ஏன் ?

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

நம்பி


வாழைத்தண்டு வித்யாவுக்கும், கேடி கணேஷுக்கும் அடைமொழி வந்ததற்கு அந்தக் கல்லூரியில் காரணம் உண்டு. இருவருக்கும் கசமுச என்று கணேஷ் கும்பல் புரளி கிளப்பியிருந்தது. வித்யா கடக்கும்போது ‘வாழைத்தண்டு ‘ என குசுகுசுத்தால் சட்டையே செய்யாமல் சிலிப்பிவிட்ட குதிரை மாதிரி நடந்து போவாள். கணேஷிடம் கேட்டால் எப்போதும் போல் நமுட்டு சிரிப்புடன் நழுவிவிடுவான். அவனிடம் உள்ள புதிர் வாய் ஓரத்தில் எப்போதும் ஒட்ட வைத்தது போலிருக்கும் அந்த நமுட்டு சிரிப்புதான். வஞ்சகம் சிந்திக்கிறானா, வாய்மைக்கு துணை போகிறானா என்று கண்டுபிடிக்க முடியாது. புரளி உண்மையா என்பது வித்யாவுக்கும் கணேஷுக்கும் மட்டுமே வெளிச்சம்.

கணேஷுக்கு கல்லூரியில் அப்படி ஒன்றும் கெட்ட பெயர் கிடையாது. அவனது அப்பாவிடம்தான் கல்லூரி நிர்வாகம் இரண்டு பேரூர்திகளை தினமும் வாடகைக்கு எடுத்திருக்கிறது. ஓட்டுனர் வராத நாட்களில் காக்கி சட்டையை மாட்டிக்கொண்டு வண்டி ஓட்டுவான். ஓட்டும்பொழுது கீற்றாக நெற்றியில் குங்குமம் வைத்திருப்பான். தொழில் பற்று. அதுவும் மாணவிகளை மட்டும் ஏற்றிச் செல்லும் வண்டியின் ஓட்டுனர் அடிக்கடி விடுப்பு எடுப்பதும், அதற்கு இரட்டிப்பு சம்பளம் கிடைப்பதும் தனிக்கதை. கல்லூரி வளாகத்தில் வண்டியை நிறுத்தியதும் காக்கி சட்டையை மடித்து வைத்துவிட்டு, குங்குமத்தை அழித்துவிடுவான். ஆசிரியர்களிடம் பேசும்போது கையை கட்டியபடி பணிவாகத்தான் பேசுவான். வகுப்பில் விஷமம் கிடையாது. யாராவது விரிவுரையாளர் கேள்வி கேட்டு தொந்தரவு செய்தால் மீண்டும் அந்த வகுப்பிற்கு செல்லமாட்டான். மற்றபடி மறைந்திருந்து திட்டுவது, கரிக்கட்டையால் கழிப்பிடத்தில் கிறுக்கவது என்றெல்லாம் செய்யாமாட்டான். ரொம்பவும் சீண்டினால்தான் ஆள் வைத்து அடிப்பான். வித்யா மகேந்திரனிடம் வழிவது அவனை சீண்டியது.

மகேந்திரன் அந்தக் கல்லூரியில் விரிவுரையாளர். அப்பழுக்கில்லாத தோற்றம். மாசு இல்லாத மனசு. விவேகானந்தரின் ஆண்மை, வித்யாகரின் தாய்மை என்று பல முகங்கள் அவருக்கு. ஆசிரியாரக மட்டுமல்ல ஒரு வழிகாட்டியாகவும் இருந்தார். வாங்கும் சம்பளத்தில் தனது செலவுக்கு சொற்பமாக எடுத்துக்கொண்டு மீதியை தன்னை வளர்த்த ராமகிருஷ்ண மடத்திற்கு அனுப்புவார். அவர் சேர்த்து வைப்பதற்கோ, செலவு செய்வதற்கோ யாருமில்லை. அவரைச் சுற்றி மாணவர்கள் கும்பல் எப்போதும் இருக்கும்.

