ஒதுங்கியிரு

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

விக்கிரமாதித்யன்.


நூறு
கூறு சிந்தை

நூறு
கூறு வார்த்தை

நூறு
கூறு ஆழுமை

யாரு
இந்த அவதாரம்

அன்பெனச் சொல்லி
அலையும் கொஞ்ச காலம்
அகில உலக சிந்தாந்தமென
பிரியும் சிறிது காலம்
அத்துவிதத் தத்துவமென்று
அலட்டும் சிலகாலம்
உண்மையின் பன்முகத்தன்மையெனப் பேசி
உளறும் கடைசியில்
மத்யதரவர்க்ககலைஞன் தடுமாறி விழுந்து
மாட்டிக்கொள்ள ஆயிரம் புதைகுழிகள்
மீண்டு வந்தவன் எவனுமில்லை
மீள்வதற்கு வழியுமில்லை

கும்பிப் பசிக்கு
கும்பிடு போடுகிறாய்
கும்பிடு போடுவதற்கும்
கோடி நியாயம் கற்பிக்கிறாய்
போராடும் தெம்பிழந்து
போய்விட்டாய்
புத்தியை விற்று
பொழுது கழிக்கிறாய்
போகட்டும் விதி
விட்டு விடுகிறோம்
சோகமுடிவென்று
காரியங்களை மறக்கிறோம்
வாகாகத் தமிழ்
எழுதியதால் மன்னிக்கிறோம்
ஆகக் கடைசிக்கு ஒரு சொல்
‘ஒதுங்கியிரு ‘.

Series Navigation

விக்கிரமாதித்யன்

விக்கிரமாதித்யன்