என்னோட க்யூபுக்கு வா காட்டறேன் ‘ என்று ரகசியமாக முணு முணுத்தான் டேவ்.

‘எங்க காட்டு பாக்கலாம் ‘

டேவின் பின்னால் சென்றான் ரவி.

* * *

சுட்டிகள்:

http://50.lycos.com/020404.asp

http://www.superbowl.com

Series Navigation

மாது

மாது

தேடல்…

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

ஆ. மணவழகன்


இனிமேலும்
மறைக்கக் கூடாது,
மனதோடு மன்றாடியதில்
கொஞ்சம்…

இன்றாவது
சொல்லிவிட வேண்டும்,
எண்ணி ஏமாந்ததில்
கொஞ்சம்…

இன்றைக்கு ஒருநாள்
பேசாதிருக்க வேண்டுமென்று
சொல்லிவிட்டுப்
பேசித்தீர்த்ததில்
கொஞ்சம்…

மனதால் அவள் நினைவை
மறக்க நினைத்து
மன்றாடித் தோற்ற மகிழ்வில்
கோஞ்சம்…

மனதால் அழும்பொழுது,
மடி ஒன்று தேடும் பொழுது
இன்பமான அவள் நினைவு
என்முன்னே தோன்றியதில்
கொஞ்சம்…

அவள் இல்லாத இருக்கையை
இதமாய்த் தொட்டுப் பார்த்து
இன்பம் கண்டதில் கொஞ்சம்…

ஆசையாய்ப் பேச
அடிமனதில் ஆசை இருந்தும்,
வெறுத்துப் பேசி,
வேடிக்கைப் பார்த்ததில்
கொஞ்சம்…

அவள் கவிதைக்குள்
நான் வாழ்கிறேனோ!!
கர்வப்பட்டதில்
கொஞ்சம்…

அவள்
கவிதை வரிகளுக்கு
நான்
வாழ்க்கைப் பட்டுவிட்டேனோ!!
வருந்தியதில்
கொஞ்சம்…

இப்படிச்
சிறுகச் சிறுகச் சேர்த்ததில்
தெரிந்து கொண்டேன்,
என் முகவரிக்கான
முதல் எழுத்தை…!!!

a_manavazhahan@hotmail.com

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்

தேடல்

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

பிரியா. ஆர். சி. …


தவிப்பு சுகமானதுதான்
முடிவில் மகிழ்ச்சி நிச்சயமென்றால்
பிரிவு சுகமானதுதான்
மீண்டும் சந்திப்பு உறுதியென்றால்
அழுகை சுகமானதுதான்
தோள் சாய்த்து தேற்ற நட்பு உண்டென்றால்
தோல்வியும் சுகமானதுதான்
ஜெயித்தவர் நமக்கு பிடித்தவரென்றால்
வாழ்க்கையில் அனைத்துமே சுகமானதுதான்
தோல்விகளை வெற்றிக்கு தோனியாக
துன்பங்களை இன்பங்களுக்கு தூண்டுகோளாக
வறுமையை வளமைக்கு வழிகாட்டியாக
அழுகையை ஆனந்தத்தின் அச்சாணியாக
மாற்ற கற்றுக்கொண்டால்…
மாற்றுவது எப்படி ?
அந்த தேடல் கூட சுகமானதுதான்!!

rcpriya@yahoo.com

Series Navigation

பிரியா. ஆர். சி. ...

பிரியா. ஆர். சி. ...

தேடல்..

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

கவியோகி வேதம்


‘தேடல் ‘எனும்-சொல் யிருப்பதால்தான்-யிந்தத்
..தேகம் நிலைத்து நிற்கிறது.
தேடும் பொருளும் ஒளிவதனால்-யிந்தத்
‘.. ‘தேட்டை ‘ தொடர்ந்து நடக்கிறது.

குழந்தை வயதில் ‘கிலுகிலுப்பை ‘-ஒலியே
..கொஞ்சும் மகிழ்வைத் தருகிறது.
அழுகை மறைய, அதன்உதட்டில்-சிரிப்பின்
..ஆடல் ‘தேடி ‘ வருகிறது.

படிக்கும் வயதில் ‘தேடுகிற ‘-அறிவே
..பணத்தின் சுகத்தைக் கொடுக்கிறது!
துடிக்கும் பருவத் தேடலதோ,-மனத்தைத்
..தொலைத்து வாழ்வைக் கெடுக்கிறது!

