பண்டிகையைப் போல் வரும் புளிக்காரன்

This entry is part of 27 in the series 20021001_Issue

வீணாப்போனவன்


வருஷத்துக்கு ஒரு முறை வருவான்,
பண்டிகையைப் போல், அந்த புளி விற்பவன்.
அசல் ஆந்திராக்காரன்.
சைக்கிளை வீட்டு காம்பவுண்டுக்குள்
நிறுத்தி விட்டு தாத்தாவுடன் வியாபாரம் செய்வான்,
வேப்பமர நிழலில்.
அது ரொம்ப நேரம் பிடிக்கும் விவகாரம்.
தெலுங்கில் பேசுவார் அவனுடன்.
அவன் சொன்னதில் நாலில் ஒரு பங்கில் ஆரம்பிப்பார்.
எங்களுக்கெல்லாம் பயமாய் இருக்கும்.
விலை தீர்மானித்தபின் ஒரு கிலோ புளியை
ஒரு பழைய பேப்பரில் சுருட்டி என்னிடம் கொடுப்பார்.
நான் போய் நாடார் கடையில் எடை சரி பார்த்து
வர வேண்டும்.
வாங்கிக் கொண்டு போய் ரெண்டு தெரு சுற்றி விட்டு
சரியாக இருக்கிறது என்று சொல்லி விடுவேன்.
அது வரையிலும் அவன் சொம்பில் தண்ணீர் வாங்கிக்
குடித்து விட்டு, தாத்தாவுடன் பேசிக்கொண்டிருப்பான்.
சைக்கிளை வெளியே எடுத்துக் கொண்டு போனால்,
மீண்டும் ஒரு வருஷம் ஆகும் அவனைப் பார்க்க.
தாத்தா செத்துப் போன வருஷமும் வந்திருந்தான்.
சொன்னோம்.
எப்போ, எப்பிடி என்று கேட்டான்.
தமிழில்தான் பதில் சொன்னோம்.
தண்ணீர் கேட்டான்.
குடித்து விட்டுக் கொஞ்ச நேரம் அமைதியாக
உட்கார்ந்திருந்தான்.
அப்புறம் எழுந்து போனான், புளி விற்காமலேயே.
நாடார் கடைப் புளி நன்றாகவே இல்லை என்று
ஒரு மனதாய்ச் சொன்னோம் வீட்டில்.
***
(c) veenaapponavan@yahoo.com

Series Navigation