கிழிந்து கிடக்கும் வானம் அல்ல நீ.

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

ருத்ரா


சாக்கடை நதிகளின்
பிம்பங்களிலும்
தாஜ்மஹால்கள்.
கூவங்களின்
வண்டல் எடுத்து
வார்த்த
வறுமைக்கோட்டுச்
சித்திரங்களிலும்
ஜிகினா ஒட்டிய
காதல் முத்தங்கள்.
பார்க்கும் இடங்களில்
எல்லாம்
எச்சில் துப்புவது போல்
எகிறிப்பாய்ந்து விழும்
சாராய நொதிப்புகளின்
‘கானா ‘க்காவியங்கள்.

காதில் செருகிய
துண்டு பீடிகளின்
புகையிலைக்
கனவுகளில் கூட
காதல் ‘டூயட்டு ‘களின்
சொாித்தவளையாட்டங்கள்.
ஜ ‘ன்ஸ்களிலும்
சல்வார்கமீஸ்களிலும்
புடைத்த
கனவு மாமிசங்கள்.

பழுப்பு சர்க்கரை தடவிய
நரம்பு வாத்தியங்களுக்கும்
‘ட்ரம் ‘ கள் எனப்படும்
குட்டி பூகம்ப பிசாசுகளுக்கும்
‘பால் ‘ புகட்டும்
பாடல்களின்
ஃப்ராய்டிசக் காக்காய் வலிப்புகள்..
கத்தி சொருகி
எழுத்துக்களின் படுகொலையில்
அாிதார சதை பிய்ந்து கிடக்கும்
புதுக்கவிதைச் சடலங்கள்..

காதலனை
பார்க்கமுடியவில்லையே..என்று
கையைக் கீறிக்கொள்ளும்
காதலிகள்.
காதலிக்காக
தன் நுரையீரலை
அறுத்து வைத்துக்கெண்டு
‘என் சுவாசக்காற்றே
என் சுவாசக்காற்றே ‘..என்று
புலம்பும் காதலன்கள்.

காதல் நிறைவேற
தீவிரமாய்
என்ன வேண்டுமானாலும்
செய்து காட்டலாம்..என்ற
தீப்பிடித்த நெஞ்சத்தோடு
பச்சையாய் ஒரு புழுவை
விழுங்கி வித்தை காட்டும்
காதலிகள்.

இவையெல்லாம் கூட
துப்பாக்கிகள் ஏந்தாத
தீவிரவாதம் தான்.
இந்த தீவிரவாதத்துக்கு
தீனியாகி
தீப்பிடித்துப் போகாதீர்
அன்பான இளைஞர்களே!

காதல் எனும்
மதவெறி பிடித்த
‘ஸ்கிஸோஃபெர்னிய ‘
இளம்பிஞ்சுகளே !..அதன்
போதை சுற்றிய
‘ஹைக்கூ ‘க்களின்
கூட்டுப்புழுக்களாய்
பூட்டிக்கிடந்தது போதும்.

சினிமாக் கசாப்பில்
இந்த இருபத்தொன்றாம்
நூற்றாண்டை
கொத்துக்கறி போடும்
கோரங்களின்
நிழல் ஆட்டங்கள்…இது.

இது என்ன கர்ப்பம் ?
கல்லறையைக் கீறி
அந்த மரண தாகத்தை
ஜனிக்க வைக்கும்
சிசோியன் சாகசம்… ?
‘ஃப்ராங்கெஸ்டான் ‘
பிண உருவங்களில்
துளிர்க்கும் விடியல்கள் தேடும்
யுகப்பிஞ்சுகள்..

வசூல் வேட்டையின்
விளையாட்டுக்கு
இந்தக் காட்டுத்தீயில்
சிக்ரெட்
பற்ற வைத்துக் கொள்ளும்
கோடம்பாக்கத்து
ஊளை நாிகள்…

இந்திய இளைஞனே!
ஒரு மாறுதலுக்காகவாவது
உன் காதலியை
இப்படி உருவகித்துக்கொள்ளேன்.
பெளதிக விஞ்ஞானத்தில்
ஒரு நோபல் பாிசு
ஏன் உன் அழகிய
காதலியாக இருக்கக்கூடாது ?

‘நியூட்ாினோ ‘வை
விஞ்ஞானிகள் இன்னும்
பிடிக்க முடியவில்லையாமே.
அந்தக் காதலியின் கைப்பிடிக்க
நீ ஏன் முயற்சி செய்யக்கூடாது ?

உன் காதலின்
நிச்சயமற்ற தன்மைக்குள்
விழுந்து தாடிவளர்த்து
சிவப்பு மதுவுக்குள்
கரைந்து போவதற்கு முன்
கொஞ்சம் யோசி.
இந்த ‘மின்னணு ‘
துகளா ?ஆற்றலா ?

ஒன்று நிச்சயமானால்
இன்னொன்று நிச்சயமில்லை..என்று
‘ நிச்சயமற்ற தன்மை ‘ எனும்
ஒரு கோட்பாட்டைக் கண்டுபிடித்த
‘ஹெய்ஸன்பர்க்கின் ‘ கணக்கீட்டுக்குள்
புகுந்து பாரேன்.

