அரும் பிறவி

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

வை. ஈ. மணி


எண்ணிலா பால்வழிச் சுடரணுவில் ஒன்று
மண்ணிலே ஓருயிர்க் கருவினில் புகுந்து
விண்ணோடு கூடி விளையாடும் விந்தைதனைப்
பண்ணோடு பாடிப் பரமனடி பணிவோம்

மனிதப் பிறவி கிடைத்ததே நமது
புனிதமுற் பிறவிப் பயனாகும் அன்றோ ?
இனிமேற் பெற விரைவதே ஈசனின்
கனிவுகூர்ந் தருளும் கருணை ஓன்றே!

அரியதன் படைப்பில் பெருமிதம் கொண்டருள்
சொரியவே இன்புறக் காத்திருப் பதிறைவன்
கோரிய கட்டளை செவ்வனே செய்யச்
சீரிய மெய்யதை உணர்ந்து வாழ்வதே

சிந்தனை உடன் ஐந்தும் அடக்கிப் பார்
தந்த நாதனைக் காணச் சிறந்ததோர்
தந்திரம் ‘அடிமனதின் உள் கட ‘ என்றசொல்
வந்தனை செயற்க்குரிய ‘கடவுள் ‘ என்றானதே

உடலெனும் திரையிட்டுள் வீற்றிருக்கும் தெய்வ
வடிவு வெளிப்பட உயிர்பெற்றது மனிதன்
கடிதும் களிப்பாவை என்று சலியாதவன்
அடிசிர மீதிற்கொண்டு தொண்டு புரியவே

கிடைத்தற் கரிய ஆத்மா உயிர்வடிவாக
அடைக்கலம் புகுந்த இம்மனித உருவே
படைத்தவன் குறியுணர்ந் தனுதினம் சரண்
அடைந்தவன் திருத்தாள் சேர முயல்வதற்கே

Series Navigation

வை ஈ மணி

வை ஈ மணி