இன்னும் ஒரு உறவு

This entry is part of 26 in the series 20020525_Issue

புஷ்பா கிறிஸ்ரி


தங்கையே, தம்பியே,
நங்கீ, மல்லீ என்றும்

அக்கே, அய்யே என்றும்
உறவு கொண்ட அந்த நாட்கள்

நாம் பிறந்தது ஓர் பூமியில்
வாழ்ந்ததும், வளர்ந்ததும்,

சாதிக்க மறந்ததும், எத்தனை ?
விவாதித்து முடிந்ததும் அத்தனை

புரியாத வயதில் நாம் பாசம் கொண்டோம்
அறியாத எம் கனவுகள் அழிக்கப் பட்டன

நாம் ஜன்னல்க் கம்பிகளில் சங்கமித்து
ஜாடை மூலம் கதைத்துக் கொண்டோம்

காலங்கள் எம் கால்களைக்
போரினால் கட்டிப் போட்டு விட்டன

உன் மொழி ஆயுபோவன்,
என் மொழி வணக்கம்

எம் நாக்குகள் இதமாய் தவழ்ந்து
எமக்குள் வணக்கம் சொல்லின

உன் வீட்டுக் கிரிபத்தும்
என் வீட்டுத் தோசையும்

நம் நாட்டின் தேசியத்தில்
சம பங்கிட்டுக் கொண்டன

நம் வயிற்றுக் குடலினுள்ளே
நட்பு வளர்த்துக் கொண்டன

வந்து போன கலவரத்தில்
நானும் நீயும் எங்கெங்கோ

முகமற்ற அனாதைகளாய்,
மகவரியற்ற மனிதர்களாய்,

முகவரி தேடத் தெரியாத
அறியாப் பருவத்தில்

அழுத விழிகளுடன்
அன்று பிரிந்தோம்

இன்று என் விழி
உனைத் தேடி அழுகிறது

ஓடி வா தங்கையே
அக்கே என்று விளித்து வா

நாமும் தேடுவோம் மனித நட்பை
நாமும் பேசுவோம் மனித பாஷை

***

புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com

Series Navigation