நிழல் பூசிய முகங்கள்

This entry is part of 24 in the series 20020805_Issue

சேவியர்


0

நிஜமே அழகு !!!
இயல்பே அழகு…

தென்னைக்கு இலையும்
ஆலுக்கு விழுதும்
இயற்கை அளித்த
அற்புதப் பரிசுகள்.

தென்னையின் தலையில்
ரோஜாப்பூக்களை
கற்பனை செய்வதே
ஒத்துவரவில்லையே.

படைப்பின் மகத்துவம்
இயல்புகளில்
அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
அதை
போலிச் சாயம் பூசி
புதைத்து விட வேண்டாம்.

புல்லாங்குழலுக்கு தான்
துளைகள் தேவை,
மிருதங்கத்துக்கு அல்ல.

அத்தனை கருவிகளும்
ஒரே இசை தந்தால்
இசையை மீறி
இரைச்சலே தங்கும்.

காற்றின்
அத்தனை துகளிலும்
ஆக்ஸிஜன் ஏறினால்
பச்சையம் தயாரிக்கும்
மூலப்பொருளுக்கு
பயிர் எங்கே பயணமாகும் ?

உன்
பலம் தேடிய பயணம்
தொடர்வதே சிறந்தது,
பிறர் பலம் கண்ட
பயம் அல்ல.

பூவுக்கு
இதழ் அழகென்றால்
கடிகாரத்துக்கு முள் அழகு!

சகதிக்குள் வசிப்பதே
சிப்பிக்கு வசதி!
அது
மேல் மிதக்கும்
தாமரை கண்டு
தாழ்வு கொள்தல் தகுமா ?

புரிந்து கொள்
என் பிரிய நண்பா ..

நீ
யாரையோ பார்த்து
பிரமிக்கும் அதே வினாடியில்,
யாரோ
உன்னைப் பார்த்தும்
பிரமிக்கிறார்கள்.

0

சேவியர்
Xavier_Dasaian@efunds.com

Series Navigation