இந்த கணேஷ், வித்யா புரளி நாளுக்கு நாள் கண், காது முளைத்து அடங்காத காட்டுச் செடியைப்போல் வளர்ந்தது. மகேந்திரன் ஒரு நாள் கணேஷை அழைத்து, ‘என்ன இதெல்லாம் ?. கேட்கவே அசிங்கமா இருக்கு. உடனே இத நிறுத்து. அந்த வித்யா வேற பாவம் ‘ என்றார்.

‘யாரு இப்படி புரளி கிளப்புறதுன்னு தெரியல. நான் உடனே கண்டுபிடிச்சி நிறுத்திடேறேன் ‘ என்று நமுட்டு சிரிப்புடன் சொன்ன கணேஷ், இரண்டே நாளில் அமுக்கிவிட்டான். பதிலாக ‘மகேந்திரன் ஆய்வுக்கூடத்தில் வைத்து ப்ரியாவின் தாவணியை உருவிவிட்டார் ‘ என்ற வதந்தி பரவியது. வளாகத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் மதன்பாப் கணக்காய் சிரிக்க, கல்லூரி நிர்வாகம் விசாரணைக் குழு அமைத்தது. ப்ரியா, ‘சிவக்கிழம் சூரியநாராயணனை சாரணர் அமைப்பு தொடர்பாக சந்திக்க போனபோது நழுவிய தாவணியை சரிசெய்யும் சாக்கில் அங்கும் இங்கும் தொட்டார் ‘ என்று போட்டுக்கொடுத்துவிட்டாள். பிறகு நிர்வாகம் கிழத்தை நீக்கிவிட்டு, மகேந்திரனை சாரணர் அமைப்புக்கு பொறுபாளாராக நியமித்தது.

மகேந்திரன் சாரணர் அமைப்புக்கு பொறுப்பேற்றதும் நார்த்தாமலை கிராமத்துக்குச் சென்று நான்கு நாட்கள் கூடாரமிட்டு தங்கி சேவை செய்ய திட்டமிடப்பட்டது. மாணவிகளுக்கு, கைநாட்டு வைப்பவர்களுக்கு கையெழுத்து போட கற்றுக்கொடுத்து நாட்டில் கற்றோரின் எண்ணிக்கையை உயர்த்திவிட்டு தினமும் மாலையில் விடுதிக்கு திரும்பிவிட அனுமதிக்கப்பட்டது.

நார்த்தாமலை, திருச்சி – புதுக்கோட்டை சாலையில் களமாவூர் தாண்டி திடாரென்று திரும்பும் மண்சாலையில் மூன்றாவது மைலில் இருந்தது. விரிந்த ஆலமரம் வரவேற்றது. அருகிலேயே ஊருணி. அங்கேயே கூடாரம் போடப்பட்டது. இடப்புறம் வனத்துறைக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் சோதனை முயற்சியாக பழக்கன்றுகள் வளர்கின்றன. அதைத்தாண்டி மலைமீது தொலைத்தொடர்பு கோபுரம். வலப்பக்கமாக புஞ்சை வயல் வரப்புகளும், ஆழ்கிணறுகளும். புழுதி பறக்க வளைந்து செல்லும் சாலையில் முதலில் கோயிலும், அதையொட்டி தொடக்கப் பள்ளியும், திடலும் அப்புறம் குச்சி வீடுகளும் குடிசைகளும், சுன்னாம்பு தடவிய அஞ்சலகமும், தந்தி தாள் தாறுமாறாக கிடக்கும் ஒரு பெட்டிக்கடையும் இருக்கின்றன. அதற்கு அப்பால் சிறு குன்றுகளும் பாறைகளும் கடந்து போனால் ஒரு சுனையும், கல் மண்டபமும் இருக்க அதைத்தொடர்ந்து வரும் புதர் மண்டிய காட்டுக்குள் மயில்களும், முயல்களும் கவலையின்றி திரிகின்றன. வறட்சியும், வனப்பும் அருகருகே இருக்கும் கிராமம்.

