வேகத் தடுப்புகள்

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

ஜடாயு


பறந்து கொண்டிருக்கிறேன்
என் இரும்புக் குதிரையில்.
திடார் என முளைத்து வழிமறிக்கிறது
ஒரு நந்தி.
இல்லை… நந்தியின் திமில்.

என்
நரம்புகள் புடைக்கின்றன.
கைகளும் கால்களும் இறுகி
கடிவாளத்தைப் பிடிக்கின்றன.
இதயமும் ஒரு முறை
ஏறி இறங்குகிறது.
அப்பா..ஒரு ஆசுவாசச் சிறுமூச்சு.

எவன்
என்
வேகத்தின் எதிர்வருபவன்
என்ற ஆத்திரம் உதிக்கிறது.
இங்கு
சாலைகள் கூட
நான் முன்னேறும்போது
முட்டுக்கட்டைகள் போடுகின்றன என்ற
சலிப்பு தோன்றுகிறது.
‘இந்த இடத்தில் இந்த வேகம் என்ற
வரையறையை அந்தந்த
வழிகளில் வரைந்து வைத்தால்
வாகாய்ச் செலுத்தலாமே வாகனங்களை !
வேறு பல
நாட்டுச் சாலைகளில் நடப்பு அது தானே
இப்படிக்
காட்டுத் தனமாகவா உள்ளது கட்டுப்பாடு ? ‘
சிந்தனை முளைக்கிறது.

என்ன செய்வது ?
சட்டங்களை மதிக்காத
சழக்கர்களாகி விட்ட நமக்கு
வேகத் தடுப்புகள்
வேண்டித் தான் இருக்கும்
சாலைகளில் மட்டுமல்ல
சமுதாயத்திலும் கூட.

jataayu@hotmail.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு