நகரம் பற்றிய பத்து கவிதைகள்

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

பாவண்ணன்



1. மழை முடிந்த நகரம்

காத்திருப்பின் எரிச்சல் உந்த
வெறிகொண்ட மிருகமென
வேகமுடன் ஓடுகிறது
மழை முடிந்த நகரம்

அவமானத்தில் மனம் சிறுத்து
தலைதாழ்ந்த நிரபராதியாக
பள்ளம் பார்த்தோடித் தேங்கிக் கிடக்கிறது
தார்ச்சாலை நனைத்த மழைநீர்

நிற்காமல் பறக்கும் பேருந்துகள்
வாரியிறைத்த சேற்றில் நனைந்தவர்கள்
வேளைகெட்ட வேளையில்
மழைபெய்து கெடுப்பதாகப் புலம்புகிறார்கள்
சுவரொட்டி நடிகைகளின்
முலைபற்றிக் கிழிக்கும் விடலைகள்
காறித் துப்புகிறார்கள்

மழைதொட்ட தெருக்களைவிட
மழை தொடாத தெருக்கள்
நிம்மதியாய் மூச்சுவிடுகின்றன

திரும்பாதவர்களுக்காகக் காத்திருக்கும்
வீடு மீண்ட குடும்ப உறுப்பினர்களின்
முன்னிரவுப் பதற்றங்கள்
மழைக்குப் பிறகும் தணிவதில்லை

மெய்சிலிர்க்க நடக்கும் விழைவோ
கைகுலுக்கும் கனிவோ அற்று
தற்செயலாகச் சந்தித்த விரோதியாக
விலகி நிற்கிறது நகரம்


2. என் முகம்

ஒருவரையொருவர் இடித்தபடி
ஒவ்வொருவரும் பதறி ஓடுகிறார்கள்
அவர்கள் முகங்கள் வெறித்திருக்கின்றன
தப்பித்து ஓடும் எலிகள் போல
பதுங்கிக் கொள்ள இடம் பார்க்கிறார்கள்
நழுவி விழும் சிற்றுண்டிப் பொட்டலங்களையும்
எடுக்க நேரமின்றி ஓடுகிறார்கள்
நடந்ததென்ன என்று விவரிப்பது
முற்றிலும் அவசியமில்லாமல் போய்விட்டது
முகம்பார்த்தே விஷயத்தை ஊகிக்கிறார்கள்

ஐயோ இப்படி நடந்தால் எப்படி
ஐயோ இப்படி நடந்தால் எப்படி

நடுக்கத்தில் சொன்னதையே
திரும்பத் திரும்பச் சொல்லிப் புலம்புகிறார்கள்
கிடைத்த வாகனங்களில் ஏறிப் பறக்கிறார்கள்
தடுமாறித் தவித்து நிற்கிறேன் நான்
கடையின் கதவுகள் மூடிக் கொள்கின்றன
கணநேரத்தில் வெறுமை சூழ்கிறது
ஓடிவரும் ஆட்டோவை நிறுத்துகிறேன்
என் இருப்பிடத்தின் பெயரைக் கேட்டதும்
காறித் துப்பிவிட்டுப் போகிறது அது
இருப்பிடத்தின் பெயரை மாற்றிச் சொன்னதும்
இன்னொரு ஆட்டோக்காரன்
கொன்று விடுவது போல முறைக்கிறான்
என் முகமே என்னைக் காட்டிக் கொடுக்கிறது

இருசக்கர வாகனம் எரிந்து கொண்டிருக்கிறது
எங்கும் உடைந்த கண்ணாடித் துண்டுகள்
செருப்புகள்
அங்கங்கே ரத்தத்துளிகள்

பாதையின் தனிமை பீதியூட்டுகிறது
முகத்தை மறைப்பது எப்படி எனத் தெரியாமல்
இருப்பிடம் நோக்கி நடக்கத் தொடங்குகிறேன்

3. கண்ணாடி

பழுதுபார்க்கப் படாததால் உருக்குலைந்து நிற்கின்றன
உடைபட்ட கண்ணாடி ஜன்னல்கள்
தாள்களாலும் அட்டைகளாலும்
மறைத்திருக்கிறார்கள் அவற்றை
ஒவ்வொரு சட்டகத்திலும்
அரைகுறை கண்ணாடித் துண்டுகள் ஒருபக்கம்
அரைகுறை மறைப்புகள் மறுபக்கம்

