ரமேஷ் சுப்பிரமணியன் கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue


# ‘தேநீருக்கு சர்க்கரை போதுமா ?
பால் சேர்ப்பீர்களா ?
எவ்வகை தேயிலை உங்களுக்கு உகந்தது ? ‘
மொழிகளின் கண்ணிகளில் சிக்கிக் கொண்டு நான்…
கருணை வழியும் உன் தண்-விழிகள்
மெளனமாய் என்னுள் அரும்புகளை முகிழ்க்கிறது
மனதின் இரைச்சல்களை இசையக்கும் தருணம் வாய்க்கையில்
தேநீர் கூட என் அன்பை சமர்ப்பிக்கும் உனக்குள்.

# கால் மாற்றி
கால் மாற்றி நின்று
பார்த்துக் கொண்டேயிருந்தேன்
மத்தாப்புகளின் நினைவுகளோடு
வெல்டிங்கை
பார்க்காமல் இழந்திருந்தேன் நான்… பார்த்துப் பார்த்தே இழந்திருந்தான் அவன்!

# உப்பரிகையின்
பொசுங்கிய திரைகளின்
பின்னெழுந்த சர்பம்
நட்சத்திரங்களிடை நீந்தி திரிந்தது

இயக்கத்தின் கதி கூடிய
ஒரு க்ஷணத்தில்
எழுந்த தடத்தின்
இருப்பை ஒழித்து
இல்லா காலத்தின்
சூன்யத்தில் ஒளிர்ந்தது நாகம்!

# சீனச்சிறுமியின்
அழகிய புன்னகை
வார்த்தைகளற்ற
கவிதையை வீசிச் செல்லும்
எதையும் யாசிக்கா
நிரந்தரத்தின் முழுமையுடன்.

***

Series Navigation

செய்தி

செய்தி