மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (தொடர்கவிதை -1)

This entry is part of 27 in the series 20021027_Issue

சேவியர்


1

சாலை நெடுகிலும்
இதய வடிவ பலுனெ¢கள்
இறைந்து கிடக்கின்றன.
வற்றிப் போகாத வண்ணங்களுடன்.

சாலை ஓரங்களில்
ஒற்றைக்காலுனெ¢றி நிற்கும்
மின்கம்பங்களின் இடுப்பிலும்,
சுவரொட்டிச் சாயம் பூசிய
சுவர்களின் முகத்திலும்
காதல் வாசனைக் காகிதங்கள்.

பூக்கள் அழகா
நாங்கள் அழகா
என்று
விரலிடுக்கில் சிவப்பு ரோஜாக்களும்,
கண்களுக்குள்
காதல் வேர்களும் வளர்த்து,
புன்னகையில் இதயங்களை
பறித்துச் செல்லும்
பூக்களின் மனித வடிவங்களாய்
அழகிய பெண்கள் வழியெங்கும்.

வண்டுக் கண்களின்
வாசகசாலையாகிக் கிடக்கிறது
வாழ்த்து அட்டைகள்
கடைகளின் உடைகளாய்.

பூமிக்கு திடாரென்று
பசுமைப் புயல் கரை கடந்ததா ?

எங்கெங்கு காணினும்
ஜோடிப் புறாக்களின்
சிறகு கோர்த்த சிலிர்ப்புப் பயணம்.

இன்று,
காதலர் தினம்.

மரங்களின் தலைகளுக்கு
சிட்டுக்கள் வந்து
பூச்சூட்டும் காலம்.
சிட்டுக்களைத் தேடி
மரங்கள் மாநாடு நடத்தும் மாதம்.

கடல் நீர் அருவிக்கு வந்து
முகம் கழுவிச் செல்லும்
கற்பனைக் காலம்.

நகரின் வீதிகளிலெல்லாம்
இன்று மட்டும்
காற்றின் மீது காதல் கலந்ததாய்
ஒரு
மல்லிகை வாசனை.

பேருந்து நிறுத்தங்களெல்லாம்
காதலர் நிறுத்தங்களாக,

ஒரு நாளுக்கு மட்டும்
விடுதலையான ஆயுள் கைதியாய்
அனைவர் முகத்திலும்
கிளர்ச்சிக் கதிர்கள்.

அந்த திரையரங்கும்
வழக்கத்தை விட விரைவாய்
இருக்கை விற்று காத்திருந்தது.

எங்கும்,
விரல் கடித்தும்,
ஐஸ்கிரீம் கடித்தும் நிற்கும்
காதல் பூக்களின்
அவசரக் கூட்டங்கள்.

அந்த அரங்கின் வாசலில்,
காதலனின் கண்களைக் கட்டி
கூட்டத்தில்
காதலியை கண்டுபிடிக்கும்
பருவப் போட்டி வேறு.

தன் குஞ்சின் குரலறியும்
தாய்க்குயிலின் லாவகம்,
காதலர்
காதுகளில்.
வேடிக்கை பார்ப்பவர்க்கோ
அது
வியப்பின் விஸ்வரூபம்.

எந்த மேகம் தன் சொந்த மேகம்
என்று
மழைக்கு வேண்டுமானால்
தெரியாமல் இருக்கலாம்,
எந்த தேகம் சரி பாதியான
அந்த தேகமென்று
ஆடவனின்
அகக் கண்கள் கூட அறியுமே.

காதலர் கும்மாளங்கள்
உற்சாகமாய் புரளுமிடத்தில்,
நகம் கடித்து
கருவிழிகள் கண்ணின்
இரு துருவம் ஓட ஓட
காத்திருக்கிறாள் பிரியா.

அழகு பிரியப்படும்
அழகுக்குச் சொந்தக்காரி.
சுடிதாருக்குள் சொருகப்பட்ட
ஓர்
பருவத் தோட்டம்.

அவள்
அழகென்று யாரும்
வாய் வழியே சொன்னதில்லை,

விழி கண்டார் விழியே கண்டார்,
பின் எப்படி
மொழியுரைக்கும் வழி காண்பார் ?

அவள் அத்தனை அழகு.

அந்த பச்சைக்கிளி
பாலாவின் உள்ளத்தில்
பார்வையாலேயே
பதுங்கு குழி பறித்து
கூடு கட்டிக் குடியிருக்கிறது.

