முதியவனை நினைவிருக்கிறத ‘ ?

This entry is part of 35 in the series 20021022_Issue

எட்வின் பிரிட்டோ


ஓ தமிழனே!
நின்றும், இருந்தும், நடந்தும், கிடந்தும்
மகிழ்ந்திருந்த தமிழ் மண்ணை விடுத்து
முச்சந்தியில் நீ நிற்க வைத்தவோர்
முதியவனை நினைவிருக்கிறதா ?

கொடிறுவுடைக்கும் கூன் கையற்கென்று
கொள்ளுப் பாட்டனவன் சொல்லிப் போனதையன்றோ
தேம்ஸ் நதி மார்க்ஸும், வால்கா நதி லெனினும்
நேற்றைக்குச் செய்து முடித்தனர்.

ஈரடியின் ஒவ்வொரு எழுத்திலுமவன்
உற்பத்திச் செய்த மின்சாரம்,
பயன்பட்டதென்னவோ பக்கத்து
நாடுகளுக்கு மட்டும்தான்.

களைதாக முள்மரம் கொல்லச் சொன்ன
அந்தக் கிழக் கவிஞனின் தேசம்,
கோடரியால் பிளந்தல்லவோ வாங்கி வ்ந்தது
சுதந்திரச் சுவாசத்தை.

மதத்தின் பெயரால் மாலைச் சூடி
மனிதம் தின்கின்றன,
அறிவுத் தீக்குச்சிக்கவன் தின்னக் கொடுத்த
சாக்கடைச் சிந்தனைகள்.

சங்கங்கள் அமைத்தும், சான்றிதழ்ப் பெற்றும்
சாதனைகள் செய்கின்றன,
பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்றச்
சாட்டையடிகளால் அவன் விரட்டிய சாதிகள்.

ஓ தமிழனே!
நாம் முன்னம் செய்த பயனல்லவோ
அந்த மூத்தோன் நமக்கு ஞானப்பாலூட்டியது!
போதும், போதும்
தமிழுக்கும் அவனுக்கும் நாமிழைத்த இழுக்கு.
முடிவெடுப்போம் இன்றே.
முப்பாலை முழுவதும் புரிந்து கொள்ளும்வரை
மூடி வைப்போம் மற்ற நூல்களை.

***
ebritto@lucent.com

Series Navigation