கல்யாண்ஜி கவிதைகள் 4

This entry is part of 19 in the series 20011210_Issue


நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில் தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக் குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்க்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.

***************
நீச்சல் தெரியாது இருவருக்கும்
என்ற உணர்வு
படகுப் பயணத்தின் மகிழ்ச்சியில்
பொத்தலிட்டுக் கொண்டிருந்தது.
துடுப்புகளின் ஓய்வற்ற துளாவலில்
தண்ணீரின் உறைந்த தகடுகள்
உடைந்து விழுந்தன.
வட்டமடிக்கிற ஏரியின்
குளிர்விளிம்பில்
அமிழ்ந்து நீர் அள்ளிய
விரல் மரத்துப் போனாலும்
அல்லிப்பூ
பறித்தெடுத்த பரவசத்தில்
பனியுடன் அப்பால்
நகர்ந்து விட்டிருந்தது
பயம்.
அனைவரும் பார்க்க
முத்தமிட்டுக் கொள்ளவும்
முடியலாம் இனிமேல்.

**************
இத்தனை காலம்
சவரக் கத்தியைத்
தீட்டி மழித்தவன்.
பசிக்குப் பயந்து
மல்லிகைப்பூ விற்கையில்,
எனக்கு மட்டும் தெரிகிறது
கத்தித் துரு
ஒவ்வொரு பூவிலும்.

***********

முற்றிலும்
விரைத்துக் கிடந்தது பிணம்.
நெட்டுக் குத்திய
இறந்த பார்வையின் மேல்
மழை தெறித்துக் கொண்டிருக்கிறது.
வாகனச் சக்கரங்கள்
சேறு தெளித்து இரங்கல் செய்ய
ஈரச் சிதையில்
நீண்டு கொண்டிருந்தது கால்கள்.
நடைபாதையில்
நேற்றுப் போலவே பழம்
விற்றுக் கொண்டிருந்தார்கள்.
பேரம் பேசி நிற்கும்
சாதுரியக் கைகளில்
உருளும் ஆப்பிளில்
பக்கத்துச் சாவின்
அடையாளம் எதுவும் இல்லை.
ஏற்கனவே தொலத்திருந்தது
வாழ்வின் நிழல்கள்.
******
(கல்யாண்ஜி கவிதைகள் : புதுமைப் பித்தன் பதிப்பகம், 7 முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக் நகர், சென்னை 600083- விலை- ரூ 100)

Series Navigation