ஊர்வலத்தில் நேர்ந்த கலவரத்தால்
நொறுங்கிச் சிதைந்தன எல்லாம்

ஏழெட்டு வாரங்கள் கடந்துவிட்டன
இன்னமும் நிம்மதியாய் மூச்சுவிட முடியவில்லை

எந்தெந்த நெஞ்சில் நெருப்பிருக்குமோ
எந்தெந்த கைகளில் வன்மம் வழியுமோ
பதறிச் சோர்வடைகிறது மனம்
பீறிடும் அச்ச ஊற்றில்
தடுமாறிப் புரண்டோடி
கரையொதுங்கும் எண்ணச் சடலங்கள்

காற்றில் கரையாத கூச்சலால்
கால்நடுங்கும் வெளியே செல்ல

இன்னொரு மொழிபுழங்கும் நகரில்
வாழத் தந்த விலைபெரிது

4. இழந்த துயில்

யாருமற்ற நள்ளிரவில்
ஆழ்துயிலைக் கலைத்தபடி
என் வீட்டுக்கருகில் படபடத்தது
ஆட்டோ ஊர்ந்துவந்த சத்தம்

ஊருக்குப் போன மனைவியும் குழந்தையும்
மனத்திரையில் படமாய் நெளிந்ததும்
உள்ளூரப் பரவியது நடுக்கம்

அவசரம் அவசரமாக ஜன்னலை நெருங்கி
ஆள்தெரியா இருட்டில் பார்வையை ஓட்டி
என்ன என்ன என்று துழாவிய கணத்தில்
அதிகரித்தது இதயத்துடிப்பு

அகாலத்தில் வந்த விருந்தா
மரணச் செய்தியைச் சுமந்து வந்தவனா
பிரசவத்துக்கு அழைத்துப் போகிறதா
மதுக்கடையிலிருந்து துாக்கியனுப்பப்பட்ட ஆளா

ஆட்டோவின் ஓசை அடங்கிக் கரையும் வரை
நிம்மதியற்று நிலைகுலைந்து போனேன்

தன்னைக் குறிபார்த்த அம்பொன்று
திசைமாறிப் போனதுபோல ஆறுதல்
அப்பாடாவென்று படுக்கையில் விழுந்தேன்

வெடித்துச் சிதைந்த உடல்கூறுகள்
மீண்டும் ஒருங்கிணைவதை உணர்ந்தபடி

5. மகத்தான துயரம்

மிகப்பெரிய காய்கறி வண்டியாக
வலம் வருகிறது இந்நகரம்

எல்லாமும் தனித்தனி நிரை
எல்லாவற்றுக்கும் தனித்தனி விலை

தன் விசித்திர ஒலிகளுடன்
தள்ளத் தள்ள முன்னேறுகிறது அது

புத்தம் புதுசான காய்களுக்கு
போட்டிகள் உருவாகின்றன
கூடுதல் தொகையும் கிடைக்கிறது
வாட்டத்தின் வரிகள் படிந்தவை
குத்துமதிப்பான விலைக்குப் போகின்றன

வேகவேகமாக விற்றுத் தீர்கின்றன சில
யாருமே தீண்டுவதில்லை சிலவற்றை
தொட்டுத் தொட்டுப் பார்த்தபிறகும்
ஒதுக்கப்பட்டு விடுகின்றன சில

அழுகிப் போகிறதே என
இலவசமாய் தர முன்வருவதில்லை
அழுகிய பிறகு
வீசாமல் இருப்பதும் சாத்தியமில்லை

திசைதோறும் பழகிய பாதைகளில்
திரும்பத் திரும்பச் சுழல்கிறது வண்டி

காய்களே இல்லா வெற்றுவண்டியை
கற்பனை செய்வதே துக்கம் தருகிறது

வாடிக்கை¢ காரர்கள் தென்படாத சமயத்தில்
வாசல்களையும் ஜன்னல்களையும் பார்த்து
வாவாஎன்று அழைக்கிறது

