ஒளவை – இறுதிப்பகுதிகள்

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

இன்குலாப்

தொல்மனச் சுவடுகள்

(ஊர்ப் பொதுமன்று. பாணர்கள் குழு மரத்தடியில் தங்கி இருக்கிறது. அங்குள்ள
ஒரு கல் இருக்கையில் ஒரு புறம் சாய்ந்தவளாக ஒளவை துயில்கிறாள். இளம்
பாணன் ஒருவன் மெல்ல யாழை மீட்டியபடி இருக்க… பாடினி ஒருத்தி கேட்டபடி
இருக்கிறாள்)

பாடினி : உன் பாலைப் பண் இனியதுதான்…இதற்கேற்பப்
பாட்டுத்தான் இல்லை.

பாணன் :
அதோ பாட்டு உறங்கிக் கொண்டிருக்கிறதே ‘

பாடினி :
நம் பேச்சு ஒலியில் ஒளவை விழித்துவிடப் போகிறாள்….

பாணர் :
ஒரு காலத்தில் நாங்கள் யார் உறங்கினாலும் உறங்காமல்
திரிந்தவள்தான்….

பாணன் :
ஆமாம்….நடந்து நடந்து களைத்து விட்டாள்.

பாணர் :
அவளுக்கு உடற் களைப்பைவிட மனக்களைப்புத்தான்
மிகுதி….

பாணர் :
அதியன் மீது கையறு நிலைப் பாடலைப் பாடிய பிறகு
ஒளவையின் சொற்களுக்கும் சோம்பல் வந்துவிட்டது ‘

பாணன் :
இன்றும் ஒளவையின் அந்த நாள் பாடல்கள்…. என் யாழ்
நரம்புகள் கூட அந்தச் சொல்லை இசைக்கையில்
துடிக்கின்றன.

பாணர் :
அதியன் என்ற குறுநிலத்தலைவனுக்கு இருந்த படை
அணிகளில் எல்லாம் மிகப் பெரியதாக ஒளவையின் பாட்டுப்
படையணிதான் இருந்தது. வீரர்கள் கேட்டுக்
கிளர்ச்சியுற்றார்கள்…பகைவர்கள் நெஞ்சில் அந்தச் சொல்
ஆயிரம் வேல்போல் பாய்ந்தது.

பாணன் :
ஏன் ஒளவையின் அகப்பாடல்களைக் கேட்டால் முற்றுத்
துறந்த துறவிக்குக்கூடக் காதல் வந்துவிடும்.

பாணன் :
அவள் யாரையாவது காதலித்திருப்பாள்….

பாடினி :
காதலிக்கிறவர்கள் எல்லாம் அப்படியா அழகாகப்
பாடுகிறார்கள்…நீயுந்தான் காதலிக்கிறாய்.. நான் இருமினால்
நீயும் இருமுகிறாய். தும்மினால் கூடத் தும்முகிறாய்…
இருந்தும் ஒரு பாட்டுக்கூட உன்னிடம் இருந்து வரவில்லை.

பாணர் :
ஒளவை யாரையாவது காதலித்தாளா என்பது எனக்குத்
தெரியாது….. ஆனால், கட்டுப்பாடுகள் அறியாதது அவள்
மனம்…. அவளுடைய அகப்பாட்டின் தலைவி தனது காதலைக்
கூரையில் ஏறி நின்று கூவுபவள்….அவளது பரத்தைக்கூடத்
தன் மீது சுமத்தப்பட்ட இழிவை ஏற்றுக்கொள்ளாதவள்.

பாடினி :
அதுதான் மீண்டும் கேட்கிறேன்…. ஒளவையால் இது எப்படி
முடிந்தது…. ?

