பூலோகத் திருப்பள்ளியெழுச்சி

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

அரிகிருட்டிணன்


இங்கேயும் அப்படித்தான்! எலக்ட்ரானிக் வாத்தியத்தில்
மங்கலமாய்க் காலையிலே மணியடிக்க,அனுமனுக்கு

முதல்பூசை நடக்கையிலே, முன்னூறு பேர்கூடி
சதசதக்கும் தெருவழியே சக்களக்க சளபுளன்னு

கடகடக்கும் வாகனங்கள் கடக்கின்ற ஒலிகேட்டும்,
நடக்கின்ற ஒலிகேட்டும், நான்கண்ணை விழிக்கின்றேன்.

எதிர்த்தெருவில் ராகவேந்த்ரா, இடப்பக்கம் குருவாயூர்,
அதைத்தாண்டி மேற்காலே, ஆனைமுகன் கோவிலுண்டு:

மின்சார மத்தளங்கள் விட்டுவிட்டுக் குரலெழுப்பும்
தன்னார்வ ‘எக்ஸ்னோரா ‘, ‘ சார்குப்பை! ‘ என்றலறும்

சோகைபிடித் திருக்கின்ற சுவரொட்டி மிச்சத்தில்
நாகைமுகுந் தன்வதனம், நற்செய்திக் கூட்டங்கள்,

பச்சைநிறப் பிறைச்சந்த்ரன், பாசிசத்தை எதிர்க்கின்ற
மிச்சமீதத் துணுக்கெழுத்து, வெற்றியிலே என்னபடம்,

பாதாளச் சாக்கடைக்காய்ப் பாதாளம் வரைதோண்டி
ஆதாயம் பார்த்ததென ஆரெஸு பாரதிக்குப்

பேர்கெ(ா)டுத்து எழுதிவைத்தும் பின்னடைவு கொடுக்காத
தாரெழுத்துக் கோலங்கள், தளராத கெளன்சிலர்கள்,

‘இந்தத்தரம் நல்லமழை, இருந்தாலும் இருக்கட்டும்,
சுந்தரத்தைப் பாத்துடுப்பா! துட்டுகொடுத்(து) ஒழிச்சுடலாம்,

பாலாறு தண்ணிக்குப் பஞ்சத்தை ஏற்படுத்திக்
கோளாறு பண்ணாமல் கொஞ்சம்நீ பாத்துடப்பா ‘

என்றுபல வகையாக ,எதிரடுக்கு மாடியிலே
நின்றுபல குரல்கிளம்பும் நிமி ‘ங்கள் கரைந்தோடும்.

‘ஏந்தாச்சா ‘ என்றபடி என்னறைக்குள் காபியுடன்
பாந்தமுடன் வருகின்ற பத்மாவதி யம்மா(பா)ளின் –

அத்தாங்க,( ?) நம்மாத்து, அடடாவோ நம்மூட்டு
வித்தாரக் குலதெய்வம், மேலிடமாம் ‘நம்மேடம் ‘ –

குரல்கொடுக்க என்தலையோ கொஞ்சமட்டும் அசைந்தாடும்
விரல்நுனியோ எப்போதும் விசைப்பலகை மேய்ந்தபடி….

Series Navigation

அரிகிருட்டிணன்

அரிகிருட்டிணன்