பாதச் சுவடுகள்

This entry is part of 26 in the series 20011015_Issue

ஆங்கில மூலம்: யாரோ – தமிழில்: வெ. அனந்த நாராயணன்


அது ஒரு அற்புதமான கனவு
தன்னந்தனியனாய்
அக் கடற்கரை மணலில்
வெகு தூரம் நடந்த பின்
திரும்பிப் பார்க்கிறேன்
எனது பாதச் சுவடுகள்
மிக நீண்ட பாதை
போட்டிருந்தன
ஜனன காலத்திலிருந்து நான்
நடந்து வந்த பாதையது
என் வாழ்க்கைச் சாிதம்
அங்கம் விடாமல்
மெளனக் காட்சியாய்
அச் சுவடுகளில் தொிந்தது
ஓ! இதென்ன!
என் சுவடுகளினருகே
யாருடையவை இம்
மற்றொரு ஜோடிச் சுவடுகள் ?
உடனே எனக்குப்
புாிந்தும் போயிற்று!
புல்லாித்தது…..
ஆஹா! என்னோடு
இப் பயணத்தில்
என் தெய்வமுமா
உடன் வந்திருக்கிறது ?
நான் பாக்கியசாலிதான்….
ஆனால், ஆனால்
நடு நடுவே ஏன்
ஒரு ஜோடி மட்டும் ?
அதுவும்
என் வாழ்க்கையின் மிகவும்
சோதனையான
காலங்களின் போது!
எனக்கு
ஏமாற்றம் தாங்கவில்லை
தேவா!
இவ்வளவுதான் உன் கருணையா ?
உன்னுதவிக்காக நான்
கெஞ்சிக் கரைந்த போதெல்லாம்
கைவிட்டு விட்டாயே என்னை!
கூக்குரலிட்டேன் நான்….
அசாீாியாய்ப் பதில் கேட்டது —
அந்த ஒற்றை ஜோடிச் சுவடுகள்
உன்னுடையவையல்ல நண்பா
என்னுடையவை!
நடக்கவியலாத உன்னை நான்
சுமந்து வந்த சுவடுகள்!

***

Series Navigation