பாணர் :
அதற்கு இப்படித்தான் காரணம் சொல்ல முடியும்… அவளுடைய
பார்வை கடந்த காலத்தைக் கடுமையாக ஊடுருவக் கூடியது….
அதில் நம் முன்னோர் வேறுபாடற்று வாழ்ந்ததைக் கண்டு
இருக்கிறாள்….. கிடைத்ததை உண்டு, விரும்பியவரைக்
காதலித்து பறவைகள் போல் வாழ்ந்ததைப் பார்த்திருக்கிறாள்…
பெண் அடங்கி இருக்க வேண்டும்… அஞ்சி இருக்க வேண்டும்
என்பவையெல்லாம் இப்போது சுமத்தப்பட்டு வரும் புது
முறைகள்…இவற்றை அவளது தொன்மையான மனம் ஏற்றுக்
கொள்ளவில்லை…. அவளுடைய அகவாழ்வும் புறவாழ்வும்
கட்டுப்பாடற்றவை.

(ஒளவை உசும்புகிறாள்…..)

ஒளவை :
என்ன….என்னைப் பற்றிப் புறம் பேசுகிறீர்களா ?

பாணன் :
அகமும் புறமும் பேசுகிறோம்…

பாடினி :
எப்படி….ஒளவை. கட்டுப்பாடற்று உன்னால் பாட முடிந்தது ?

ஒளவை :
யார் சொன்னார்…. ?

பாணன் :
உன் பாடல் சொல்கிறது.

ஒளவை :
என் முன்னோர்கள் கண்ட கனவை நானும் கண்டேன்….ஆனால்
எல்லாக் கனவுகளையும் போல எனது கனவும் கலைந்து
விட்டது (பெருமூச்சுவிடுகிறாள்)

பாணர்-1 :
என்ன ஒளவையிடம் சோர்வா ? அதியன் சாவு உன்னை மிகவும்
துயரடையச் செய்துவிட்டது.

ஒளவை :
அதியனை, நான் ஒரு மன்னனாகப் பார்க்கவில்லை. தனக்கென்று
எதையும் வரிக்காது கூடி வாழ்ந்த பழைய வாழ்க்கையின் ஒரு
விழுதாகப் பார்த்தேன்….

பாணன் :
அவன் குறையே இல்லாதவனா ?

ஒளவை :
யார் குறை இல்லாதவன் ? அவனிடமும் நாடு கவரும் வேட்கை
இருந்தது…. தனது நாடு கவரும் வேட்கையை மற்ற முடியுடை
வேந்தர்களைப் போல அவனும் அந்தணர் பேணியும் ஆகுதி
வளர்த்தும் நிலைநாட்டிக் கொள்ள முயன்றான். இதற்கும்
அப்பால் தொன்மை வாழ்க்கையின் கூட்டுண்ணும் பண்பு
அவனிடம் இருந்தது. எளியோர் தம்மை சுற்றமாக வரிக்கும்
இயல்பு இருந்தது… மூத்தகுடியின் கடைசி முளை என்பதற்காக
அவனுடன் நின்றேன்…. கால வெள்ளம் எல்லாவற்றையும்
அடித்துச் சென்றுவிட்டது….

பாணன் :
ஒளவை ‘ நீ நினைத்திருந்தால் முடியுடை வேந்தர்களைப்
பாடியே செல்வத்தில் திளைத்திருக்க முடியும். ஆனால்
நீயோ நாஞ்சில் வள்ளுவனையும் அதியனையும் பாடினாய்….
இறுதியில் சேரன் மாரிவெண்கோவும், பாண்டியன்
கானப்பேர்தந்த உக்கிரப்பெருவழுதியும், சோழன் இராசசூயம்
வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தபோது பாடினாயே ‘
இந்தச் செல்வ வேந்தர்களைப் பாட எப்படி உன் தொல்
மனம் ஒருப்பட்டது ?

ஒளவை :
ஆமாம்…அவர்கள் கூடியிருந்த காலத்துப் பாடி மகிழ்விக்க
ஒரு பாணனும் யாழும் வேண்டும் என்றனர். நான் போனேன்
…..அவர்களும் பார்ப்பனர்க்குக் கை நிறையப் பொன்னும்
பொருளும் வழங்கிக் கொண்டிருந்தனர். இரவலர்க்கு
ஈந்து கொண்டிருந்தனர்….அந்தணர் வேள்வித் தீயே தமது
குடைகளை உயர்த்தும் என்று அதன் அருகில் இருந்தனர்…
யாருக்குப் பொருள் மீதான வேட்கை விட்டது ‘ எல்லாக்
குடைகளும் பார்ப்பனர் தலைகளுக்குப் பின் கவிழ்ந்தன….
யாருக்கும் பணியாத வேந்தர்கள்… அதியன் உட்படப்–
பார்ப்பனர்க்குப் பணிவதைப் பெருமை என்று கருதினர்….

