மனசாட்சி

This entry is part of 26 in the series 20011015_Issue

ருத்ரா


கதவைத் திறந்துகொண்டு வாயேன்.
பக்கத்தில் வந்து உட்கார்.
வார்த்தைகளுக்குள்
சுருண்டு கொண்டு விடாதே.
கிணற்றுக்குள்ளிருந்து
பேசுகிறாய்.
தவளைகளின் சள சளப்புகளில்
உனக்கு
எழுபத்திரெண்டு மேளகர்த்தாக்கள்.
உன் சிலுவைகளுக்கு
அடுத்தவன் முதுகை
தயார் செய்வதற்கு
இத்தனை வாணவேடிக்கைகளா ?
கோரைப்பல்லாக
குத்திக்கொண்டே இருக்காதே.
வா வந்து உட்கார்.
உன்னை நான் பார்க்கட்டும்.
உடுக்கை அடித்துக்கொண்டே
அதிர்வு எண்களை
அதிகப் படுத்துகிறாய்.
அதிகமாய்ப் படுத்தாதே.
பாதரசக்குறியீடுகளில்
பல்லிளிக்கிறது
என் இதயம்.
இந்த ரத்த அழுத்தங்களிலா
உன் கல்வெட்டுகள் ?
இரும்பு சம்மட்டிகளைக்கொண்டு
கபாலங்களை நொறுக்கி விட்டு
மரச்சுத்தியலைத் தட்டி
ஆர்டர் ஆர்டர் என்கிறாய்.
சிதைகள் அடுக்கும் ஒத்திகையின்
உன் சித்திரவேலைப்பாடுகளே
இங்கு சித்திரவதைகள்.
முற்றுப்புள்ளியாய்
நான்
மண்ணில் விழும்போது
அந்த விதைக்குள்
விருட்சமாய் படுத்திருந்த நீ
இப்போது
என் படுக்கை அருகே வந்து
உன் ராட்சச பூங்கிளைகளை
அசைத்து காட்டு.
நான் எடுத்தது என்ன ?
நான் தொலைத்தது என்ன ?
வைக்கோல் போாில் விழுந்து விட்ட
ஊசி அது.
தேடிக்கொண்டிருக்கிறேன்.
ஆழத்தில் கிடக்கும்
அந்த காதல் கீற்றுகளை
அந்த ஊற்றுக்கண்களை
இன்னும் தேடிக்கெண்டிருக்கிறேன்.
வாழ்க்கைக் கோப்பையின்
அடியில் உலர்ந்து கிடக்கும்
அந்த சொட்டுகளுக்கு
தாகம் எடுத்துக்கிடக்கின்றேன்.
எத்தனையோ தடவை
என் முதுகில் தட்டியிருக்கிறாய்.
என் நெஞ்சைப் பிசைந்திருக்கிறாய்.
இப்போதும்
என் நரம்புகளை மீட்ட வந்திருக்கிறாய்.
என்ன சொல்லப்போகிறாய் ?
உன் ‘கருட புராணங்களில் ‘
இந்த கோழிக்குஞ்சுகள் இரையாகி
இனி காணாமல் போகட்டும்.
வா.
உன்னை நான் பார்க்கவேண்டும்.
இப்படியே
இன்னும் எத்தனை
கர்ப்பப் பைகளுக்குள் புகுந்து
பூகம்பங்களை
கிளப்பிக்கொண்டிருக்கப்போகிறாய் ?
போதும்.
என்னோடு வந்து விடு…
டாக்டர் சிாிஞ்சை நீட்டுகிறார்.
வா வந்து உட்கார்.
என்னருகில் உட்கார்.

Series Navigation