கரடி பொம்மை

This entry is part of 25 in the series 20020902_Issue

ஜெயந்தி சேது


என்றாவது தொட்டு பார்த்திட வேண்டும்
எசமானி வீட்டு கரடி பொம்மையை..
வெண்பஞ்சு பொதி ஒன்றை வெட்டி எடுத்தாற்போல
‘உசாலா போட்ருப்பாகளோ ‘ அப்பாவியாய் கேட்டிருக்கிறேன்..

வெள்ளை வெளேர் உடம்பும்
கறுப்புத் திராட்சை கண்களும்
முத்தமிட தோன்றும் மூக்கும்
சிவப்பு ரிப்பனுடன் கழுத்துமாய்
சிரித்துக் கொண்டே வருகிறது கனவில்
தொடத்தொட குறுகுறுத்து சிலிர்ப்புடன்
தூங்குவேன் மரப்பாச்சி பொம்மையுடன்..

விலை என்னவென்று ஒரு நாள் கேட்க
விட்டேத்தியாய் அம்மா சொன்னாள்
‘நம்ம ஒரு வருஷ கூலி என்று.. ‘
விலை தெரிந்தும் விடமுடியவில்லை..

வெள்ளை பொம்மையுடன் கலர் கனவில் இருந்தபோது
வெடியாய் கேட்டது அம்மாவின் அழுகை..
விதிர்விதிர்த்து விழித்துப் பார்க்க
விளக்கொளியில் வேரறுந்த மரமாய் அப்பா!
கதறியபடி அம்மா சொன்னாள்
‘ வெறகொடிக்க போனப்ப கரடி அடிச்சிடுச்சுனு… ‘

இப்பொதெல்லாம்
கரடி பொம்மை தொடும் நினைவு வருவதேயில்லை
கரடி தொட்ட அப்பாவை பார்த்ததனால்……

-jeyanthi
jsethu@qwest.com

Series Navigation