பாணர் :
பார்ப்பனர்களும் வேண்டிய மட்டுக்கும் பொன்னும்
பொருளும் ஈட்டினர்….

ஒளவை :
நல்லது….நல்வினை செய்து வாழுங்கள் என்று கூறினேன்…
இந்த ஒற்றுமை நீடிக்கட்டும் என்று விரும்பினேன்…ஆனால்,
இவர்கள் ஒற்றுமையும் அரசியல் சார்ந்தது. அதாவது தேவை
கருதி ஒன்றுபடுகிறார்கள். இதனினும் பெரிய ஊதியம்
வரும் என்றால்….. மீண்டும் போரிடத் தயங்க மாட்டார்கள்.
தனித்தனியாக படை வளர்ப்பார்கள்… தனித்தனியாக
இராசசூய வேள்வியும் செய்வார்கள்… நினைத்துப் பாருங்கள்
நாம் நடந்து வந்த வழிகளை… ஊர்கள் எரியூட்டப்படுகின்றன
……புகை மூட்டம் முகில் மூட்டத்தினும் பெரிதாய் உயர்கிறது
…பார்ப்பனர்கள், பசு, பத்தினிப் பெண்டிர் மட்டுமே
பாதுகாப்பாக உள்ளனர்…..

பாடினி :
பத்தினிப் பெண்டிர் என்பதை எதை வைத்துத்
தீர்மானிக்கிறார்கள்……

பாணன் :
சொன்னவர்களைத்தான் கேட்கவேண்டும்….

ஒளவை :
ஒவ்வொரு படையெடுப்பின் போதும் குடிகளுக்கு நன்மை
செய்வதாக அரசர்கள் கூறுகிறார்கள். ஆனால், எல்லாச்
செல்வங்களையும் தாங்களே வரித்துக் கொள்கிறார்கள்….
என் தலைமுடி சிறிது நரைத்து உதிரவும் தொடங்கி
விட்டது…. என் நம்பிக்கையுந்தான்.

பாணர்-1 :
நல்ல நாடு என்று சொல்வதற்கு ஒருநாடு கூடவா இல்லை…

பாடினி :
மலை வளங்கொழிக்கும் குறிஞ்சிக்குரிய வேந்தர்கள்….

பாணன் :
வயல் வளங்கொழிக்கும் மருதநிலத்து மன்னர்கள்…

பாடினி :
கடல் வளங்கொழிக்கும் நெய்தல் நிலத்து அரசர்கள்…

ஒளவை :
நாடாக இருந்தால் என்ன ?

காடாக இருந்தால் என்ன ?

மேடாக இருந்தால் என்ன ?

பள்ளமாக இருந்தால் என்ன ?
ஆடவர் எங்கு நல்லவரோ
அந்த நிலம் நல்லது…
அந்த நாடு நல்லது…

பாடினி :
அதிலும் ஆடவர் நல்லவராக இருந்தால் தானா ?

ஒளவை :
வேறென்ன பாடினியே ‘ இந்த உலகம் உன் உலகம்
அன்று…என் உலகம் அன்று…என்றோ ஒருநாள்
இது பெண் உலகமாக இருந்திருக்கலாம்..இன்று
இது ஆடவர் உலகம்…அதனால்தான் ஆடவர்
எங்கு நல்லவரோ என்றேன்…..

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே ‘

(பின்குரல்)

குரல்-1 :
இதோ நமது வயல்கள் எரிகின்றன…

குரல்-2 :
இதோ அவன் என் கூந்தலைப் பிடித்து
இழுக்கிறான்….

