சக்கரம் இல்லா தேர்கள்…

This entry is part of 30 in the series 20020414_Issue

சேவியர்.


என்
வீட்டுச் சேவல் இன்னும்
விழித்தெழவில்லை,
கடிகாரம் இல்லா என் வீட்டில்
அலாரத்தை
வயிற்றில் தான் வைத்திருக்கிறேன்.

இன்றைக்கு
என்ன வேலை எனக்கு ?
வரப்புகளின் சகதியோடா ?
எரியும் கரிசல் சரிவுகளிலா ?
விறகு பிளக்கும்
வெயில் வெளிகளிலா ?

எந்த ஆயுதம்
இன்று எனக்காய் காத்திருக்கும் ?
மண்வெட்டியா ?
கோடரியா ?
இல்லை
பட்டினிக்கான பத்திரமா ?

சிந்தனைகள்
முடிச்சிட்டு முன்னேற,
உள்ளறையில்
குழந்தைகளின் விசும்பல்.

கடின வேலைகண்டு
கண் கலங்கியதில்லை,
இருப்பதெல்லாம்
வேலை இல்லா
காலை வருமோ
எனும் கவலை மட்டும் தான்.

மாலை வரை வேலை,
விலைவாசிகளில்
கிழிந்து போகும் கூலி,
வங்கி பார்த்திராத வாழ்க்கை !

பொருளாதார முன்னேற்றங்கள்
வெட்டி வைக்கும்
சின்னச் சின்னப் பள்ளங்களிலும்
முகம் குப்புற விழுந்து
முட்டி உடைக்கும் நிலை.

பசி க்கும் பட்டினிக்குமான
துல்லிய விளக்கங்கள்
திணிக்கப்பட்டிருக்கும்
கோணிக் கதவுகள்.

ஆறாண்டுத் திட்டம் என்றால்
ஆடு வாங்குவது,
ஐமபதாண்டுத் திட்டம் ஒன்றில்
ஐந்து செண்ட் நிலம்.
கல் தேயும் நம்பிக்கையில் தான்
ஊர்கிறது என் எறும்பு ஜீவிதம்.

சொந்த விருப்பங்களை
உதறி நடக்கும் மனசு,
யாராரோ கேட்கும்
‘பிள்ளை படிக்கலயா ‘
எனும் கேள்விகளில் மட்டும்
பதறி நிற்கிறது.

Series Navigation