குட்டாஸ் – 2

This entry is part of 37 in the series 20020310_Issue

ஸ்ரீனி.


1) கடல் குளித்து சிலிர்த்தெழும்பும் ஞாயிறின்
சிவந்த உடலினின்று சிதறும் நீர்த்துளிகளை
தலையில் சுமந்து தவம் செய்தபடி,
நீர்கொண்ட மேகங்களை நிறுத்த வழியின்றி
கார்களின் கரும்புகை முகர்ந்து
தார் சாலை ஓரம் தடுமாறும் புல்வெளிகள்.

2) மகரந்த துகள் ஏந்தி
மலர்கள் பிறக்க முறைகள் செய்து
வண்டுகளை வாழவைத்து,
கூந்தல் அழகுபடுத்தி,
அர்ச்சனைகள் நடக்கச்செய்து,
எட்டே நாளில் இறந்து போகும்
பட்டாம்பூச்சி !
ஏமாற்றங்கள் எங்கே இல்லை ?

3) புன்னகை தேசமிது !
கையில் அரிவாளுடன், கண்ணில் கனலுடன்
எறிக்க வந்த எதிர்வீட்டு மாமாவுக்கு
பறிக்கும் சிறுநெல்மணி பல்வரிசை காட்டும்
இப்ராஹிமின் இரண்டு வயது மழலை..

4) முகம்மது நபிக்கு சொல்லிவிட்டுடிருந்தால்
முரையே அவனும் வில்லை ஒடித்திருக்கலாம்,
சனகன் அன்றே செய்திருப்பானெனில்
இன்று சீதைக்கு ராமன் சித்தபாவோ ?

5) காற்றில் படபடக்கும் பேப்பர் பக்கங்களில்
கடிவாளம் இல்லா குதிரைகள்
நூலறுந்த காற்றாடிகள்
பறக்கும் இறகுகள்
தென்றலில் தலையாட்டும் வெள்ளைப் பூக்கள்,
இமைமூடித் தோற்றுவைக்கும் ஏகாந்த நினைவுகள்,
இத்தனையும் ஒரு நொடியில் தாண்டி,
எல்லா செல்களையும் ஒருமுகம் செய்யும்,
ஏதோ நினைவில் எப்போதோ நான் வரைந்த
குளிர்ந்து பரவும் உன் குறும்புப் பார்வை.

Series Navigation