அக்கரைப் பச்சை

This entry is part of 28 in the series 20020924_Issue

அனந்த்


எல்லாமே இந்நாட்டில் மோசம்- எனக்(கு)
… என்றுதான் கிட்டுமோ அமெரிக்க வாசம் ?
(எல்லாமே இந்நாட்டில்…)

பள்ளிசெல் லும்அந்த நாளாய் – இந்தப்
… பாழும் நினைப்பெனைக் கொட்டுது தேளாய்
மெள்ள வளர்ந்திட்டேன் ஆளாய்- இந்த
… வேதனை யின்னும்தா ளேனிது கேளாய்:

எங்கும் நிறைந்திடும் ஊழல் – அதை
… எடுத்துரைத் தால்காவல் படையினர் சூழல்
பங்குச்சந் தைபடு தாழல் – பணம்
… போட்டவர் வாழ்க்கையும் பள்ளத்தில் வீழல்

துண்டுபோட் டோரெல்லாம் கூடி- நாட்டைத்
… துண்டாக்கிச் சேர்த்திடு வார்பலகோடி
கண்டு மனம்சலித் தாச்சு – இனிக்

… காணவோர் கேடுமில் லையென வாச்சு

அமெரிக்கா கானடா எல்லாம்- ஆகா!
… அமரர்கள் வாழ்கின்ற பூமியென் றெல்லாம்
‘குமுத ‘த்தில் காணும்போ தெல்லாம்-குஷி
… கூடவே ஏறியென் வாயெல்லாம் பல்லாம்! (எல்லாமே
இந்நாட்டில்…)

‘கணினிப் படிப்பினை இன்றே -அஞ்சல்
… கல்லூரி மூலமாய் கற்றிட்டால் நன்றே;
பணிகள் பலவுள ‘ என்றே- பல
… பேருஞ்சொன் னாரதைக் கேட்டுப்ப யின்றே

பாலொடு தேனோடும் வீதி – இளம்
… பாலகர்க் கும்மரி யாதைசெய் நீதி
பார்க்கு மெவருமோர் சாதி -என்று
… படித்ததை என்றன் மனத்தினில் ஓதி

அமெரிக்கா வந்துநான் சேர்ந்தேன் – அங்கென்
… ஆசைக் கனவை நினைவினில் கூர்ந்தேன்
செமையாய் நடந்தெல்லாம் பார்த்தேன் – வந்து
… சேர்ந்தாறு நாளுக்குள் கைக்காசு தீர்த்தேன்
(அமெரிக்கா வந்துநான்..)

நாட்கள் பலவான பின்னும் – நானும்
… நல்லதாய் ஒன்றையும் கண்டில்லை இன்னும்
ஆட்கள் பலர்துணை கொண்டு – மாதம்
… ஆறான பின்பொரு வேலையைக் கண்டு

இன்றோடு நம்துயர் போச்சு- அப்பா!
… என்றுநான் விட்டஅந் நிம்மதி மூச்சு
சென்று மறைவதன் முன்னே – என்றன்
… சீட்டைக் கிழித்துத்தந் தான்;விதி என்னே!

கணினிக்கு எமனென்ற ஆண்டு – தந்த
… கஷ்டமெல் லாம்என்றோ தீர்ந்தது கொண்டு
பணியாள் குறைப்பில்என் வேலை – நடு
… பாதியில் போகக்கண் டேன்தெரு மூலை (அமெரிக்கா
வந்துநான்..)

இந்திய நாட்டினை வைவேன் – ஐயோ!
… இப்போதின் னாட்டினில் என்னதான் செய்வேன் ?
சொந்த நிலமென்றும் மேலாம் – என்ற
… சொல்லதின் உண்மைக்கென் வாழ்வொரு கோலாம்

எல்லாமே அக்கரைப் பச்சை – என்ற
… எண்ணத்திலே எழவேண்டும் நம்இச்சை
நல்லவை உண்டெங்கள் நாட்டில் -என்ற
… நம்பிக்கை வித்தைவி தைப்போம்நம் வீட்டில் (எல்லாமே
அக்கரை…)

ananth@mcmaster.ca

Series Navigation