சா(சோ)தனை

This entry is part of 35 in the series 20021124_Issue

வை.ஈ மணி


அன்னை அருகில் அணுகவும்
ஆசை பொங்கி அன்புடன்
மின்னல் என்று துள்ளிடும்
மழலை கூறும் குழவியின்
என்னை வெல்ல யாருளர்
என்று சொல்லும் நோக்கினில்
மின்னும் வெற்றிக் குறியுடன்
மிளிரும் அரிய சாதனை (1)

கல்வி அறிவும் பெற்றுநுண்
கலையும் கற்று அவாவுடன்
செல்வம் ஈட்டி புகழ்பெறத்
திறமை யுடன் செயல்படும்
இல்லை எனக்கு இணையென
இறுமாப் புறும் இளைஞனின்
சொல்லில் அன்றி செயலிலும்
சிலிர்கும் அரிய சாதனை (2)

மனைவி மக்கள் இன்புற
மகிழ்ச்சி பெற்று வாழவே
மனையும் கட்டி காண்பவர்
வியப்பு உறும் வகையினில்
நினைத்த குறிகள் யாவையும்
நேடி விட்ட மனிதனின்
அனைத்து அசைவில் குதியிடும்
அரிய பெரும் சாதனை (3)

உலகில் பிறந்த வர்களின்
உடன் பிறப்பு அகந்தையே
வலிமை செல்வம் அழகுடன்
மதியும் சேரின் மனிதரின்
மலமாம் மமதை மாபெரும்
மலையாய் ஓங்கி வளர்ந்திட
நிலையைக் குலைத்து இறைவனின்
ந்ினைவை நீக்கச் செய்திடும் (4)

காற்றும் நீரும் நிரம்பிய
கருவில் உயிர் உணர்வுடன்
ஆற்றல் அறிவு ஊக்கமும்
அளித்த ஈசன் அருளுடன்
தோற்று வித்த மனிதனின்
செயலில் காணும் தற்புகழ்
போற்று கின்ற பரமனின்
பழமை கண்ட சோதனை! (5)

***
வை.ஈ மணி
ntcmama@pathcom.com

Series Navigation