உதிரும் சிறகு

This entry is part of 30 in the series 20020302_Issue

இளங்கோ


1.
சடசடத்தோடும்
இரயில்களின் இடைவெளியில்
பூக்களின் தோழமையுடன்
நிகழ்கிறது
நமது முதல் சந்திப்பு

பேசுவதற்கான வார்த்தைகள்
திசைகளைத் துழாவும்
விழிகளில் புதைய
நமக்கான வெளிகளில் மட்டும்
நிரம்புகிறது நிசப்தம்

இணையத்தின்
இருப்பை வியந்தபடி
நேசத்தின் முதல்தளிர்
தண்டவாளத்தருகில் துளிர்க்கிறது
காலத்தின் அடுக்குகளைப் பிளந்தபடி

மழைக்கால இரவில்
ஒளியின் அரூபநடனத்துடன்
பயங்களற்று பயணிக்கின்றோம்
திசைகள் தெரியாப்
புராதனத் தெருக்களில்

புலம்பெயர்கையில்
ஓலமிட்டுப் பிளிறிய
ஆன்மாவின் அழுகுரல்
இனியேனும் சற்று அதிராதிருக்கக்கூடும்
உனையிறுகவணைக்கும்
இந்தக்கணத்திலேனும்

தாய்மொழியின் சுவையறியாது
சபிக்கப்பட்ட வாழ்வின் மீதியை
துயரங்கள் துலங்க
விழித்தெழும் நீண்ட இரவுகளை
தனிமைத்திரை கவிழ
வெளிறும் வெற்றுப்பகல்களை

பகிர்வதற்கான நம்பிக்கைகள்
உதடுகள் நனைக்க
கிற்ங்கிப்போகும் உன்விழிகளில்
மின்னலாய் வெட்டுகிறது

2.
நீளும்
இத்தொலைதூரப் பேரூந்துப்பயணத்தில்
உனது விழிநீரும் வியர்வையும் கலக்க
பிரிவுத்துயர் தாங்கிய ஆடையின் வாசத்திலிருந்து
இதமாய் விரிகிறது
ந்மக்கான முதற்கவிதை.

Series Navigation