எந்தக் காய்க்கும் ஒரே விலையை
நிரந்தரமாய் வைத்துக் கொள்ள முடிவதில்லை
ஒருநாள் ஏற்றி
மறுநாள் இறக்கி
வந்தவரை லாபமென
வாங்கிக் குவிக்கிறது

வண்டி உருண்டபடியே இருப்பதால்
நுாற்றாண்டுகளின் புழுதியில் சிக்கிப்
பழைய வேகத்தையும் பொலிவையும்
இழந்துவிட்டது

என்றுமுதல் விற்பனை நடக்கிறதோ
எவருக்கும் தகவல் தெரியாது

இன்று
உருளும் விதத்தில் மகிழ்ச்சியில்லை
நிறுத்தும் விதமும் புரியவில்லை
மாற்றுவழி அறியாத மனத்தின்
மகத்தான துயருக்கும் முடிவில்லை

6. காலைக்காட்சி

ஒருகையில் குச்சி
மறுகையில் நாயுடன் பிணைத்த சங்கிலி
இருள்பிரியாக் காலையில்
நடையைத் தொடங்குகிறார் கிழவர்

வாடிக்கை நண்பர்கள் எதிர்படுகையில்
வணக்கம் சொல்லிச் சிரிக்கிறார்
நெருங்கி வந்து நிற்பவர்களிடம்
இரண்டொரு நொடிகள் நலம் விசாரிக்கிறார்
அப்போதெல்லாம்
அடக்கிவைத்த எழுச்சியுடன்
கூண்டுச் சிங்கம் போல
சுற்றிச் சுற்றி வருகிறது நாய்
அவர் கவனத்தை இழுக்க
உடலை நெளிக்கிறது
உடைபற்றி இழுக்கிறது

அவரளவு அமைதியில்லை
அந்த நாய்க்கு

இழுபடவலில் சலித்ததைப் போல்
இடமும் வலமும்
மாறிமாறித்தாவி
அறுத்துக் கொண்டு பாய
அலைகிறது

அதட்டும் முயற்சிகள் பயனற்றதால்
சங்கிலியை நெகிழ் த்துகிறார் கிழவர்

விடுவிக்கப்பட்ட வேகத்தில்
கொஞ்ச துாரம் ஓடுகிறது நாய்
யாசிக்கும் இரவலன்போல
கம்பங்களின் அருகிலும்
மரங்களின் அருகிலும்
கணநேரம் நின்று யோசிக்கிறது

வெகுதொலைவு செல்லத் தெரியாமல்
மிரட்சியுடன் திரும்பி வருகிறது
தன்னைப் பிணைத்த சங்கிலியைத்
தானே கவ்வி ஒப்படைக்கிறது
வாலாட்டிக் குழையக் கண்டு
வாவா என்று நடக்கிறார் கிழவர்

7. முடவன் பாட்டு

ஓடு ஓடு என்னும் கட்டளையை
ஓயாமல் விதித்தபடி
அறைகூவிப் பறக்கிறது நகரக்கழுகு

அதன் அலகுகளில்
இரையாகத் தொங்குகின்றன உடல்கள்
அதன் எச்சத்தில் சேறாகிறது தரை

சிறுபொந்து தேடிச் சுருண்டு
பெ முச்சில் நாள்கழிப்பவன் நான்
அலறல் கேளாப் பொழுதிலும்
அச்சத்தில் அதிர்கின்றன என் செவிகள்

முதுகின் சதை கிழிந்தும்
ஒடுங்கிக் கிடக்கிறேன்
புறக்கணிப்பு என நினைத்திடுமோ
உயிர்பிழைத்தல் உரிமைமீறலல்ல
ஒடுங்குதல் இறைஞ்சுதலுமல்ல

அதன்மொழி எனக்குப் புரகிறது
என்மொழிதான் அதற்குப் புரியவில்லை

சீறல்களாலும்
சிறகடிப்பாலும்
எல்லைக்குத் துரத்தும் அலறல்களாலும்
எங்கும் நிாறந்த கழுகு அறியுமா
எனக்குக் காலில்லை என்னும் உண்மை

