அர்த்தங்கள்

This entry is part of 18 in the series 20011022_Issue

ஸ்ரீனி.


கிழிசலற்ற நீல வானத்தின்
ஒரு முனையில் துவங்கி
மறுமுனையை அடைந்துவிட்ட
மஞ்சள் மாவீரனின்
பொன்னிற ஒளி
இதமாய் முதுகுத்தண்டில் பதியும்
மெலிதான காற்று வீசும்
சுகமான மாலைப்பொழுது.

மரங்களின் ஊடே இருந்து
வெளிப்படும் பறவைகளின்
கூக்குறல்,
என்றும் போல் இன்றும்
தெளிவாய் கேட்டது.
ஏற்ற இறக்கத்தோடு
ஏதோ சொல்ல நினைக்கும்
இவற்றின் சப்தம் என்றும்
நமக்கு விளங்காத பாஷை !

‘நான் மேலே இருக்கிறேன் ‘
‘என்னால் பறக்க முடியுமே ! ‘
‘என்னை கொஞ்சம் பாரேன் ‘
‘சலசலத்து ஓடும் ஆற்றின் அடுத்த பக்கத்தில்தான் என் வீடு ‘

நீ கூவிய கூவலுக்கு
எது சாியான மொழிபெயர்ப்பு ?

மொழியால் வேறுபட்டாலும்
நாங்கள் உருவத்தால், உணர்வுகளால்
ஒன்றுபட்டு நிற்கிறோம்..
ஆனால் உங்களுக்குள்தான் எத்தனை வேறுபாடுகள் !
பறவைகள், விலங்குகள், இன்னும் பலப்பல..
உங்கள் மூளைகளை அளந்துவிட்டாலும்
அதன் முறைகள் இன்றும்
விளங்காது போக,
எங்கள் அறிவிற்க்கெட்டாததை
ஐந்தறிவென பாகுபடுத்தும்
எங்களது செயல்களை கண்டு
சிாிக்கிறாய் போலும் !

நீ கூவிய கூவலுக்கு
இதுவோ சாியான மொழிபெயர்ப்பு ?

உலகிற்கும் வயதாகிறது
வேற்று கிரகங்களில் மனிதர்களை தேடுவதைவிட்டு
உங்களுடன் உரையாட
என்றைக்கு எங்களுக்கு உறைக்கப்போகிறதோ ?

என்றேனும் உன்னுடன்
நிஜமாய் பேசிவிடத் துடிக்கிறேன்..
விளங்காத சப்தங்களை
அர்த்தங்கள் ஆக்குவாயா ?

Series Navigation