பாலா எங்கே ?
அலுவலகத்தின்
அவசரம் முடிந்ததும்
திரையரங்கு வருவேன் என்றான்.

காத்திருப்பது சுகமென்பது
கவிதையில் மட்டும் தானா ?
புலனடக்கும் இந்தக் காத்திருப்பு
கர்ணனின் கவசமாய் கனக்கிறதே.
அவள் மனது பேசியது.

அவன் அருகில் இருந்திருந்தால்
பூமிக்கு வெளியே சென்று
காதலை
ரசிக்கலாம்.

தனிமையில் இருக்கும்
என் பூமி மட்டும்
மூச்சிரைப்பதால் மெதுவாய்
நடக்கிறதா ?
நேரம் கூட நகரவில்லையே.

ஒருவேளை
உள்ளுக்குள் ஒளிந்திருந்து
கண்ணாமூச்சி ஆடுகிறானா ?

சட்டென்று கண்பொத்தி
தலை திருப்பிச் சிரித்து
திடுக்கிட வைப்பது
திருட்டுப் பயலுக்கு
விருப்பமான விளையாட்டாச்சே.

முன்பு ஒருமுறை,
அலைகள் சிரிக்கும் கரையில்
என் காத்திருப்பின்
பட படப்பை
படகுக்குப் பின்னிருந்து
படம் பிடித்து மகிழ்ந்தவனாச்சே.

நினைவுகள் அவளை
சிரிக்க வைத்தன.

ஒரு,
தொலைபேசிக் காதால்
தொட்டுப் பார்ப்போமா ?
என்று யோசித்தவளுக்கு
தொலைபேசி
தொலைவில் கூட தென்படவில்லை.

யோசனையில் மண்டியிட்டு
நினைவு பொறுக்கிக்
கொண்டிருந்தவளுக்குள்
மலையாய் விழுந்தது அந்தச் சத்தம்.

எங்கும் புகை,
பரபரப்புக்கிடையில் கால்கள்
எங்கெங்கோ ஓடுகின்றன.

திரையரங்கு வாசலில்
வெடிகுண்டு வெடித்திருக்கிறது.
திட்டமிட்ட தீவிரவாத்தின்
திமிர் செயல்.
யாரோ பேசுகிறார்கள்.

ஆங்காங்கே அலறல்கள்,
திரையரங்கு வாசலில்
நசுக்கப்பட்ட பூக்களும்
குருதி தோய்ந்த அட்டைகளுமாம்.

எப்படித்தான்
தீவிரவாதிகளின் இதயம்
தீர்மானமெடுக்கிறதோ ?

தங்கமீன்களின் தலைகளை
வெட்டி
சந்தைக்கு அனுப்பி வைக்க,
பட்டாம்பூச்சி இறகுகளில்
பட்டாக்கத்தி வைக்க.

யாரைத்தான்
தீவிரவாதிகள் தீர்ப்பிடுகிறார்களோ ?

கலவரக் கண்களுடனிருந்த
கூட்டம்
பிரியாவை
வாசலிலிருந்து
சாலைக்குள் துரத்தியது.

அருகில் எங்கேனும்
வெடிகுண்டுகள் இருக்கலாம்,
இன்னும் அவை
வெடித்துச் சிதறலாம்,
பரபரப்புக் குரல்களின் பயத்தில்…

பிரியா
எதிரே வந்த ஆட்டோவில்
அனிச்சைச் செயலால்
ஏற்றப்பட்டாள்.

இனியும் வெடிக்குமா,
வீடு போய் சேரும் வரை
ஆபத்து இல்லாதிருக்குமா ?

பிரியாவின் சிந்தனைகளையும்
ஏற்றிக் கொண்டு
ஆட்டோ விரைந்தது.

வீட்டை நெருங்கியபோது
பிரியா வுக்குள்
அந்த எண்ணம்
எரிகல்லாய் விழுந்தது …

பாலா எங்கே ?

எனக்கு முன்னால்
அரங்கில் எங்கேனும் காத்திருந்தானோ ?
விபத்துப் பகுதியில்
விழுந்திருப்பானோ ?

எப்படி மறந்தேன்,
நான் மட்டும் இங்கே பறந்தேன்.
என்
பாலா எங்கே ?

****

அடுத்த வாரம் இதே தொடர்கவிதையைத் தொடர்பவர் – கோபால்
***

Series Navigation