உந்தன் பின்னால்…

This entry is part of 16 in the series 20011104_Issue

கு.முனியசாமி


எனக்கும் உனக்கும்
ஏழரை வருட இடைவெளி…

நான் பிறந்தவுடன்
நலிவடைந்த கோள்கள் எல்லாம்
நீ பிறந்தவுடன்
நிமிர்ந்து நின்றதனால்
அப்பாவுக்குப் பதவி உயர்வு
அப்பார்ட்மெண்ட் வாங்கும் வசதி…

அமுதா ராசியான பொண்ணு
ஆனந்த் போலில்லை
படிப்பிலும் படுசுட்டி
அம்மாவின் அறிமுகம்…

பதினேழு வயதில் நான்
கல்லூரி செல்ல
சைக்கிள் வாங்கித்தர
மறுத்த அப்பாவுக்கு –

பதிமூனு வயதில் நீ
ஸ்கூட்டி ஓட்டி
ஸ்கூலுக்கு போவதைப்
பார்ப்பதில் பரவசம்…

அமுதா கேட்டு,
இல்லை என்று சொன்னதே
இல்லை என்று சொல்வதில்
அம்மா வுக்குப் பெருமை…

உன்னைப் புகழும்
ஒவ்வொரு முறையும்
என்னை இகழ
இருவரும் மறந்த தில்லை…

இருந்தாலும்,
எனக்குத் தெரியும்
எவ்வளவு நேசம்
என்மீது உனக்கென்று…

இன்று,
இருபது வயதில்
என்னையே அதிசயிக்கும்
எழில்மிகு புதுமை…

எல்லாமே நீயென்று
இருந்த இருவருக்கும்
எவரையோ நீ
விரும்புகிராய் என்ற போழ்து…

நீ வளர்த்த லட்சணம் – அப்பா
நீங்கள் கொடுத்த செல்லம் – அம்மா
முதன்முதலாய் உன்விசயத்தில்
முறன்பாடுகள்…

மேலும்,
உன்னை விரும்பியவன்
எந்தன் நண்பன் என்ற போழ்து
இன்னும் கொஞ்சம்..
உதவாக் கரையின்
உருப்படாத நட்பு..
இப்போது கூட
என்னைப் புகழ்வதில்
இவர்கள் அவர்கள்தான்…

வருகிறது கோபம் – அம்மாவுக்கு
வலிக்கிறது இதயம்- அப்பாவுக்கு
தாயே உன்னிடம்
தாழிப் பிச்சை…

முடிகிற கதைக்கு
முன்னுறை வேண்டி
தொடங்குமுன் கவிதையைத்
தூக்கிட வேண்டுமாம்…

நமக்கு,
அண்ணையும் வேண்டும்
தந்தையும் வேண்டும்
அவர்கள் நம்மை
அறிதலும் வேண்டும்…

ஒன்றை இழந்துதான்
ஒன்று கிடைக்கும் என்றில்லை
நன்றும் தீதும் எதிலும் உண்டு
நல்லவர் கெட்டவர் எங்கும் உண்டு…

சிந்தனை செய்து
தெளிவுறச் சொன்னால்
நன்றெனத் தெரியும் நம்மையும் புரிவர்
இன்றைய தேவை புரிதல் ஒன்றுதான்…

புரிந்திடும் மட்டும் பொருத்திடு பெண்ணே
புவியுள்ள வரைக்கும் புகழும் கண்ணே

அதுவரை,
அண்ணன் இருப்பேன்
உந்தன் பின்னால்…
——————

Series Navigation