தீயின் தேடல் ஒழுங்கில்தான்-நன்மை,
.. ‘தேசு ‘,யாவும் ஒளிர்கிறது!
பாயும் புலியாய் ‘நாக்கு ‘இருந்தால்,-நெஞ்சில்
.. பள்ளம் தேடிக் கவிழ்க்கிறது!

வாழ்வின் ‘தேடல் ‘ ஒளியுடன்தான்!-யிதனை
..மாயை, அழகாய் மறைக்கவில்லை ?
தாழ்வை நோக்கிப் போகாமல்,-அதோ!
.. ‘சக்தி ‘சொல்வ(து) உறைக்கவில்லை

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்

தேடல்

This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue

நீல.பத்மநாபன்


வெளியில் கார் ஹாரன் ஒலி கேட்டது போலிருந்தது. அதோடு இரும்புக் கேட்டில் யாரோ ‘ணங் ‘ ‘ணங் ‘ என்று தட்டும் ஓசை.

மணி திடுக்கிட்டுக் கண்விழித்தான். மனசுக்குள் ஒரு எரிச்சல்….இன்றும் நேற்று போல் தானா ? இதென்ன நியூசன்ஸ் ‘ இந்த அகால வேளையில் இப்படி வந்து கதவைத் தட்டி எழுப்பும் அளவுக்கு அவசரக் காரியம் என்னமோ….. ‘

மீண்டும் காரின் ஹாரன்.

‘ணங் ‘

‘ணங் ‘

நெஞ்சின் மீது பாம்பாய்ப் பற்றிக்கிடந்த நிர்மலாவின் கரத்தை எடுத்து விலக்கிவிட்டு, அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். கீழே பாயில் குறுக்கும் நெடுக்குமாய்க் கிடந்து நித்திரை கொள்ளும் குழந்தைகளை மிதித்து விடாதிருக்க சிரமப் பட்டவாறு கவனமாய் நடந்து, ரோட்டைப் பார்த்திருந்த ஜன்னல் கதவின் அருகில் செல்வதற்குள் காரின் ஹாரனும், ‘ணங் ‘ ‘ணங் ‘கும் பலமுறை சப்தித்து அடங்கிவிட்டன.

ஜன்னல் கதவைத் தள்ளித் திறந்தான். சாக்கடை வாடைக் காற்று உள்ளே அவசர அவசரமாய் ஓடிவந்தது. வெளிக்கேட்டின் முன் ஒரு டாக்ஸி நிற்பது தெரு விளக்கின் மங்கிய ஒளியில் தெரிய வருகிறது. காருக்குள் நிழல் கோடுகளாய், நிறைய மனிதத் தலைகள். கேட்டின்முன் ஒருவன்.

‘என்ன வேணும் ? ‘

முற்றத்தைத் தாண்டி வெளிகேட்டின் அருகில் நிற்கும் அவனுக்கு கேட்கவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, தன் எரிச்சலை முழுதும் கொட்டித் தீர்க்க–வெளிப்பிரகடனம் பண்ண வேண்டுமென்றே ஒரு வேகத்தில் உரக்க சத்தம் போட்டுக் கேட்டான்.

இருளில், மணி நிற்பது எங்கே என்று சரிவர கேட்டின் முன் நிற்பவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இருந்தும் குரல் வந்த திசை நோக்கி ‘காமாட்சி வீடு இதுதானே ? ‘ என்று கேட்டான்.

மணிக்குக் குபீரென்று ரத்தம் தலைக்கேறி விட்டது போல் ஒரு உணர்வு.

‘இல்லை ‘.

‘இந்த ரோடில் இடப்பக்கம் புதிய வீடுண்ணு சொன்னாங்களே…அது இதுதானே ? ‘

–இப்படி அவன் மீண்டும் தர்க்கித்து, இது காமாட்சி வீடுதான் என்று ஸ்தாபிக்க முயன்றபோது, மணிக்கு ஆத்திரம் அசாத்தியமாய்க் கூடியது.

‘இங்க இல்லைண்ணு சொன்னா சலம்பாம போய்விட வேண்டியதுதானே….அர்த்த ராத்திரி வந்து மனுஷனை தூங்க விடாமெ…. ‘

கணவன் சத்தம் போட்டு யாரிடமோ பேசுவதைக் கேட்டு ‘யாரது ? ‘ என்று கேட்டவாறு எழுந்து உட்கார்ந்தாள் நிர்மலா.