குரல்-3 :
வாரார் தோழி…மறந்தோர் நம்மை…மறவோம்
நாமே…

குரல்-4 :
நம் மனத்தன்ன மென்மை இன்மையின் நம்முடைய
உலகம் நினைப்பாரோ ? மாட்டாரே ‘

குரல் -1 :
பரத்தையர் சேரி போகாத படிக்கு

காக்க காக்க கணவனைக் காக்க….

குரல்-2 :
அகிம்சோ பரமோ தர்ம.

ஒளவை :
என் கனவுகளை என் பாடலில் விட்டுச்
செல்கிறேன்…எப்படி வாழ நினைத்தேனோ
அப்படிப்பட்ட கனவுகள்…அதை இனிவரும்
உலகம் காணுமோ… எனது குரல் இனிவரும்
செவிகளுக்கு எட்டுமோ….மீண்டும் எனது
யாழுடன் நான் திரும்பலாம்….இல்லை எனது
சுவடுகள் மட்டுமே மிஞ்சலாம்.

மூடிய பழமைத் தூசியை விலக்கி

ஒளவையார் :
சொல்லுங்கள் குழந்தைகளே….
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்…

ஒளவை :
பாடினி வந்தாள் ‘ பாடினி வந்தாள் ‘ பாட்டும்
கூத்துமாய்ப் பாடினி வந்தாள் ‘

(தடியூன்றி வரும் ஒளவையாரும் நடனமாடியபடி வரும் ஒளவையும் நேருக்கு
நேர் சந்தித்துக்கொள்ள…..)

ஒளவையார் :
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு….அனைத்தையும்
உதிர்த்து…. ஆடியும் பாடியும்….பெண்ணே ‘ நீ யார் ?

ஒளவை :
நிமிர மறந்து நிலத்தையே பார்த்து….தடியூன்றித்
தள்ளாடி…அம்மையே….நீவிர் யார் ?

ஒளவையார் :
நான் ஒளவையார்

ஒளவை :
நான் ஒளவை….

ஒளவையார் :
ஒளவை….என் பெயர்….ஆனால் இளம்பெண் ‘

ஒளவை :
ஒளவை…ஆர் ? என் பெயர்….ஆனால் எவ்வளவோ
மூத்தவள் ‘

ஒளவையார் :
நல்லது பெண்ணே ‘ எங்கிருந்து வருகிறாய் ?

ஒளவை :
புறநானூற்றிலிருந்து…குறுந்தொகை பார்த்து,
நற்றிணை வழியே நடந்து, அகநானூற்றில் கொஞ்சம்
ஆடிப்பாடி….

ஒளவையார் :
எனக்கு முந்திய இலக்கியங்கள்….நீ அந்தக் காலத்து
ஒளவையா ? ஆயிரம் ஆண்டுகள் என்னிலும்
மூத்தவள்…ஆனால்…இழை அணிப்பொலிந்த ஏந்து
கோட்டல்குல் மடவரல் உண் கண் வாள்நுதல்
விறலியாய். இளமையாய் ஒளவை ‘ தேவாமிர்தம்
சாப்பிட்டாயா ?

ஒளவை :
தேவாமிர்தமா ? சேச்சே….அது என் காலத்திலேயே
புகுந்த கற்பனை….நான் குடித்ததெல்லாம்…கள்….
மோடி கிறுக்கும் மொந்தைப் பழையகள்…. ?அது
சரி…என் பெயரில் நீவிர் யார் ?

ஒளவையார் :
நான் ஒரு புலவர். ஆனால் உன்னைப்போல் பாடினி
இல்லை. தள்ளாடி நடக்கிறேன்…ஆனால் உன்னைப்
போல் நடனமாடியது இல்லை…..

ஒளவை :
என்னிலும் ஆயிரம் ஆண்டுகள் இளமையாய்ப்
பிறந்தும்…..தலையில் ஏன் ஒரு பஞ்சுப் பொதி ?
முகத்தில் எப்படி முன்னூறு கோடு ? (குரலை இறக்கி)
தேவாமிர்தம் கிடைக்கவில்லையா ?

ஒளவையார் :
போடி குடிகாரி. எனக்குக் கூழே கிடைக்கவில்லை.
எனக்குப் பட்டப் பெயரே கூழுக்குப் பாடியவள்
என்று…நல்லது உன்னிடம் உள்ள கலயத்தில்
கஞ்சியா ? கூழா ?

