புதையல்

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

அனந்த்


உள்ளமெ னும்ஒரு காடு- அதன்
… உள்ளே மறைந்துள்ள உண்மையைத் தேடு

1. அள்ளஅள் ளக்குறை யாத- ஓர்
… ஆனந்த மென்னும் புதையல்கிட் டாத
பள்ளந் தனில்விழுந் தங்கு – பெரும்
… பாறையில் சிக்கின் பயன்எவர்க் கிங்கு ? (உள்ளம்)

2. பல்லாண்டு காலமும் தீர்ந்தும் – அதைப்
… பார்க்க விடாமல் பலருமாய்ச் சேர்ந்து
மல்லாடு வார்உன்ற னோடு – நீயும்
… வாடிநிற் காத வகையினை ஓர்ந்து (உள்ளம்)

3. முள்ளெல்லாம் சூழ்ந்த்ிடல் கண்டு – அச்சம்
… முட்டிடும் நெஞ்சை அடக்கிமேற் கொண்டு
கள்ள விலங்கெல்லாம் ஓட்டி – உன்றன்
… காரியத் தேபொறி ஐந்தினை நாட்டி (உள்ளம்)

4. நல்லோர் துணையினை நாடு – இறை
… நம்பும் குணத்தோர் குழுவினில் கூடு
நில்லாத செல்வம் களைந்து – என்றும்
…நிற்கும்பே ரின்பத்தை வேண்டி விழைந்து (உள்ளம்)

5. தேடக் கிடைத்திடும் பாராய் – இந்தத்
… தேக உணர்வினைத் தாண்டியே நேராய்
ஆடும் பரவசக் காட்சி – தரும்
… ஆனந்தத் திற்கேநீ ஆவாய்ஓர் சாட்சி (உள்ளம்)

***
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்