மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது (தொடர்கவிதை -2)

This entry is part of 23 in the series 20021102_Issue

கோபால்


2

ஆற்றலும், அறிவும்,
அழகுடன் கலந்து
இளமைப் பாத்திரத்தில்
இட்டு நிரப்புங்கள்
கிடைப்பது பாலா !

இருபதின் இளைஞன்,
இதய வேர்களில்
இனிமை நிறைத்து
விழிகளில் புன்னகையை
மலர்களாய் மலர விட்டவன் !

அலுவல் தேசத்தின்
முதல்வனாகும்
கனவை மெய்ப்பிக்க
காலங்கள் அறியாது
உழைப்பை நிறைப்பவன் !

பின்னாளில்
பிரியமாகிப் போனவளின்
அறிமுகம் கிடைத்ததும்
அலுவல் நிமித்தமே !
கண்ட போதினில் பாலா
விழி கண்டான் விழியே கண்டான்,
மொழியுரைக்கும் வழியும் கண்டான்

மனம் முழுதும்
அலுவல் புலமை
ஆக்கிரமித்ததால்,
காதல் விதைகள்
துவெப்படாத
காலங்களாய்த்தான்
கழிந்தது வாழ்க்கை !

அழகின் தோற்றமும்
அலுவல் ஆர்வமும்
எதிலும் முதலாய்
இருப்பதில் விருப்பமும்
மென்மையும், இனிமையும்,
கொண்டவனைக்
கொண்டாடி
மனதின் மூலையில்
முடிச்சிட்டாள் பிரியா !

சொல்லிவிட்டு
வருவதற்கு காதல்
விருந்தாளியல்ல !

அமைதிப் புயலாய்
ஆழ் மனத்தில்
இருக்கையிட்டிருந்த காதல்
ஈர்ப்பு விசையாய் மாறி
உள்ளத்தைக் கவர்ந்திழுத்து
சீறிப் பாய்ந்தது எப்போது ?
கேட்டுப் பாருங்கள்
காதலர் சிரிப்பர்
காதலும் சிரிக்கும் !

இணையம் வழியே கூட
இதயங்களை
இணைக்கும் காதல்
முகம் காண்பவரிடம்
முக்காடிட்டு இருக்குமா !

பிரியாவின்
விழிகளின் வழியே
வழிந்த காதலை
பாலா
இதயம் முழுவதும்
நிரப்பிக் கொண்டான் !

இனிது ! இனிது !
வாழ்வு இனிது !
வாழ்வினில் காதல்
வாழ்வினும் இனிது!
கவிதையாய் இனித்தது
காதல்.

காதல் சுமந்த பின்
இருவருக்கும்
காலம்
கனவுகளாய்,
காத்திருத்தல்களாய்,
சந்திப்புகளாய்,
கோபங்களாய்,
சமாதானங்களாய்
காதல் வளர்த்துக்
கணங்களாய் மறைந்தது !

(தொடரும்)

Series Navigation