என்னுடல் மின்னுடல்

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

மு ரெங்கம்மாள்


(மின்னுடலை நான் பாடுகிறேன் – வால்ட் விட்மன்)
(I sing the body electric – Walt WHitman)

நான் அறைக்குள் நுழைந்தவுடன்
பேச்சொலிகள் நின்று போகும்
கண்கள் என்மீது மேயத் தொடங்கும்.
இத்தனைக்கும் நான் அழகில் சேர்த்தியில்லை.
கொஞ்சம் கறுப்பு –
‘மாநிறத்திற்குக் கொஞ்சம் தான் குறைவு உனக்கு.
சிவப்பெல்லாம் சும்மா – அதுகள் ஒன்றும் அழகில்லை.
ரத்தச் சோகை பிடிச்சதுகள் ‘
இது என் அம்மா.

உரக்கக் கூவும் உடலுமில்லை எனக்கு.

உடலை இறுக்கிப்பிடித்த மேல் சட்டையும்
தளர்ந்த பாவாடையும் தான் என் உடைகள்.
அம்மாவின் வற்புறுத்தலில்
தோளில் குவிந்து கிடக்கும் தாவணி.

பேச்சொலியை நிறுத்திய என் வரவு
தளர்ந்த உடல்கள் இறுக்கம் கொள்ளவும்
பேச்சின் திசை திரும்பி
என்னைப் பற்றியல்லாமல் பாவனை.
ஆனாலும்
என்னைப் பற்றித்தான் .

பயப்படாதே.

மின்னுடல் என்னுடல்.
தீண்டாமலே பரப்பும் வெப்பம்.

பயப்படாதே,

இந்த அதிர்வு உயிரைப் பறிக்காது
இந்த உஷ்ணம் உன்னைக் கருக்காது.
இந்த மின்பாய்தல் உயிரின் உள்ளே.
காந்தத்தை உருவாக்கும் காந்தம் போல
உன்னுடலும் மின்னுடல் ஆகும்.

நம் உடல் மின்னுடல் .

கிட்டே வா ஒரு ரகசியம் சொல்கிறேன்.

காதருகில் என் வாயைக் குவித்து
கண்களை மூடித் துய்ப்புடன் சொன்னேன்,
‘மின்னுடல் மட்டுமல்ல
என்னுடல்
தண்ணுடல் கூடத்தான். ‘
நீர்மை சுரக்கும் உயிர்த்தலம் சிலிர்க்க
கால்களை ஒன்றன் மேல் ஒன்று போட்டு இறுக்கியபடி
வடிந்த குரல் அவனைத் தீண்ட.

***

Series Navigation

மு. ரெங்கம்மாள்

மு. ரெங்கம்மாள்