மாணவர்கள் கிடார், உறுமி, குட்டி பாட்டில்களில் விஸ்கி, விருந்து என அவரவர்க்கு தேவையானதை எடுத்து வந்திருந்தனர். பகலில் குப்பைகளை பெறுக்குவது, ஊருணியை சுத்தம் செய்வது, செயற்கை வைரம் பட்டை தீட்டுவது எப்படி என்று சொல்லிக்கொடுப்பது, மாலையில் அறிவொளி இயக்கம் நடத்துவது என பொழுது போனது. மகேந்திரன் மாலையில் சுனையில் குளித்துவிட்டு, கல்மண்டபத்தில் தியானம் செய்வார்.

மூன்றாவது நாள் குமரன் தான் கொண்டு வந்திருந்த விஸ்கியை பாண்டியன், ரகு, பாபு மூவரும் குடித்துவிட்டு அதற்கு பதில் தண்ணீரை நிரப்பியது தெரியாமல் அதை விஸ்கி என்றே நினைத்து குடித்துவிட்டு அன்று முழுவதும் கிறக்கம் பிடித்து அலைந்து கொண்டிருந்தான். ஓட்டுனருக்கு விடுப்பு கொடுத்துவிட்டு மாணவிகளை ஏற்றிப்போக மதியமே வண்டியை ஓட்டி வந்திருந்தான் கணேஷ். மாலை மாணவிகள் விடுதி திரும்ப தயாரானபோது வித்யா மகேந்திரனை ஆல மரத்துக்கு அந்தப் பக்கமாக அழைத்து தனியாக பேசினாள். திரும்பி வரும்பொழுது மகேந்திரன், ‘ஆமாம். அதான் சரி. அப்படியே செய்யலாம் ‘ என்று தலையை ஆட்டியபடியே வந்தார். கணேஷை கூப்பிட்டு வண்டியை எடுக்கச்சொல்லி மாணவிகளை ஏறச்சொன்னார். க்ிறக்கத்தில் இருப்பதாக நினைத்து அடம்பிடித்த குமரனை வேண்டமென்று சொல்லிவிட்டு வேறு மூன்று மாணவர்களையும் அழைத்துக்கொண்டு தானும் ஏறிக்கொண்டார்.

திருச்சி சாலையில் வண்டியை நிறுத்த்ி, மாணவிகள் எல்லோரையும் அங்கிருந்து தீரன் சின்ன மலையிலும், மருது பாண்டியரிலும் ஏற்றி அனுப்பிவிட்டு கூடாரத்திற்கு திரும்புகையில் இருட்டிவிட்டது. கணேஷ் அப்பொழுதும் நமுட்டு சிரிப்போடுதான் இருந்தான். முகத்தில் ஏமாற்றமே தெரியவில்லை. கணேஷ், ‘என்ன கூடாரத்தில சேர்த்துக்க மாட்டாங்கன்னு தெரியும். நான் வண்டியிலேயே படுத்துக்கிறேன் ‘ என்று படுக்கையை தட்டிப்போட்டான். ஆனால் இந்திரா என்ற அந்த ஊர் பெண்னை கணேஷ் கணக்கு பண்ணிவிட்டதாக குமரன் உளறிக்கொண்டிருந்தான்.

சுட்ட அப்பளம் போல் முழு நிலா. சுற்றிலும் சோளப் பொறியை வாரியிறைத்து கிடக்கிறது. மகேந்திரன் சுனையில் அலுப்பு தீர குளித்துவிட்டு மண்டபத்தில் தியானிக்க உட்கார்ந்தார். அருகிலிருந்த மறைவில் முயங்கும் முனகல் கேட்டது. ஆன் குரல் கணேஷைடையது போலிருந்தது. விருட்டென்று எழுந்து வேகாமாக கூடாரத்தை நோக்கி நடந்தார். ஒரு பத்தடி நடந்திருப்பார். காலில் சுருக்கென்று ஏதோ குத்தியது. செருப்பை மண்டபத்திலேயே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வர திரும்பி நடந்தார். அவர் திரும்பி வருவதை பார்த்த கணேஷின் முகத்தில் நமுட்டு சிரிப்பு மறைந்தது. இந்திராவை வேறு வழியாக அனுப்பிவிட்டு காத்திருந்தான். வித்யாவை அவர் வளைத்துவிட்டதாக குமரன் உளறியது வேறு கணேஷின் வெறியை அதிகமாக்கியது. எல்லாவற்றிற்கும் கணக்கு தீர்த்துவிடலாம்.

