மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)

This entry is part of 29 in the series 20021110_Issue

சேவியர்


3

பூக்கள் இல்லாத
பூங்கா அது.

வினாடிகள் வினாடிகளை
சிந்தனையோடு தாண்டும்
அந்த
சின்னச் சின்னக் கணங்களிலும்
பாலாவின் கண்கள்
சாலை பார்த்துக் கிடந்தன.

காதலனை காத்திருக்க
வைப்பது
காதலின் இலக்கணமோ
இல்லையோ,
காலங் காலமாய் அது
காதலியரின்
இலக்கணமாகி இருக்கிறது.

எத்தனை முறை தான்
பெருமூச்சு விடுவது ?
எத்தனை இலைகளைத் தான்
தாறு மாறாய் கிழிப்பது.

பிரியா இப்படித் தான்
மாலையில் வருவாயா என்பாள்.
வரம் பெறும் பக்தன்
வரமாட்டேன் என்பானா ?

காத்திருந்தால்
கண்களுக்குள் விழமாட்டாள்.
ஓடி ஓடி மனதில் கால்களும்
ஓடாமல் உடலின் கால்களும்
ஓய்வு தேடும் போது
வருவாள்.
கோபம் துடைக்கும்
புன்னகை எடுத்துக் கொண்டு.

ஒற்றைச் சூரியன்
அள்ளிக் கொண்டு போகும்
ஒட்டு மொத்தப் பனித்துளியாய்.
ஓடிப் போகும்
பாலாவின் கோபங்கள்.

அனிச்ச மலரின்
அடுத்த வீட்டுக்காரி பிரியா.
தொட்டாச் சிணுங்கியின்
தோழி அவள்.
அவள் கிளைகள் பூப்பூக்க
அவன் அவ்வப்போது
வேராய் பூமிக்குள் விரைவதுண்டு.

இன்று என்னவாயிற்று
இவளுக்கு ?
பணியில் இருக்கிறாளா
இல்லை
பிணியில் கிடக்கிறாளா ?

அவ்வப்போது பாலா
கவிதை எழுதுவான்,
காதலிப்பவன் கவிதை எழுதுவதும்
கடலுக்குள்
நதிகள் கலப்பதும்
காலங்காலமாய் நடப்பது தானே.

‘எனக்குள் பூக்கள்
இருக்கிறதென்பதை
உன் புன்னகை
இழுத்தெடுத்தபோது தான்
புரிந்துகொண்டேன். ‘

கண்மூடி
மனசில் கவிதை தேடினான்.

என் பிரியங்களின்
பிரியமே பிரியா ?
ஏன்
உன் தரிசனம் தாமதம் ?

பாலாவின் உள்ளுக்குள்
சிறு கோபம்
சின்ன அலையாய் சிதறியது.
அவன் மனமெனும்
புல்லாங்குழல்
திடாரென துளைகள் பொத்திய
அவஸ்தை.

கல்லெறியில் உடைந்து சிதறி
மீண்டும் இணையும்
குளத்து நிலவாய்,
அவன் கோபம்
விட்டு விட்டு
தொட்டுக் கொண்டிருந்தது.

பூங்காவின்
சருகு மிதித்து
காதலர்கள் கடந்து போகிறார்கள்.

ஒவ்வோர்
இதழ்களிலும்
ஒவ்வொரு விதமாய் புன்னகை.

மகிழ்வில்,இக்கட்டில்,
வரவேற்பில், வழியனுப்புதலில்
அட,
முகத்தின் முகமூடி உதடுகளா ?

பகலவனும்
படுக்கை சென்ற பின்
பாலா என்ன செய்வான் ?
இருட்டு அவனுக்குள்
சில கவிதைகளை
எறிந்து விட்டுப் போனது.

பூமி கருப்புக்குள் கலக்க,
மேலே
நிறங்களின் கலவையாய் வானம்.
வண்ணம் தோய்த்த
பஞ்சுக் கூட்டமாய் மேகங்கள்.
கவிதை
மேகங்களிடையே கசிந்து
பாலாவின் பக்கமாய் விழுந்தது.

‘மேகத்தின் மேலுமொரு
எரிமலையின் பிரளயமா
பூமியின் முகத்தில் அதன்
கரும்புகை வளையமா ?

இருட்டுக்குள் இளைப்பாறுது
இயற்கையின் தோட்டம்
கண்சுருக்கி நகருதிந்த
வண்ண முகில் கூட்டம்.

சூரியக் கிழவனின் வெற்றிலைச் சாறு
வானப்போர்வைக்கு வண்ணமா ?
இருட்டுப் போர்வைக்குள் ரசித்துக் கிடப்பதே
பூமித்தாயின் எண்ணமா ? ‘

சிந்தித்துக் கொண்டே
வெளியே வந்தான் பாலா ?

தொலைபேசி செய்து
காரணம் கேட்கலாமா ?
கேள்வியை
மனம் துண்டாக்கிப் போட்டது.
அவள் போன் செய்யட்டும்.

ஏன் நான் ?
தவறிழைத்தவள் அவள்.
விழுந்து கொண்டிருந்த
அருவியை
நிறுத்தி வைத்தவள் அவள்.
அவளே செய்யட்டும்.

ஒரு முறையேனும்
கடல், நதிக்காய்
கரை தாண்டி வரட்டும்.

நீ கடலா ?
நான் நதியென்றால்
நீ அதில் பாதி தானே ?
கடலெனும் கர்வம் கொள்கிறாயா ?

சிந்தனைகளோடு
பாலா
பேருந்தில் ஏறி
புறப்பட்டான்.

அதே நேரம்,
அவசர அலுவலில்
பிழியப்பட்ட பிரியா
பஸ் விட்டு இறங்கி
பூங்காவினுள் விரைந்தாள்

சேவியர்

(தொடரும்)

Series Navigation