‘ நிச்சயமாய் ‘ அங்கு
உனக்கொரு காதலி காத்திருக்கிறாள்.
கூறு போட்டுக்கொண்டே வந்தால்
இந்த பிரபஞ்சப்பண்டம்
ஒரு ‘ப்ளாங்க்ஸ் மாறிலி ‘யாய்த்தான்
முடியும்..என்று
வைத்திருக்கிறார்களே!
உன் வானவில்
சாகஸத்தை வைத்துக்கொண்டு
அந்த ‘மேக்ஸ் ப்ளாங்க் ‘ நம்பாின்
கணக்கிற்குள்..ஒரு
கணை தொடுத்துப்பாரேன்.
அதற்குள்
கண்சிமிட்டிக்கொண்டிருக்கிறாள்
உன் காதலி.

புவி ஈர்ப்பு விசையையே
புல்லாிக்க வைத்த
ஆல்பர்ட் ஐன்ஸ்டானும்….
அவரைத்தொடர்ந்து
பிரபஞ்சப்பிழம்புக்குள்
தனிமைப் பட்டுப்போன
சிங்குலாாிடி எனும்
ஒரு ஒற்றைப்புள்ளியில்
ஒடுங்கிக்கிடக்கும்
‘ப்ளாக் ஹோலை ‘ தனது
கணித சமன்பாடுகளுக்குள்
பிரசவிக்க வைத்த
டாக்டர் பென்ரோஸும்….
அவரோடு
கணிப்பொறி பொருத்திய
சக்கரநாற்காலியின்.. ஒரு
சக்கரவர்த்தியாய்
‘கருங்குழி ‘ கணக்கியலின் மூலம்
அண்டவெளியையே தன்
அருமைப் பொமரேனியனாய்
ஆக்கி விளையாடிக்கொண்டிருக்கும்
‘ஸ்டாஃபன் ஹாக்கிங்கும் ‘….
நடந்து சென்ற தடங்களை
உன் மூளைச்செதில்களால்
கொஞ்சம் தடவிப்பாரேன்.

தாற்காலிகமாய்
அந்த சுவடுகளை
உன் காதல் கோட்டைகளாய்
கொஞ்சம் வாடகைக்கு எடுத்துக்கொள்ளேன்
அதில் ஒளிந்திருக்கும்..உன்
விஞ்ஞானக்காதலியைக்
கண்டுபிடியேன்.

உன் காதலியின் கண்களில் தொியும்
ஆழத்தின் கணிதத்தை
சூத்திரப்படுத்திக்கொண்டு
சுருண்டு கிடக்கிறாயே.
‘ஃபெர்மேட்ஸ் தியரம் ‘ எனும்
முதன்மை எண்கள் பற்றிய தேற்றம்
முழுமையடையாமலேயே இன்னும்
மூலையில் கிடக்கிறதே.
மூளியான அந்த எண்களுக்குள்
மூண்டு கிடக்கும்
அந்த கணிதச்சுடர் வெளிச்சத்தை
எங்களுக்கு காட்டிவிட
சூளுரைத்துக்கொள்.

காதலிக்கு
காற்றில் ஏறி
அந்த விண்ணை நீ சாட வேண்டாம்.
அந்த ‘ஃபெர்மேட்ஸ் ‘
கனவு எண்ணை கண்டு பிடி.
அதற்குள் அடைந்திருக்கிறாள்
உன் அருமைக்காதலி.

ஓ ! நிழற்சிற்பிகளே !
சினிமா எனும்
வெட்டாிவாள்கொண்டு
சிற்பம் செதுக்க புறப்பட்டவர்களே !
ஒளியை ஒளித்துவைத்து
காதல் மை பூசி
இருட்டின் இதிகாசம்
புனைபவர்களே!

இளைஞர்களுக்குள்ளே
‘சூன்யமாய்… வர்ணமாய் ‘
தீவிரமாய்
ஒரு வெறிவளர்த்து
ஹேலூசினேஷன் எனும்
அவர்களின்
‘உரு வெளி மயக்கத்துள் ‘
அல்லவா
உங்கள் உண்டியல்கள்
நிரம்புகின்றன.

காதல் எனும்
உடுக்கையடிக்கும்
கோடாங்கிகளே !
இந்த ‘பட்டாம் ‘பூச்சிகளை
விட்டு விடுங்கள்.
பிரபஞ்சமாய் விாியும்
இந்த ஒளி விருட்சங்களை
சுடிதார்களின்
பீங்கான் தொட்டிகளுக்குள்
சுருக்கி மடக்கிய
‘போன்சாய் ‘ மரங்களாய்
ஆக்கிவிடாதீர்கள் !

இளமையின் உதயமே !
சினிமா என்னும்
உழக்கில் அல்ல..
உன் கிழக்கு மேற்கு.
வயதுகள்
உணர்ச்சியில் கொம்பு
முளைத்து
காண்டாமிருகமாய்
உன் மீது ஏறி மிதித்து
நடந்து போவதை
நீ அனுமதிக்கலாமா ?
ஈசல் சிறகுகளையும்
பட்டாம்பூச்சி சிறகுகளையும்
பிய்த்து தின்கின்ற
கனவுப் பைசாசங்கள்
உன் கண்களில்
கூடு கட்டியது போதும்.
இமைவிளிம்புகளில்
படுத்துக்கிடக்கும்
வைகறையை
எப்போது
வசப்படுத்தப் போகிறாய் ?

இளைய யுகமே !
கிழிந்து கிடக்கும்
வானம் அல்ல நீ !

Series Navigation

ருத்ரா

ருத்ரா