8. நகர்நீங்கு படலம்

தீநாக்கு மேலலைய
புகையடர்ந்து வான்நிரம்ப
சிதையென எரியும் சிறுசிறு குடிசைகள்

வெடிச்சத்தம் குலைநடுங்கும்
துயில்இழந்த இரவுகளில்
தரையதிர வந்தவர்கள் கை¢கு அகப்பட்டு
வதையுற்ற ரணங்கள் வலிக்கும்
சிறுஉரசல் மனம்கலைக்க
வெறிமிகுந்த அணிதுடிக்க
தீப்பந்தம் கைகள் மாறும்
குடியிருந்தோர் கூக்குரலை
குளிர்இரவில் காற்று சுமக்கும்

பிணங்களால் இந்நகரம் நிறையலாம்
இன்னும் வீடுகளில் ஆள்தேடி அலையலாம்
சாட்சியின்றி உழைத்தழிந்த
எம்தலைமுறைகள் எருவான
நிஜம்கூட மறையக்கூடும்
மீண்டுமொரு பொறிஎழுந்து
மிச்சமுள் ஆள்கூட்டமும் அழியலாம்

ஆகட்டும்
எடுக்க எதுவுமில்லை நண்பனே
நீகுலைத்த என்மனைவி மகள்
மீட்டெடுத்த துணேமுட்டை
வெறும்கைகள்
அவ்வளவுதான்

போகிறேன்

9. சுவரொட்டிகளின் நகரம்

சுவரொட்டிகளின் பின்னிருக்கிற மனநிலை
எப்பொழுதும் எனக்குப் புரிவதில்லை
வாழ்க அல்லது ஒழிக
சவால் அல்லது அறிவிப்பு
கோரிக்கை அல்லது நன்றி
வரவேற்றல் அல்லது வழியனுப்புதல்
எல்லாவற்றுக்குமே பஞ்சவர்ணச் சுவரொட்டிகள்
ஏன் ஆனது இப்படி

சுவர்கள், அவற்றின் நிறங்கள்
எதுவுமே தெரிவதில்லை இப்போது
சுவரொட்டிகளே கண்களில் குத்துகின்றன

அந்தப் பொருளற்ற வார்த்தைகள்
அந்தக் கூச்சந்தரும் குழைவுகள்
அந்தப் பச்சையான முகஸ்துதிகள்
நாக்குத் தொங்க வாலாட்டிக் குழையும்
நாய்போல நிற்கிறது ஒவ்வொரு எழுத்தும்

மெல்ல மெல்ல இந்கரமே
ஒரு சுவரொட்டி போல மாறிக் கொண்டிருக்கிறது

10. இருள்

கடிகரத்தின் மணியோசை கேட்டு
கண்திறந்த பெரும்பாலோர்
நடைக்காகத் தெருவில் இறங்குகிறார்கள்
பனியின் பன்னீர் சிதறி
மண்ணில் ஏறுகிறது சிலிர்ப்பு
எங்கும் பரவிய இருள்
மேகங்களோடும்
நட்சத்திரங்களோடும்
இணைக்கிறது வீடுகளை
ஒரு தெருவில் நுழைந்து சுற்றி
மறுதெரு முனையில் வெளிப்படும் பெரியவரும்
காதில் ஒலிவாங்கி பொருத்தி
ஒலிநாடா கேட்டபடி
ஓடிவரும் இளம்பெண்ணும்
பட்டாளத்து முகாமிலிருந்து வெளிப்பட்ட
பயிற்சி இளைஞர்களும்
வந்தாலும் வரலாம்
வராமலும் போகலாம்
விசையூட்டப்பட்ட எந்திரம் போல
தன்போக்கில் ஓடுகிறான்
அறிமுகம் விரும்பாத இளைஞன்
அனைத்தையும் கண்காணிக்கும்
ஆயிரம் விழிகொண்ட இருள்
செருப்புக்கடையின் முற்றத்தில்
தாமதமாக உறங்கப் போன
பிச்சைக்காரியையும்
அவளை அணைத்திருக்கும்
ஐந்து குழந்தைகளையும்
எழுப்பக் கூடாதென
இன்னும் நீள்கிறது இரக்கமுடன்

***
paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்