ஒளவை :
கஞ்சியாவது கூழாவது ? கள்…ஆயிரம் ஆண்டுப்
பழமையான இன்கடுங்கள்…கொஞ்சம் போட்டுப்
பார்க்கிறாயா ? பிறகு தேவாமிர்தம் எல்லாம் இதன்
அருகே கூட வரமுடியாது.

ஒளவையார் :
(மூக்கை மூடியபடி) என்னையா குடிக்கச் சொல்கிறாய் ?
ஆத்திச்சூடியும் கொன்றை வேந்தனும் யாத்த வாயில்
நாறுங்கள்ளா ? நல்வழி பாடிய நான் கள் வழியில்
களங்கப்படுவேனோ ?

ஒளவை :
இது என் காலத்துப் பழக்கம்….தனித்துக் குடிப்பதில்லை.
கடைசியாக அதியனும் நானும் ஒன்றாகக் குடித்தோம்.
ஆயிரம் ஆண்டுகள் போய் விட்டன….இப்பொழுது
ஒரு கூட்டாளி என்று நம்பினேன்… தவறு என்றால்
பொறுத்தருள்க….

ஒளவையார் :
ஆனாலும்…..ஆனாலும் என்னிலும் இளையவளாய்
எப்படி நீ ?

ஒளவை :
அதையேதான் நானும் கேட்கிறேன்….என்னிலும்
முதியவளாய் எப்படி நீ…. ?

ஒளவையார் :
(ஒப்பாரி வைப்பது போல்)

ஆத்திசூடி பாடும் போது அதிக வயசில்லே…..
கொன்றைவேந்தன் பாடும்போதும் கூட
வயசில்லே….
நல்வழியைப் பாடும்போதும் இந்த நரையில்லே…
வாக்குண்டாம் பாடும்போதும் முதுகு வளையலே
எல்லாம் பாடிமுடிச்ச பின்னே ஒளவையார்
ஆனேன்….
எனக்கு மூத்த கிழவனுக்கும் பாட்டியாய்
ஆனேன்….
வேண்டாத தடியைத் தந்து ஊன்றச் சொன்னாங்க
வெளுக்காத தலைமுடிக்கு வெள்ளை அடிச்சாங்க.

ஒளவை :
புலம்பாதீர்….அதியன் மடிந்தபோது கூட நான்
இப்படி அழவில்லை…..எல்லோருக்கும் ஒரு காலத்தில்
வயதாகும். கறுத்த கூந்தல் நரைக்கும்…கால்கள்
தடுமாறும்….

ஒளவையார் :
ஒளவை…அறம் பாடியதால் எனக்குப் போட்ட
கிழட்டு ஒப்பனை இது….

ஒளவை :
அதனால் என்ன ? இது நன்றாகவே உள்ளது…
இந்தக் கடற்கரைச் சாலையில் வாருங்கள் காலார
நடப்போம்.

ஒளவையார் :
ஒளவை….சிலைகள் அணிவகுத்து நிற்கும் இந்தச்
சாலையில், இது யாருடைய சிலை ?

(நெருங்கி வந்து பார்க்கிறாள்)

ஒளவை :
(சிலையின் அடிப்பாகத்தைப் படித்துவிட்டு)

எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே ‘
ஓ…இது என் பாட்டு. உன் காலமும் என் காலமும்
ஒன்றா ?

ஒளவையார் :
இதில் காலம் பொறிக்கப்பட்டுள்ளது….தமிழ்
மூதாட்டி ஒளவையார், காலம் கி.மு. முதல்
நூற்றாண்டு…..

ஒளவை :
அது என்ன கி.மு. ?

(ஓர் இளம்பெண் ஒளவையின் சிலைக்குப் பின்னிருந்து
வருகிறாள். நிமிர்ந்து நடக்கிறாள்.)

இளம்பெண் :
ஒளவையே வணக்கம் ‘ ஒளவையாரே வணக்கம்…

ஒளவையார் :
அது என்ன கி.மு….