இப்போது அவன் ஆத்திரம் அர்த்தமில்லாமல் அவளிடம் திரும்பியது. ‘நீ பேசாமல் கிட. நீயா காமாட்சி….. ? ‘

காரின் பின் கதவுகள் படார் படார் என்று திறந்து மூடும் சத்தம். இரண்டு மூன்று பேர்கள் கூட காரிலிருந்து இறங்கி கேட்டின் முன்வந்து நிற்கும் சந்தடி…கையிலிருக்கும் சிகரெட் தீயின் செம்புள்ளி மினுங்க, வெள்ளைச் சட்டைக்குள்ளிருந்த ஒருவன் முகம் தெரியவில்லை. கேட்கிறான்: ‘என்னசார் இப்படி கோபப்படுறீங்க, இப்போ காமாட்சியின் குரல் கேட்டுதே…..சும்மா பிகுபண்ணாமல் கதவைத் திறங்க சார்…. ‘

மணிக்கு உச்சிமுதல் உள்ளங்கால்வரை அவமானத்தாலும் ஆத்திரத்தாலும் வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்து விட்டது.

‘என்னடா நெனச்சே….படுவா…. ‘ என்று அலறியவாறு ஜன்னலைப் படாரென்று அடைத்துவிட்டு, வீட்டிலிருந்து வெளி முற்றத்துக்கு இறங்கும் முன் கதவைப் போய்த் திறக்க, வெறிப்பிடித்தவனைப் போல் பாய்ந்தான் அவன். கால்பட்டுக் குழந்தைகள் வீல் என்று கத்திக் கொண்டு எழுந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கி விட்டன. நிர்மலா ஓடிவந்து அவன் கையைப் பிடித்திழுத்துத் தடுத்தால். ‘வேண்டாம்….நீங்க வெளியே போகாதீங்க….குடிகார பசங்க…எதுக்கும் துணிஞ்சவங்க…. ‘

‘எவனா இருந்தால் எனக்கென்ன ‘ அவன் சொன்னதைக் கேட்டியில்லே….அயோக்கிய ராஸ்கல் ‘ என்று திமிறிக்கொண்டு கதவின் தாழை நீக்கித் திறந்து கொண்டு முற்றத்தில் குதித்தான். நிர்மலா முற்றத்து லை ஸ்விட்சை தட்டி விட்டதால் இப்போ பளிச்சென்று வெளிச்சம். மணி கேட்டைத்திறந்து வெளியில் வருவதற்குள் அவர்கள் எல்லோரும் ஓடிச் சென்று காருக்குள் ஏற, கார் விரைந்தது. அந்த ரோடின் மறுமுனையில் போய் அந்தக் கார் நிற்பதையும், அதிலிருந்து ஆட்கள் இறங்குவதையும் பார்த்து ‘மானம் கெட்டவங்க ‘ என்று உறுமி ‘தூ ‘ என்று காறித் துப்பியும் அவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. உடம்பின் நடுக்கம் நிற்கவில்லை.

‘எதுக்கு சார் இந்த மாதிரி ஆட்களிடம் வம்புக்கு போகணும். எல்லோரும் ஃபுல்லோடு ‘ என்று சொன்னவாறு, எதிரிலிருந்த வொர்க்ஷாப் வாச்சர் கோலப்பாபிள்ளை அவன் பக்கத்தில் இருட்டிலிருந்து வந்தார்.

‘யாரு கோலப்பாபிள்ளை அண்ணாச்சியா…நீங்களும் பார்த்துகிட்டுதான் இருந்தீங்களா…… ? ‘ என்று கேட்டான் மணி.

‘நான் சுகமாய்த் தூங்கிக் கொண்டிருந்தேன். உங்க சத்தம் கேட்டுதான் முழிச்சேன். ‘எதுக்கு இப்படி வந்து வம்புக்கு நிக்கிறீங்க. காமாட்சி வீடு அதுதான் ‘ என்று அந்த வீட்டைச் சுட்டிக்காட்டி நான் தான் அவுங்களை அனுப்பி வச்சேன். ‘

அவனுக்கு இன்னும் உதறல் சரியாக மாறவில்லை. ‘இந்தக் காமாட்சியை அங்கே இருந்து ஒழிச்சு கட்டினாத்தான் நமக்கு நிம்மதியாகத் தூங்க முடியும் போலிருக்கிறது என்று அவன் சொன்னபோது அவர் விழுந்துவிழுந்து சிரித்தார். ‘நல்லா சொன்னீங்க அங்கே மெயின் கஸ்டமர் யார் தெரியுமில்லே…இந்த ஏரியா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கருணாகரன். ஒழிச்சுக்கட்டப் போகிறவங்க ஒழிஞ்சு போகாமல் பார்த்துக்கணும் ஆமா… ‘

