தாகம்

This entry is part of 27 in the series 20020819_Issue

சுந்தர் பசுபதி


சாலையில் வாகனம் சற்றே முந்தினும்
சரசரவென்று கிளம்பும் கோபமும்
கற்ற வித்தை குறைவெனினும் நண்பன்
குரலேழுப்பி பேசுகையில் வரும் புழுக்கமும்
மந்தையில் காணாது போகாமல் தனித்து ஒளிர
உள் எரிந்துகொண்டே இருக்கும் வெறியும்
கூட்டமாய் ஓடுகையில் இலக்கு பற்றியெண்ணாது
எதிராளியின் வேகத்தினான பதட்டமும்
பெரியரென சொல்பவர் சிறுமையின்
அடையாளமாய் இருத்தலால் வரும் சீற்றமும்
கட்டியதோடு பெற்ற செல்வமும் அகத்திருக்க
கணநேர தவறலில் தறிகெட விழையும் சிறுமனமும்,
உயிரனைய உறவின் சுயநலம் புரியினும்
கோழையாய் எதிர்கொள்ளும் புரியாப் பொறுமையும்

சரியா…..சரியா…சரியா…. ? ?

பதில் கிடைக்கும் நேரம்
அவசியம் இல்லாது போகும்..
வரும் தலைமுறைக்காய் பதில்களை ஈந்தால்
தந்த பதில்களில் நூறு கேள்விகள் முளைத்தெழும்…

கேட்டதும், கிடைத்ததும் , தேடியதும் வீணென
மன்ணில் மண்டியிட்டழ …
காதருகில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்கும்
சிரித்த குரல் இதுவே வாழ்க்கையென விளம்பிப் போகும்.!!

***
sundar23@yahoo.com

Series Navigation