இளம்பெண் :
அதுவா….நாங்கள் காலத்தைக் கிறித்துவுக்கு முன்,
கிறித்துவுக்குப் பின் என்று கணக்கிடுகிறோம்….

ஒளவையார் :
ஓ…..சாலிவாஹன சகாப்தம் முடிந்து விட்டதா.

இளம்பெண் :
எல்லா சகாப்தமும் முடியத்தானே செய்யும்…

ஒளவை :
(ஒளவையார் சிலையைக் காட்டி) அதுநானா ?
ஆடித் திரிந்ததன்றித் தள்ளாடித் திரியவில்லையே ‘
பிறகும் இது எப்படி நான் ?

ஒளவையார் :
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே….
என்னென்னவோ அறம் பாடினேன்…இப்படி
ஒருவரி கூட எழுதியதில்லையே…

இளம்பெண் :
இது…

ஆடவர் உலகம் ஆயிரம் ஆண்டுத் தூசுகளைத்
திரட்டி வடித்த சிலை….

ஒளவையார் :
ஏன் ? ஏன் ? இப்படி… ?

இளம்பெண் :
கால மாற்றத்தில் கருத்துகள் மாறும் என்பதை ஏற்காத
மனங்கள் செய்த ஏற்பாடு இந்தச் சிலை….ஒளவை…நீ
பெண் மனதின் குரலைப் பேசினாய்….ஒளவையார்
ஆடவர் தருமத்தை ஆதரித்தார். உன் முகத்தை அழிக்க
முடியாதவர்கள் ஒளவையாரின் முகத்தில் உன்னைப்
புதைத்துவிட்டார்கள்..உன் காலத்து வரலாறு மட்டும்
அல்ல…. தன் காலத்து வரலாறே தமிழருக்குத் தெரியாது
…ஒளவை என்ற பெயரில் இன்னும் பலர் வந்து போய்
இருக்கலாம்.

ஆனால்….காலத்தைப் புதைத்துக் கலவை செய்தார்கள்-
சில தமிழறிஞர்….ஒரு திரைபடி நிறுவனம்…ஒளவைகளே ‘
கடந்த காலத்தின் கட்டுகளை எல்லாம்…ஆர்ப்பரிக்கும்
அந்தக் கடலுக்குள் எறிவோம்.

ஒளவையார் :
இவ்வளவும் பேசும் நீ யார் ?

ஒளவை :
இளம்பெண்ணே ‘ உன் பெயர் என்ன ?

இளம்பெண் :
என் பெயரா ? ஒளவை.

(மூவரும் வரிசையாக நடக்கிறார்கள்)

ஒளவையார் :
எங்கிருந்து வருகிறாய் ?

இளம்பெண் :
கடல் கடந்து…..ஈழத்திலிருந்து

ஒளவை :
உனது தொழில்….

இளம்பெண் :
கவிதை

ஒளவையார் :
எங்கள் பெயர் கொண்ட நீ உனது பாடலை
எங்களுக்காகப் பாடக் கூடாதா ?

ஒளவை :
இன்றைய ஒளவையே உன் பாடலை இசை

இளம்பெண் :
காற்றெல்லாம் தென்றலென்றும்
ஒலியெல்லாம் கீதமென்றும் எண்ணியபடி
சிறகுகளை அகல விரித்து
சிறகடிக்க முடியாது என் பெண்ணே ‘

வெந்து புண்ணாய்
வலியெடுக்கும் இதயத்துடன்
வாழ்தலும் முடியாது
எழு ‘

உள்ளே அனலாய்
எரிந்து கொண்டிருக்கும்
பூமியின் வடிவாய்
விரிந்து எழு ‘ ‘

பொட்டும் பிறவும்
அலங்கரிக்கும்
மேனியழகு உன் அழகல்ல

வெறியும் திமிரும்
அதிகாரமும்
உடைந்து சிதற எழுந்துநில்

உன்னை மீறிய எந்தக் குறியும்
உனது உடலைத் தீண்டாதவாறு
அக்கினிக் குஞ்சாய்
உயிர்த்தெழு ‘

(முற்றும்)

Series Navigation