மரணம்

This entry is part of 27 in the series 20020127_Issue

ஜெயந்தி சேது


தினம் தினம் உயிருடன் மரித்தது போய்
திடாரென நிரந்தரமாய் இன்று..

ஆயிரம் மைல்கள் தாண்டி வந்து
அழுது முடித்து காத்திருக்கும் மகன்..

கால் தொட்டு கும்பிட்டு கண்ணீர் வரவழைத்து
கதவோரம் கவலையாய் மறுமகள்..

கட்டிப் பிடித்து கதறியழுது கண்சிவந்து
காயா கண்ணீர் கோட்டுடன் மகள்..

இணைபிரியா நட்பு சொல்லிக்காமல் போனதாய்
இதயமும் கண்ணீர் கசியும் நண்பர்கள்..

இருசொட்டு கண்ணீர் சிந்தி
‘இன்னைக்கே எடுத்துடுவாங்களா ? என உறவுகள்..

பெரியவர்கள் கண்ணீர் பார்த்து
பெருங்குரலெடுத்து பேரன்கள்..

காணும் கண்களில் எல்லாம் காவிரி இருக்க
வறண்டு போன வைகையாய் நான் மட்டும்!

அழுதிடு எனும் அறிவுரைகள்…
அழவேயில்லை எனும் ஆதங்கங்கள்..
அழலையா எனும் ஆச்சர்யங்கள்..

அவர்களுக்கு தெரியாது

திரவ உணவுக் குழாய்களும்
திறவத் திராணியற்ற கண்களூம்
செயற்கை மூச்சுக்காற்றும்
செல்லரித்துப்போன அணுக்களும்
படுக்கையிலே குளியலும்
படுத்தே புண்ணாய்ப் போன உடம்பும்..

உயிரோடு தினம் மரித்தவர் கண்டு
அழுதழுதே அமைதியாகி போனேன் நான்..

‘அதை ரொம்ப நேரம் வச்சிருக்க மாட்டாங்க.. ‘
யாரோ சொல்வது கேட்க
விரக்திப்புன்னகை வெளியே தெரியால் விட்டம் வெறிக்கிறேன்..

அவர் அதுவாகிப்போனது அவர்களுக்கு!
அது அவராகிப்போனார் எனக்கு….!

Series Navigation