புதிய பலம்

This entry is part of 21 in the series 20011229_Issue

அனந்த்


படிக்கின்றோம் பற்பலநன் னூல்களாயின்

……படித்தவா றெப்போதும் நடப்பதில்லை

துடிக்கின்றோம் பிறர்துன்பம் கண்டுநாளும்

……தொடர்ந்துஅத் துயரந்தான் நிற்பதில்லை

கொடுக்கின்றோம் ஓரொருகால் கொஞ்சமாகக்

……கொள்வாருக் கொருபயனும் இல்லாவண்ணம்

நடிக்கின்றோம் இங்ஙனமே நல்லவர்போல்

……நாடோறும் நாமெல்லாம் இதனைமாற்ற

எத்தனைதான் முயன்றாலும் இயல்வதில்லை

……இடிக்கின்ற மனச்சாட்சி நம்மையென்றும்

குத்துவதைப் பொறுக்கத்தான் கற்றுக்கொண்டு

……கூசாமல் நம்மைநாம் ஏய்த்துக்கொண்டு

இத்தனைநாள் காலத்தைத் தள்ளிவிட்டோம்

……இனியேனும் இவ்வண்ணம் இருந்திடாமல்

புத்தாண்டு தன்னிலொரு புதியபாதை

……பூத்திடஓர் புதுபலத்தைத் தேடவேண்டும்

சத்தியத்தில் நம்பிக்கை வைக்கவேண்டும்

……சிந்தனையும் சொல்செயலும் ஒக்கவேண்டும்

நித்தமும்இந் நேர்கோட்டைத் தாண்டிடாத

…….நினைப்பினையே மென்மேலும் வளர்க்கவேண்டும்

எத்தனையோ நல்லவைகள் இறைவனருளால்

…….இங்குநாம் பெற்றிருத்தல் உணரவேண்டும்

புத்தியிலே பரம்பொருளைப் போற்றியிந்தப்

…….புத்தாண்டை இவ்வண்ணம் துவக்கிவைப்போம்!

Series Navigation