எப்போது…

This entry is part of 26 in the series 20020525_Issue

கு.முனியசாமி


தங்கையின்
புத்தகப் பையில்
நோட்புக் ஒன்றில்
அழகிய கையெழுத்தில்
உனது பெயரைப்
பார்த்த பொழுதா…

பத்தாவதில்
பள்ளி யிலேயே
நீதான் முதல்வி
என்ற செய்தியை
தங்கையின் மூலம்
கேட்ட பொழுதா…

நீ படிக்கும்
கல்லூாியில் தான்
தானும்படிப் பேனென்று
அடம்பிடித்த தங்கைக்காக
அப்பாவிடம் பேசிய
அந்த நேரத்திலா…

பிறந்த நாளில்
பார்க்கும் ஆசையில்
தங்கை யோடு வந்தும்
பார்க்காம லேயெ
வாசலோடு திரும்பிய
அந்த நேரத்திலா…

சுற்றுலாவில் எடுத்ததாக
தங்கை கொடுத்த
நிழற்படத்தில் நீயிருப்பது
இடமா வலமா
என்றறியத் துடித்த
அந்த நேரத்திலா…

பார்க்கவும் இல்லை
பழகவும் இல்லை
பேசவும் இல்லை
பிறியவும் இல்லை
கேட்கவும் இல்லை
கிடைக்கவும் இல்லை…

ஆனாலும் மனதில்
ஆசையின் தொல்லை
எப்போது வந்தது
இதயத்தில் உணர்வு
என்பதை அறிவதில்
கடந்தது பொழுது…

இடையில் வந்தது
திருமணச் செய்தி
இடியினை மிஞ்சுது
இதயமும் வலிக்குது…

காதல் வந்ததை
அறியும் முன்னே
அதுதந்த
ரணம் புாிந்தது…
————-

Series Navigation