‘அதுக்காக… ‘இங்கே நமக்குக் குழந்தை குட்டிகளோடு வாழ வேண்டாமா…. ? ‘

‘யார் வேண்டாமுன்னு சொன்னாங்க…. ‘ நல்லா வாழுங்க. அவளையும் வாழ விடுங்க…. ‘ உம்….நீங்களாவது ரோடின் இந்த முனையில்தான் இருக்கிறீங்க…அங்கே காமாட்சியின் வீட்டைத் தொட்டு அடுத்த வீட்டில் வசிக்கும் ராமலிங்கம்தானே அவளுக்கு அந்த வீட்டை விலைக்கு வாங்கத் தரகு பண்ணிருக்கான். அவனும் பெஞ்சாதி பிள்ளைகளோடு அடுத்த வீட்டில் வாழாமலா இருக்கான். அதிகமென்ன, அந்த காமாட்சியும் குழந்தை குட்டிகளோடு தானே அங்கே வாழறா…. ‘ ‘

‘யாரு அந்த ராமலிங்கமா ? ‘

‘ஆமாம்…அவனுக்கு நல்ல கமிஷன் கிடைச்சுதா கேள்வி…காமாட்சி கிட்டேதான் பணம் எக்கச்சக்கமாச்சே…. ‘ ‘

மணி ஒன்றும் பேசவில்லை. திரும்பிப் பார்த்த போது நிர்மலாவும் குழந்தைகளும் அவனையே பார்த்தவாறு வராந்தாவில் நிற்பது தெரிகிறது.

‘நீங்க உள்ளே போய் படுங்கோ….இனி அடுத்தது வேறு யாராவது வரப் போறா….என்று அவன் அவசரப் படுத்தினான்.

‘பனி பெய்யுது. எதுக்கு அங்கே போய் நிக்கிறீங்க… கதவை சாத்திகிட்டு வந்து படுங்கோ… ‘ என்று விட்டு அவள் உள்ளே போனாள்.

‘இப்படி இங்கே ஒரு நிரந்தர தொந்தரவு இருக்குமுண்ணு நேரமே தெரிஞ்சிருந்தா நான் இங்கே குடிவந்தே இருக்கமாட்டேன் ‘ என்றான் மணி.

‘இந்தக் காலத்தில் இதெல்லாம் சகஜம்தான் சார். வீடுமாறிப் போய் இப்படி நம்ம வீட்டுக் கதவைத்தட்டி இதுதான் அவ வீடாண்ணு கேட்டுவிட்டால் எதுக்கு நாம இப்படி உணர்ச்சி வசப்படணும். இப்போ தப்பு உங்கமேல்தான். ‘இதில்லை அப்பனே அவவீடு…அதுதான் அவவீடு ‘– அப்படிண்ணு நீங்க சொல்லியிருந்தா அவுங்க பேசாம போயிருப்பாங்க. இப்படித் தவறிப்போய் வீட்டுக் கதவைத் தட்டி மனுஷங்களை தொந்தரவு செய்யும் விவகாரம் அந்தப் பழைய பாண்டிராஜா காலத்தில் கூட இருந்திருக்கிறதே…. ‘ உங்களை எழுப்பி கோலாப்பிள்ளை நீங்கதானாண்ணு தெரியாமல் யாராவது விசாரிச்சால், அதுக்காக உங்களை ஒரு வாச்சராக தாழ்த்தி விட்டதா நீங்க கோபப்படுவதில் அர்த்தமுண்டா ? ‘

அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.

‘உங்களைத் தேடி வருகிறவங்க யாராவது தெரியாமல் அங்கே காமாட்சி வீட்டில் போய் விசாரிச்சாங்கண்ணா, ‘இதில்லை: அது ‘ என்று உங்கவீட்டை சுட்டிக் காட்டிக் கொடுப்பதுதானே முறை. இதெல்லாம் ஒவ்வொருத்தர் தொழில்…..உலகத்தில் எல்லாம்தான் இருக்கும். இதையெல்லாம் நாம் ஒருத்தர் நினைச்சால் திருத்திவிட முடியுமா சார் ? ‘

அவரிடம் அவன் தர்கிக்க விரும்பவில்லை. ‘அதுசரி….எப்போதும் வெளியே வெற்றிலைப் போட்டுக் கொண்டு யாராவது வர்றாங்களாண்ணு பார்த்துக்கிட்டு ஒருத்தன் அங்கே உட்கார்ந்திருப்பானே அவன் யாரு ? ‘

கோலப்பா பிள்ளைக்கு இப்போது உற்சாகம் வந்து விட்டது.

