வரம்

This entry is part of 26 in the series 20020421_Issue

திலகபாமா,சிவகாசி


நமக்கான உணவுக்காய்
சந்தையில் பசி தவிர்த்தெல்லாம் வாங்கி
நமக்கான பிள்ளைக்காய்
பள்ளி கட்டணமாகி
நமக்கான சேமிப்புக்காய்
வங்கி வரிசையாகி
நமக்கான வீட்டுக்காய்
செங்குருதி கல்லாகி
நமக்கான மானத்துக்காய்
உடையின் நூலாகிகுத்தும்
ஊசிக்கிடையிலும் கிழிசல்கள்
மறைக்கும் தையலாகி
நமக்கான வெளிச்சத்துக்கென
விளக்கும் எண்ணையுமாகி பின்
விடியலுக்கான இருளுமாகி
எனக்கான பயணத்துக்காய்
உனக்கான அலுவல் நேரம்
ஒதுக்க முடியாது
இரயில் கூவலோடு என்
மனக்கூவல் யார் காதிலும் விழாது
கரைகையில்
உனக்கு எனக்காய் நான்
கணக்கு பார்க்காது நீ
கணக்கு பார்க்கையில்
கழுத்தை அலங்கரித்த
சவரன்தாலி சாபம் பெற்ற
சந்திரமதி தாலியாய்
எல்லார் கண்ணுக்குத் தெரிந்தாலும்
எனக்கு மட்டும் தெரியாது
மண்ணோடு மணந்திருக்கும் வேரின் வாசம்
தேனோடு நிறைந்திருக்கும் பூவின் மனங்களுக்கு
புரிய ஆரம்பிக்கையில்
உனக்கும் எனக்குமிடையில் மட்டும்
உயிர்க்கும் சந்திரமதி தாலியாய்
என் தாலியும் வரம் வாங்கி வரலாம்

***

Series Navigation