முதுமை

This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue

சேவியர்.


வயோதிகத்தின் வழிப்பாதை.
அது
இன்னொரு பிரசவத்தின்
பிரயாசை.

ஒரு முட்டை ஓட்டின் பலவீனத்தில்
கால் முட்டிகள்,
அதிர்ந்து தும்மினால்
அறுந்து வீழும் வலியில்
அரற்றும் அங்கங்கள்.

சுய ஓடுகளாலேயே ஒதுக்கப்படும்
ஆமை வாழ்க்கை இது.

இரங்கல் கூட்டம் போடும்
இரக்கமில்லாதோர் சபை…
இங்கு
முதியவர்களின் முகத்திற்கு நேராய்
மூச்சுக்கு
மூவாயிரம் குற்றச்சாட்டுக்கள்.

உயிரை மட்டும்
இழுத்துப் பிடித்திருக்கும்
இந்த சுருக்கங்களின் தேசத்தோடு
இளசுகளின் யுத்தங்கள்.

தளிர்களின் நரம்புகளெங்கும்
சருகுகளோடு சண்டை.

பச்சையப் பாசனம் நின்றுபோன
இந்த
வைக்கோல் வயல்களுக்கு
கொழுகொம்புகளே
கொலைக்களமாகி விடுகின்றன.

இரும்பாய் இருந்தவரை
ஏதேதோ வடிவத்தில் வாழ்க்கை.
கால்கள் துருப்பிடிக்கத் துவங்கியபின்
தரையோடு தான்
தவழ்கிறது மிச்ச வாழ்க்கை.

கைத்தடிகளின் கால்களோடும்,
கட்டில்
கால்களின் துணையோடும்,
ஜன்னலோரக் காற்றோடு பேசிப் பேசி
கழிந்து விடும் எஞ்சிய ஜ ‘விதம்.

நெஞ்சில் தவழ்ந்த
மகனின் பிஞ்சுக்கால்கள்
இப்போது வலுவடைந்து விட்டன.
அவன் அடுத்த தலைமுறைக்கான
கதவுகளோடும் கனவுகளோடும்
நடக்கின்றான்.
நான் இறந்தகாலத்தின் படுக்கையில்
இன்னும் இறக்காமல்…

உறவுகளுக்குப் பாரமாகிப்போனது
என் உடல்.
கடவுளின் கருணைக் கொலைக்காக
கண்ணீர் மனு சுமந்து கிடக்கிறது
உணர்விழந்து போன உயிர்.

பிராணன் போகட்டுமென்று
பிரார்த்தனை செய்யும் மனசு,
செத்துப் போயேன் எனும்
மருமகள் வார்த்தையால்
இன்னொரு முறை சாகும்…

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்