சுவாசம்

This entry is part [part not set] of 22 in the series 20020707_Issue

சேவியர்.


0

அவிழ்ந்து விழ
ஆசைப்படும்
அரைக்கால் சட்டையை
இடக்கையால் பிடித்து நடந்த
அந்த
பால்ய காலத்தில்,

ஆஜானுபாகுவாய்
தோன்றியது
மாமா வீட்டுப் பக்கத்து
மாமரம்.

மிகுந்த ஆழமாய்,
மிரட்டலாய் தோன்றியது
ஆலமர நிழலில் கிடந்த
அந்த
சர்ப்பக் குளம்.

தென்னை மரத்துக்கு
இத்தனை உயரமா ?
பேருந்துகள்
இத்தனை பெரிதா ?

எங்கள் வயல் தான்
எம்மாம் பெரிசு,
எங்கள் கிணறு தான்
என்ன ஆழம்…

எல்லா ஆச்சரிய முடிச்சுகளும்
என்
வாலிபப் பருவத்தில்
பட் பட்டென்று விலக
சட்டென்று சின்னதாகிப் போனது.

முடியாது எனும்
நிலையில்
பிரமிப்பூட்டுபவை எல்லாம்
முடியும் என்னும் காலத்தில்
சாதாரண
சங்கதிகளாகி விட்டன.

ஒருவேளை,
என் முதுமைக் கால
மரக்கட்டிலில்,
இயல்பாய்
சுவாசம் இழுப்பவர்களை
பிரமிப்போடு பார்ப்பேனோ
என்னவோ ?

0

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்