மனமெங்கும் வாசமோ ?

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

வேதா.


மனசு முழுக்க
நீ ..
………………….

தவளையின் கத்தலில்
தாளங்கள் கேட்கிறேன்!
மழைநீரின் சலசலப்பு
உன் கிண்டல் தொனி!
இலைகளின் துளி எல்லாம்
ஈரமாய் இதயத்தில்!
இதுவரை பார்த்திராத
மஞ்சள் நிலா வானத்தில்…
என்ன அதிசயம்!
எதிர்திசையில் வானவில் !
புதர்பொதிந்த இருட்டு
இன்று புன்னகைக்கிறது!
புரியாத ஏதேதோ
புரிந்தது புரிகிறது!
சிதறிய சில்லறைகள்
சிந்திய சிரிப்பலையில்
சிட்டுக் குருவியாய் சிறகடிக்கிறேன் !
பரந்து கிடக்கும் வேப்பம்பூ படுக்கை
பார்க்கிறது உன்னைப் போலவே!
பாதையில் குறுக்கிட்ட மண்புழு
எனக்கும் உனக்கும் இடைப்பட்ட தூரம்போல..!
பழுத்த இலைகள்
பதித்திருந்த கால்தடங்கள்
நம் கவிதைகளின் பரிமாற்றம்!
அவசரமாய் ஓடும் அணில் – என்
அவஸ்தை பார்த்த அச்சமோ ?
புற்களும் பூனைகளும் – ஏனோ
பச்சையாய், பாசமாய் ?
புதிர் எல்லாம் புரிந்ததுவோ ?
நத்தை கூட என்னை
நிமிர்ந்து பார்த்த ஞாபகம்!
தென்னங்குருத்துடன் – நான்
தெரிந்தே செய்த குதர்க்கம்!
தெரிந்த அத்தனையும் தெரியாமல் போகிறதோ ?
இறகின் துண்டு விழுந்து – என்
இதய துவாரம் அடைக்கிறது!
உதிர்ந்த ஊமத்தையில் – நேற்று
உலர்ந்த இதழ் இரண்டு
உனக்கும் எனக்கும் உள்ள
உறவை உறுதி செய்யும்!
ஆயிரம் வண்ணங்களில்
அங்கங்கே ஆனந்தமாய் பூச்சிகள்!
ஆனாலும்,
என் மனசு முழுக்க
ஒரே வண்ணமாய் நீ !

***
வேதா.
maha_gs@rediffmail.com

Series Navigation

வேதா

வேதா