குறை தீர்ந்த குழந்தைகள்

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

அனந்த்


1.
துள்ளும் மானினைப்போல் சுழன்றோடும் மீனினைப்போல்
கள்ளந் தெரியாது களித்திருக்கும் வயதினிலே
உள்ளம் மிகநொந்து உடல்வருத்தும் ஊனமுடன்
எள்ளிப் பிறர்நகைப்பும் ஏற்றுநிற்றல் சிலர்விதியோ ?

2.
ஒரு சிறுமி:

என்னைப் பெற்ற ஏழையர்தம்
… இன்பக் கனவின் கனியாகப்
பொன்னைப் போல நான்பிறந்தேன்
… போற்றி வளர்த்தார் விந்தையென்ன ?
என்ன வினையோ எவர்பழியோ
… இரண்டே வயது ஆகுமுன்னே
மின்னல் போல வந்தசுரம்*
… வீழ்த்திய தென்றன் வாழ்க்கையையே.

அதன்பின்:
கல்லில் உறங்கிக் கிடந்தேன் -இரு
…காலும் விளங்காமல் காலம் கழித்தேன்
சொல்லாலே ஊர்விடும் அம்பை – என்றும்
…சுமந்து சுமந்தேஎன் சீவனை மாய்த்தேன்
கல்லாத பிள்ளையாய் வாழ்தல் – பெரும்
… கடனென் றறிந்தந்தக் கடவுளை வைதேன்
நல்லார் ஒருவரால் இன்று – செத்த
… நானும் மறுமுறை தோன்றி மலர்ந்தேன்

3.
யாரந்த நல்லார் ?

இருபத் தைந்து ஆண்டுகள்முன்
… இளைஞன் ஒருவன் இவ்வுலகம்
தருநல் லின்பம் யாவையுமே
… தானும் காணும் ஆர்வமுடன்
இருக்கும் நேரம் வாழ்வினிலே
… இடியாய் விழுந்த விபத்தினிலே
இருகால் கைகள் இயக்கம் இன்றி
… ஊனன் ஆயினன் என்கொடுமை!

‘ஊனம் உடற்கே, உயிர்க்காமோ ?
… உடைந்த வெல்லம் இனிக்காதோ ?
மானம் நிறைந்த வாழ்க்கையினை
… மீண்டும் பெறுவேன் மேலும்மிக
தீன நிலையில் வாடுகின்ற
… சிறுவர் தமக்கென் றொருவிடுதி
நான மைப்பேன் ‘ என்றஅந்த
… *நல்லோன் கனவு நனவாகி

ஆரும் விரும்பித் துணைபுரியா
… அநாதைச் சிறுவர் ஆயிரமாய்ச்
சேரும் வகையில் சிறந்துநிற்கும்
… சேவா சங்கம்* ஆயிக்குடி*
ஊரில், நாட்டில் ஊன்றிபல
… உதவி புரிந்தே ஊனரும்நற்
பேரும் புகழும் தம்வாழ்வில்
… பெறவோர் பாதை அமைத்ததுவே.

4. இன்று:

*வடிவுக் கரசி போன்றபலர்
… வாழ்வில் தமது ஊனமதை
அடியோ டழிக்க அன்புவழி
… அளிக்கும் பலமும் அறிவுதரும்
படிப்பும் மிளிர வாழ்க்கையினைப்
… பலரும் போலத் தாம்சுவைக்கத்
துடிப்பும் கொண்டு திகழ்கின்றார்
… சொல்வீர் இதுபோல் சேவையுண்டோ ?

^^^^^
*சுரம்: போலியோ என்றழைக்கப்படும் முடக்கு சுரம்
*நல்லோன்: ‘அமர் சேவா சங்க ‘த்தை நிறுவிய திரு.இராமகிருஷ்ணன்
*ஆய்க்குடி: அமர் சேவா சங்கம் செயல்படும் ஊர்.
*வடிவுக்கரசி: கானடாவில் நிறுவப்பட்டுள்ள Handicare International செய்தித் தாளில் சுட்டப்பட்ட, அமர்சேவா சங்கத்தின் உதவிபெறும் இளம்பெண்களில் ஒருவர்.
இச்சங்கத்தின் பிறப்பு பற்றியும் அங்குள்ளோர் புரிந்துவரும் நற்செயல்கள் பற்றியும் ஆன விவரங்களைக் காணத் தயவு செய்து: http://www.amar-seva.org/htm/index-1.htm; http://www.ambalam.com/issues/cate/2000/may/cate28_03.html என்ற சுட்டிகளைப் பார்க்கவும்.

^^^^
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்