போர்க்காலமான பூக்காடு

This entry is part of 37 in the series 20020310_Issue

எட்வின் பிரிட்டோ


ஓ மதத் தலைவர்களே! எப்போது
எங்கள் நாட்டின் தலைவலியானீர்கள் ?
எங்கள் விழுதுகளில் வெடிவைக்கச்
உங்களுக்குச் சொல்லி தந்தது யார் ?
உங்கள் மூளைக்குள் முள் முளைத்ததெப்போது ?
மதம் பிடித்த உங்கள் சிந்தனைகளில்
எங்கள் கலாச்சார சீதையைக்
களவாடாதீர்கள்.
வாடிய பயிரைக் கண்டு வாட வேண்டிய
நீங்கள் எங்கள் தேசத்து
இளங்குருத்துக்களை வெட்டியெறிவதைச்
சகித்துக் கொள்ள முடியாது எங்களால்.
எங்கள் நாட்டின் கலாச்சார
மேடுப் பள்ளங்கள் எங்கள்
வாழ்வியலின் அத்தியாயங்கள்.
அதை இரத்தத்தையூற்றி நிரப்பாதீர்கள்.
இறந்துப் போன இந்தியச் சகோதரர்களின்
சிதைக்கு இடப்பட்டத் தீச்
சுடவில்லையா உங்களை ?
ஓ! அதிலல்லவோ நீங்கள் குளிர்க்
காய்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவனென்று
எங்களுக்குப் பெயர்ச் சூட்ட உங்களுக்கு
அதிகாரம் தந்தது யார் ?
கூப்பிடுங்கள் எங்களை இந்தியனென்று!
எங்கள் இந்தியத் தெருக்களைப் போர்க்
களமாக்கும் உங்கள் மதம்
எங்களுக்குத் தேவையில்லை.

நீங்கள் மானுடம் கற்றுக் கொள்ளும் வரை….
எங்கள் காஷ்மீர் ரோஜாக்கள் இரத்தம்
சிந்துவதை நிறுத்தும் வரை…
கல் சுவற்றில் நீங்கள் கட்ட நினைப்பதை
உங்கள் நெஞ்சில் கட்டும் வரை…
நிறுத்துங்கள் உங்கள் போதனைகளை.

Series Navigation