‘அப்படி கேளுங்கோ சார்…..இப்போ கேட்டாங்க இல்லையா, அது நியாயம் ‘ எப்படியானாலும் நம்ம அண்டை வீட்டுக்காரனைப்பற்றி நாம் சரியாக அறிஞ்சிருக்க வேண்டாமா ‘ காமாட்சி செத்துப் போன ராமப்பாவின் இரண்டாவது பெண்டாட்டி…முதல் தாரத்தின் மகன்தான் அந்த ரங்கன். காமாட்சி அந்தக் காலத்தில் ஆள் பிரமாதமா இருப்பாள். அப்பா செத்த பிறகு ரங்கனுக்கு இந்தச் சித்திக்காரிதான் எல்லாம்…எல்லாம்.

கோலப்பா பிள்ளையின் விஷமச் சிரிப்பிலிருந்து மணிக்கு விஷயம் புரிந்தது.

‘அது சரி…இப்போ அங்கே நிற்கும் இளம் பெண்கள்… ? ‘

‘என்னாசார்…அப்போ சித்தெமுந்தி காட்டின வெறுப்பெல்லாம் வேஷம்தானா.. ? என்னா, நோட்டம் உண்டுமா ? ‘ என்று கேட்டுவிட்டு கோலப்பாபிள்ளை கடகடவென்று சிரித்தார்.

மணிக்குப் பயமாய் போய்விட்டது. ‘சும்மா விளையாடாதீங்க…அவ என் வீட்டுக்காரி சண்டைக்கு வரப்போகிறா……அனாவசியமா குடும்ப கலகத்தை உண்டாக்கி வச்சிருதாயேயும்… ‘ என்று திரும்பி பார்த்துவிட்டு மெல்லச் சொன்னான்.

‘காமாட்சிக்கு இப்போ வயசாயிட்டது. அசல் அங்கமுத்துவைப் போல் பெருத்துப் போனாள். அவளால் இப்போ ஒண்ணும் முடியாது. அந்த மூன்று பெண்களும் அவ பெற்றவங்க தான். கிளியாட்டம் இருக்கிறாங்க….. பிறகென்ன….. ‘ மற்றபடி, வெளியிலிருந்தும் சின்னச் சின்னக் குட்டிகள் வருவதாய் கேள்வி. எது எப்படியோ…பாவி மகளுக்கு இந்த பஞ்சகாலத்திலும் பிஸினஸ் அமோகமாய் நடக்குது. இன்னும் கொஞ்ச நாளில் இந்த தெரு பூராவையுமே அவ விலைக்கு வாங்கிவிட்டாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். சரி சார். நமக்கெதுக்கு இதெல்லாம்…. ‘உங்க வீட்டுக்காரி வேறெ சந்தேகப்படப் போகிறா,நீங்க கேட்டை அடைச்சு கிட்டு போய்படுங்க சார். எனக்கும் தூக்கம் வருது…. ‘ என்று கொட்டாவி விட்டவாறு திரும்பினார் கோலப்பா பிள்ளை.

மணி கேட்டை அடைத்து விட்டு உள்ளே வந்தான். கதவைத் தாள் போட்டுவிட்டு அறைக்குள் வந்தபோது, குழந்தைகள் எல்லாம் தூங்கிவிட்டன. கட்டிலில் படுத்திருந்த நிர்மலா, ‘என்ன இந்த அர்த்த ராத்திரியில் அந்த கிழவன் கிட்டே இப்படி ரகசியான பேச்சு ‘ என்று விசாரித்தபோது, ‘ஒன்றுமில்லே….ஹும், நாம உள்ளே தேடுகிறோம். அவுங்க ஊரில் தேடுறாங்க ‘ என்று சொல்லியவாறே லைட்டை அணைத்துவிட்டு அவள் அருகில் வந்து படுத்தான் மணி.

Series Navigation

நீல பத்மநாபன்

நீல பத்மநாபன்