மனிதமறை

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

பசுபதி


வையம் எங்கும் வன்முறையே –நம்
. . வாழ்வைக் கருக்கும் பெருங்கறையே !
செய்தி எல்லாம் வன்செயலே ! — சின்னத்
. . திரையும் ரத்தம் மிகுவயலே ! (1)

காந்தி மகானைப் புதைத்திருந்தால் — இன்று
. . கண்ணீர் உகுப்பார் கல்லறைக்குள் ;
சாந்தி சூக்தம் சொன்னமுனி — பலரைச்
. . சாம்பல் ஆகச் சபித்திருப்பார் ! (2)

குணவான் அறியான் சுடுசொல்லை ! — ஒரு
. . கோழை புரிவான் சுடுதொழிலை !
வணங்கும் தெய்வம் மகிழ்ந்திடுமோ ? — தீவிர
. . வாதம் மதத்தை அழித்திடுமோ ? (3)

பச்சைப் புளுகு ‘கற்பிழப்பு ‘ ! — அது
. . பலவந் தத்தின் உடன்பிறப்பு !
நச்சுப் பாம்பாம் வன்செயற்கு — பால்
. . நல்கும் மதங்கள் நமக்கெதற்கு ? (4)

மனங்கள் மாறா சொற்சமரால் ! — விரைந்து
. . வராது சொர்க்கம் தற்கொலையால் !
சினங்கள் சிதையால் குளிராது! — வன்
. . செயலால் மதமும் வளராது ! (5)

குறிக்கோள் கொள்வோம் அன்புநெறி ! — இது
. . குறைக்கும் உலகில் துன்பவெறி ;
மறுப்போம், மாய்ப்போம் வன்மைமுறை ! -புவியில்
. . மலரச் செய்வோம் ‘மனித ‘மறை ! (6)

***
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி