காத்திருக்க வேண்டுமன்றோ

This entry is part of 29 in the series 20020203_Issue

பவளமணி பிரகாசம்


அச்சசலாய் ஆளை உருவாக்க அங்கே ஆராய்ச்சி-
அதை நாங்க செஞ்சி ரொம்ப நாளாச்சி:
எங்க காந்தாரி பெத்தா அடுக்கா நூறு
என்னவித குளோனிங் அது என்று கூறு.

காத்திருக்க வேண்டுமன்றோ
விதை வெடித்து முளைப்பதற்கும்
குவிந்த மொட்டு மலர்வதற்கும்
குறித்து வைத்த நேரமுண்டு, கணக்குத் தவறாது-
காத்திருக்க வேண்டுமன்றோ!

புதிதாய் பொரித்த குஞ்சதுவும்
கண் திறக்க காலமுண்டு,
பூஞ்சிறகு வளர்ந்திடவும், நீலவானில் பறந்திடவும்
காத்திருக்க வேண்டுமன்றோ!

கல்லூரியாம் வாலிபச்சோலையிலே
எழுத்தில் வடிக்காத பாடமும் உண்டு,
என்றாலும் ஏட்டில் படித்ததற்கு பட்டம் பெற
காத்திருக்க வேண்டுமன்றோ!

பெற்ற பட்டம், தகுதி, திறனுடனே
பொருளீட்டி பயணம் துவங்க
பொருத்தமான வேலையொன்று கிடைத்திடவே
காத்திருக்க வேண்டுமன்றோ!

கன்னியரும், காளையரும் கண்ணால்
காதல் மொழி பேசி, கற்பனை
சிறகினிலே பறந்தாலும், தாலி தரும் காவலுக்கு
காத்திருக்க வேண்டுமன்ரோ!

உயிருக்குள் உயிர் வளர்த்து
கரு தாங்கி கண் விழிக்கும் அன்னையும்
தன் மகவின் தங்க முகம் பார்க்க
காத்திருக்க வேண்டுமன்றோ!

பாலுக்கு, பேப்பருக்கு, பஸ்ஸுக்கு,
ரேஷனுக்கு, பென்ஷனுக்கு, காஸுக்கு-
வாழ்கின்ற நாளெல்லாம் வருந்தி வருந்தி
காத்திருக்க வேண்டுமன்றோ!

மேற்கே அடைவான் சூரியன்;
நீண்டு நெடிதாய் மாறிடும் நிழல்கள்.
கடமை முடித்த நிம்மதிக்கும், காலனுக்கும்
காத்திருக்க வேண்டுமன்றோ!

Series Navigation