நீண்ட நேரமாகியும் கூடாரத்திற்கு திரும்பாததால் மாணவர்கள் மண்டபத்திற்கு தேடி வந்தபோது மகேந்திரன் செத்துப் போயிருந்தார். கட்டு விரியனோ, நாகபாம்போ கடித்திருக்கும் என்று ஊர்க்காரர்கள் சொன்னார்கள். உடலில் இருந்த சிராய்ப்புகள் தடுமாறி விழுந்ததில் ஏற்பட்டிருக்கும் என்றான் கணேஷ். பின்னர் தகவலறிந்து வந்த கல்லூரி நிர்வாகமும் அவர்களுக்கு ஒத்தாசையாக வந்த கணேஷின் அப்பாவும் செய்தி வெளியே பரவவேண்டாம் என்று நினைத்ததால் கொலையாக இருக்கலாம் என்று சொன்னவர்கள் கூட அடங்கிப்போக பிரச்சனயின்றி எரிந்து போனார் மகேந்திரன்.

இது நடந்து பத்து வருடம் ஆகிவிட்டது..

இப்பொழுது குமரன் தெலைத்தொடர்பு கோபுரத்தில் கருவிகளை ஆய்வு செய்ய நார்த்தாமலைக்கு வந்திருந்தான். ஆமாம். வெறும் தண்ணியை குடித்துவிட்டு நாள் முழுதும் கேரிகொண்டு அலைந்தானே அந்த குமரன்தான். புழுதி சாலை மறைந்து தார் போட்டிருக்கிறது. ஆலமரம் இன்னும் விரிவாகியிருக்கிறது. அருகில் கட்டப்பட்டிருந்த நிழற்குடையில் மகளிரணித் தலைவி இந்திராவை வரவேற்று சுவரொட்டி இருக்கிறது. நிழற்குடை மேல் ‘பேராசிரியர் மகேந்திரன் நினைவாக ‘ என்ற எழுத்துக்களில் ‘க ‘வை காணவில்லை. உள்ளே, ‘எத்தனை காலம் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம் – உபயம். கணேஷ் ‘ என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருக்கிறது. மேலும் விசாரித்ததில் அமைச்சர் கணேசன் ஊரில் சின்னதாக ஒரு வீடும் கட்டியிருப்பதும், மனைவி வித்யாவுக்கு தெரியாமல் அங்கு வந்து போவதும் தெரிந்தது.

***

nambi_ca@yahoo.com

Series Navigation

நம்பி

நம்பி

ஏன் ?

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

பவளமணி பிரகாசம்


கரை காணா கடலென
அறிவியல் வளர்ந்திருக்கு;
கணிணியின் உபயம்:
உள்ளங்கையில் உருளுது
உலகமெனும் உருண்டை;
உரித்த வாழைப்பழமாய்
ரெடியாய் எதுவும் கிடைக்குது;
ஏறி நின்றால் போதும்
எஸ்கலேட்டர் அதுவும்
இலகுவாய் எட்டுது இலக்கை;
முட்டிக்காலை மடிக்காமல்
மாடிகளை கடக்கலாம்
லிஃட் அதனின் உதவியால்;
சுகமாய் வழுக்கும் சாலையில்
சொகுசாய் வாழ்க்கை பயணம்;
சோகம் இன்னும் மறையலை,
ஏக்கம் நிறைய இருக்குது,
வன்மம் ஏனோ வளருது,
சுயத்தை மட்டும் நினைக்குது,
நேயம் காட்ட மறக்குது,
சும்மா கிடைக்கும் சுகங்களால்
மூட்டுவலியும், ஊளைச்சதையும்,
வெட்டி, வக்கிர சிந்தனையும்
மெத்த வளர்ந்து போனது;
பழைய உழைப்பு மறைந்ததால்
வேர்வை சிந்த ஜிம்மிருக்கு;
வளர்ச்சி காணும் மானிடமே
விவேகம் மறந்து போவதேன் ?

***
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்