‘உயிர்க் கவிதை ‘

This entry is part of 22 in the series 20020707_Issue

கரு.திருவரசு


பூ

மொட்டா யிருந்தால் ஓரழகும்
முழுதும் மலர்ந்தால் ஓரழகும்
பட்டாய் விளங்கும் பளபளப்பும்
பனிநீர் முத்தின் மினுமினுப்பும்
பட்டால் சிலிர்க்கும் தென்றலினால்
பரப்பும் மணத்தின் புதுமயக்கும்
செட்டாய்ச் சேர்த்து வைத்திருக்கும்
சீதளப் பூவோர் உயிர்க்கவிதை!

குழந்தை

கைகால் அசைவில் சொல்லுதிரும்
கவிஞர்க் கவைநற் சீராகும்
தொய்வாய் நடக்க அடிபிறக்கும்
தொடையும் எதுகையும் உடன்நடக்கும்
பையல் அழுகை பண்ணாகும்
பால்வாய் உளறல் பொருள்சொல்லும்
தெய்வக் குழந்தைச் செயலெல்லாம்
சேர்ந்தால் அஃதோர் உயிர்க்கவிதை!

பெண்

பெற்றுக் கொடுத்த தாயாகிப்
பேணும் செயலில் பிறப்பாகிப்
பற்றுக் கோடாய் வாழ்விலொரு
பாதியை ஈவது பெண்மையுரு!
சுற்றும் வளியின் வண்மைசெஞ்
சுடரின் காக்கும் தன்மை,பார்
முற்றும் இயக்கும் மெல்லலையாய்
முகிழ்த்த பெண்ணும் உயிர்க்கவிதை!

உழைப்பு

பனிநீர்த் துளியின் தூய்மையினைப்
பழிக்கும் வியர்வைத் துளிகளிலே
முனிந்தே கதிர்சுடு மேனியிலே
முரட்டுக் கைகளின் அழுக்கினிலே
கனியா துடலம் கன்றிவிடக்
கறுத்துச் சுருங்கும் திரைகளிலே
மனிதப் பிறப்பின் உயர்வெல்லாம்
மணக்கும் உழைப்பும் உயிர்க்கவிதை!

இயற்கை

பிறப்பில் பிறப்பின் வளர்ச்சியிலே
பொழுதில் பொழுதின் சுழற்சியிலே
நெருப்பில் நெருப்பின் வெம்மையிலே
நீரில் நீரின் தண்மையிலே
புரப்பில் புரப்பின் விந்தையிலே
பொலிவில் பொலிவின் வகைகளிலே
சிறப்பில் சிறப்பின் செம்மையிலே
சிரிக்கும் இயற்கை உயிர்க்கவிதை!

***
thiruv@pc.jaring.my

Series Navigation